கருத்தாய் போதிக்கப்பட்ட பிள்ளைகள்

கருத்தாய் போதிக்கப்பட்ட பிள்ளைகள்

நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. – (உபாகமம் 6:7-8).

சமீபத்தில் ஒன்பதாவது படிக்கும் மாணவன் தன் டீச்சரை கொன்றது நம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். என்ன விந்தை இது, பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு ஏன் இந்த மாதிரி ஒரு பழிவாங்கும் எண்ணம் என்று நாம் நினைக்கலாம்.

.

நல்ல கிறிஸ்தவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் தங்களுடைய

கணவனாகவோ, மனைவியாகவோ வேறு மதத்தை சேர்ந்த பிள்ளைகளை

தேர்ந்தெடுக்கலாம். இது நாம் சொல்லி செய்வதில்லை. பிள்ளைகளாக

தெரிந்து கொள்வது.

.

சில பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல், கடைகளிலோ, வேறு

இடங்களிலோ சென்று திருடலாம், பெற்றோர் நல்ல பெற்றோராக

இருப்பார்கள், ஆனால் பிள்ளைகளோ இந்த மாதிரி குணத்தை

உடையவர்களாக, பெற்றோருக்கு தெரியாமல், காரியங்களை

செய்கிறவர்களாக இருப்பார்கள்.

.

ஏன் இப்படி நாம் விரும்பும் வண்ணம் நம் பிள்ளைகள் இல்லாமல், வேறு

விதமாக இருக்கிறார்கள்? நாம் நம் பிள்ளைகள் இப்படி இருக்க வேண்டும்

என்று ஒரு நாளும் நினைப்பதில்லையே, பின் ஏன் இப்படி மாறுகிறார்கள்?

.

பெற்றோருக்கு முதலாவது தெரிய வேண்டிய காரியம், பிள்ளைகள் தங்கள்

பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கிறார்கள். சிறு

பிள்ளையிடம் நீ என்னவாக வேண்டுமென்று விரும்புகிறாய் என்று

கேட்டால், என் தகப்பனை போல நான் ஒரு கம்பியூட்டர் ஆளாக வேண்டும்

என்று கூறுவார்கள். அல்லது, என் அம்மாவை போல நான் ஒரு டீச்சர் ஆக

வேண்டும் என்று கூறுவார்கள். ஆகவே நம் பிள்ளைகள் நாம் என்ன

செய்கிறோம் என்பதை உற்று கவனிக்கிறவர்களாக இருக்கிறார்கள்

என்பதை மறந்து போக கூடாது.

.

நம் பிள்ளைகளுக்கு நாம் சிறுவயதிலிருந்தே கர்த்தரை குறித்த வசனங்களை,

அவர் மேல் அன்பு வைக்கும்படியாக சொல்லி தர வேண்டும்.

‘நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன்

வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும்,

படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும்

அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல்

அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக’ என்று தேவன் நமக்கு

போதிக்கிறார். எவைகளை போதிக்க வேண்டும்? ‘நீ உன் தேவனாகிய

கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு

ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள்

உன் இருதயத்தில் இருக்கக்கடவது’ (வசனம் 5,6). ஆம், தேவனை முழு

இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க

வேண்டும் என்பதையே நாம் நம் பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். அதை அடையாளமாக நம் கைகளில் அணிந்து, அதை நம் பிள்ளைகளுக்கு

இடைவிடாமல் சொல்லி தர வேண்டும். ‘அவைகளை உன் வீட்டு

நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக’ (வசனம் 9)

என்றும் போதிக்கிறார். அதாவது பிள்ளைகள் எந்த நேரத்தில் வீட்டில் வந்து

பார்த்தாலும், இந்த வசனங்கள் அவர்களின் கண்களுக்கு தெரியும்போது,

அவர்களுடைய இருதயத்தில் அது பதிந்து விடும். பின் அவர்கள் உலக

காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

.

‘அந்நிய நுகத்தோடு அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக’

என்ற வசனத்தை (2கொரிந்தியர் 6:14-16) ஒரு குறிப்பிட்ட

வயதாகும்போதே பிள்ளைகளுக்கு நாம் போதித்து பழக்க வேண்டும்.

கிறிஸ்தவ பிள்ளைகள் மற்ற அந்நிய மதத்தினரோடு ஒரு குறிப்பிட்ட

அளவிற்கு மேலாக பழகக் கூடாது. ஒரு முறை அவர்கள் அளவிற்கு மேல்

பழக ஆரம்பித்து விட்டால், பின் என்ன சொன்னாலும், எத்தனை

உதாரணங்களை எடுத்து காண்பித்தாலும், அவர்களாகவே பட்டாலொழிய

அதை அவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ஐயோ என் பிள்ளையை நாம்

இப்படி வளர்க்கவில்லையே, பின் ஏன் இப்படி போனான், இப்படி போனாள்

என்று பின்னால் வருந்த வேண்டியதில்லையே!

.

எந்த பிள்ளைக்கும், திருடுவதற்கோ, கொலை செய்வதற்கோ எந்த

பெற்றோரும் கற்று தருவதில்லை. ஆனால் இந்த குணங்களை அவர்கள்

தானாகவே கற்று கொள்கிறார்கள். எப்படி? சினிமாக்களிலிருந்து! அவர்கள்

பார்க்கிற கம்பியூட்டர் விளையாட்டுகளிலிருந்து! நாம் வேலை முடிந்து

களைப்பாக வரும்போது பிள்ளைகள் என்ன பார்க்கிறார்கள், என்ன

விளையாடுகிறார்கள் என்று கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் நாம்

பார்ப்பதில்லை என்பதை வைத்து, தங்களுக்கு விருப்பமான காரியங்களை

பார்க்கிறார்கள், செய்கிறார்கள் என்பதை நாம் மறக்க கூடாது.

.

ஒரு வீட்டில் கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்கு போகிறவர்கள்,

வாலிப பிள்ளை வீட்டில் தனியாக இருக்கும்போது, தேவையற்ற

படங்களையும், காரியங்களையும் இன்டாநெட்டில் பார்த்து கெட்டு

போகிறான். வெளியே பார்ப்பதற்கு மிகவும் நல்ல பையன், ஆனால்

இருதயத்திலோ எல்லாவிதமாக அசுத்த எண்ணங்களும்

ஓடிக்கொண்டிருக்கிறது. அது எப்போது வெளியே வரலாம் என்று தருணம்

பார்த்து கொண்டு, தருணம் கிடைத்த வேளையில் வெளிவந்து, பாவத்தை

செய்ய வைக்கிறது. ஆகவே பெற்றோர் இருவரும் வேலைக்கு

செல்வார்களானால், வீட்டில் பாவத்தை தூண்டும் எந்த காரியத்தையும்

பிள்ளைகள் செய்வதற்கு ஏதுவாக விட்டு விட்டு போக கூடாது. ஒன்று

அதை பூட்டி வைக்க வேண்டும், அல்லது அவற்றை வாங்கவே கூடாது.

அல்லது பிள்ளைகளை வேறு காரியத்தில் ஈடுபடுத்தி, பாவ

காரியங்களுக்குள் ஈடுபடாத வண்ணம் செய்ய வேண்டும்.

.

‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்’ (சங்கீதம் 127:3) என்று வேதம்

கூறுகிறது. அந்த சுதந்திரத்தை நாம் பேணி காத்து, திரும்பவும் பத்திரமாக

தேவனுடைய கரத்தில் கொடுக்க வேண்டும். பெற்றோராயிருக்கிற

ஒவ்வொருவரின் கடமையும் அதுவே.

எல்லா காரியங்களையும் நாம் செய்து, ஜெபிக்காமல் போனால் அதனால்

எந்த பிரயோஜனமும் இல்லை. ஆகவே நாம் எல்லாவற்றிற்கும் மேலாக,

ஒவ்வொரு நாளும் இந்த பிள்ளைகளை வளர்ப்பதற்கு எங்களுக்கு

ஞானத்தை தாரும் என்று கர்த்தருடைய பாதத்தில் பெற்றோர்

ஜெபிப்பதுடன், அவருடைய பாதுகாவல் பிள்ளைகளை மூடி கொள்ளும்படி

அன்றாடம் அவரிடம் மன்றாட வேண்டும். அவருடைய இரத்த

கோட்டைக்குள்ளாக பிள்ளைகளை மூடி காத்து கொள்ளும்படியாகவும்,

கெட்ட நண்பர்களுக்கும், கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் எங்கள்

பிள்ளைகளை விலக்கி காத்து கொள்ளும் என்று ஜெபிக்க வேண்டும்.

சிறுவயதிலிருந்தே இந்த ஜெபத்தை ஏறெடுக்கலாம்.

.

கர்த்தருக்கு பயப்படும் மனிதனின் மனைவி வீட்டோரங்களில் கனிதரும்

திராட்சைக் கொடியை போல இருப்பாள். அவனது பிள்ளைகள் அவனது

பந்தியை சுற்றிலும் ஒலிவ மர கன்றுகளை போல செழித்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட கர்த்தருக்கு பயப்படும் குடும்பத்தின் ஜெபத்தோடு கூடிய

அரவணைப்பில் வளரும் பிள்ளைகள் குடும்பத்திற்கும், சபைக்கும்,

சமுதாயத்திற்கும் பிரயோஜனமாயிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

ஆமென் அல்லேலூயா!

.

மனைவி கனிதரும் திராட்சை கொடி

பிள்ளைகள் ஒலிவமர கன்றுகள் போல்

இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள்

இடைவிடாமல் ஜெபிப்பார்கள்

.

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்

சீயோன் மலைபோல உறுதியுடன்

அசையாமல் இருப்பார்கள்

ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுத்திருக்கும் சுதந்திரமாகிய பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற ஞானத்தை பெற்றோராகிய ஒவ்வொருவருக்கும் கொடுப்பீராக. பிள்ளைகளுக்கு நாங்கள் உமக்கு பயப்படும் பயத்தையும் உம்மை நேசிக்கும் நேசத்தையும் கருத்தாய் போதித்து வளர்க்க உதவி செய்யும். எங்கள் பிள்ளைகளை கெட்ட நண்பர்களுக்கும், கெட்ட பழக்கங்களுக்கும் விலக்கி காத்து கொள்வீராக. உம்முடைய இரத்த கோட்டைக்குள்ளே வைத்து உம்முடைய கண்ணின் மணியை போல பாதுகாத்தருளும். எந்தவிதத்திலும் உம்மை விட்டு உலக காரியங்களுக்கு தங்களை கொடுத்து விடாதபடி அவர்ளை காத்து கொள்வீராக.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.