அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். – (1 சாமுவேல் 15:22).
ஊழியமானாலும் உலக வேலையானாலும் சரி, இடமாற்றம் என்பது அடிக்கடி நிகழ்வதுண்டு. திடீரென கட்டளையிடப்படும் இந்த மாற்றங்களை நாம் பெரும்பாலும் விரும்புவதில்லை. அவ்விடம் வசதி குறைவாகவோ, சவுகரியம் அற்றதாகவோ இருக்கலாம் என்ற தகவல்களை நாம் அறிய நேரிடும்போது நாம் அங்கு செல்ல விரும்புவதில்லை. அதனால் பல சாக்கு போக்குகளை சொல்ல முற்படுகிறோம். இதே சூழ்நிலை அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரகாம் என்ற ஐயரவர்களுக்கு வந்தது. அன்று கிராம பகுதிக்கு சென்று சுவிசேஷம் அறிவிக்க சென்றிருந்தார். அந்நாட்களில் தொலைபேசி வசதி இல்லாத காரணத்தால் போதகரின் மனைவி ஐயரிடம் ஆளனுப்பி, ‘அதிக வசதி இல்லாத இடம், வேறு இடத்திற்கு மாறுதல் கேட்கவும்’ என்று சொல்லி அனுப்பினார். போதகரிடமிருந்து ஒரே வரியில் பதில் வந்தது. ‘ரோமர் 8:28ஐ வாசி’ என்று. போதகரின் மனைவி வேதத்தை எடுத்து அவ்வசனத்தை வாசித்தார்கள். ‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’ இதை வாசித்தவுடன் ஆண்டவருக்குள் தன்னை புதுப்பித்து கொண்டார்கள். குடும்பமாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்திற்கு சென்றார்கள். ஆம், தங்களது சுய விருப்பங்களையும் ஆசைகளையும பின்னுக்கு தள்ளுபவர்கள் தானே ஊழியர்கள்!
இதே போன்ற ஒரு நிகழ்ச்சி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது. ஆதியாகமம் 12ம் அதிகாரத்தில் அதை காணலாம். ‘கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும் உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ’ என்று சொன்னார். கர்த்தர் ஆபிராமுக்கு சொன்னபடியே அவன் புறப்பட்டு போனான். அவனோடு அவன் மனைவியாகிய சாராயும் சென்றாள். ‘நான் இவ்வளவு வருடமாய் பழகின தேசத்தையும், என் சொந்தக்காரர்களையும், நம் வீட்டையும் விட்டு எப்படி வருவது? புது இடம் எப்படி இருக்குமோ? என்ற பல கேள்விகளை சாராய் ஆபிராமிடம் கேட்டிருக்கலாம். ஆனால் எந்தவித ஸ்ட்ரைக்கும் சாராய் செய்ததாக தெரியவில்லை. ஆசையாய் பேசி பழகிய சொந்தக்காரர்களளையும், பத்திரமாய் பாதுகாத்து வந்த வீட்டு உபயோக பொருட்களையும் விட்டு விட்டு, கையில் வழிக்கு தேவையான உணவையும், ஒரு சில ஆடைகளையும் எடுத்து கொண்டு எங்கு, எப்படி வாழப்போகிறோம் என எதுவும் அறியாதவளாக ஆபிராமின் பின் நடந்தாள்.
இன்று பார்த்த இரண்டு பெண்மணிகளும் கடவுளின், கணவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தனர். தேவனது திட்டம் தங்கள் குடும்பத்தில் நிறைவேற இசைந்து கொடுத்தனர்.
அநேக காரியங்களை விட்டு கொடுக்கவும் தயங்கவில்லை. இவ்வித கீழ்ப்படிதலுக்கு நாம் நம்மை அர்ப்பணிப்போம். கீழ்ப்படிதலிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று மனதார கீழ்ப்படிதல், மற்றொன்று கட்டாயத்திற்காக கீழ்ப்படிதல். மனதார கீழ்ப்படிதல் அன்பினிமித்தம் நிகழும். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தைக்கு மனதார கீழ்ப்படியும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். அன்பினிமித்தம் நடக்கும் அந்த கீழ்ப்படிதலால் மட்டுமே, நாம் விட வேண்டிய காரியங்களை மனப்பூர்வமாய் விட்டுவிட முடியும். அது நம்மை தவறான வழியில் நடத்தும் உயிர் நண்பனாய் இருக்கலாம். நாம் தேவனோடு ஐக்கியம் கொள்வதை தடுக்கும் பிடித்த பொழுதுபோக்காய் இருக்கலாம். அல்லது பிறர் மெச்சும் கௌரவ வாழ்க்கையாகவோ, வேலையாகவோ சகல சவுகரியமும் அடங்கிய வீடாகவோ இருக்கலாம். தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டுமானால் விட்டுவிட வேண்டியவைகளை மனப்பூர்வமாய் விட வேண்டும். அப்படிப்பட்டதான கீழ்ப்படிதலுக்குள்ளாக நாம் நம்மை ஒப்புக்கொடுத்து, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, கீழ்ப்படிதலே எங்கள் வாழ்க்கையில் மேல்படிக்கு செல்வதற்கான வழி என்பதை உணர்ந்து நீர் போதிக்கும் வார்த்தைகளுக்கும், உமக்கும் கீழ்ப்படிய உதவி செய்வீராக. நீர் சொல்லுகிறபடி விட்டுவிட வேண்டிய காரியங்களை நாங்கள் விட்டுவிட்டு, உம்மையே சார்ந்து கொண்டு, கீழ்படிந்து வாழ கிருபை தாரும். கட்டாயமாக அல்ல, மனப்பூர்வமாய் உம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.