சோம்பலை விரட்டுங்கள்

சோம்பலை விரட்டுங்கள்

சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும்; இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?. – (நீதிமொழிகள் 6:9-10).

ஒரு வியாபாரிக்கு ஒரு சோம்பலான மகன் ஒருவன் இருந்தான். சரியான சோம்பேறி. ஒரு வேளை செய்ய மாட்டான். எப்போதும் படுத்தே இருப்பான். தூங்கி எழுந்தால் படுத்த படுக்கையை மடிக்க மாட்டான். அதை கண்ட வியாபாரிக்கு ஒரே துக்கம். இப்படி மகன் இருந்தால் எப்படி தனக்கு பின் வியாபாரத்தை கவனித்து கொள்வான் என்று. ஒரு நாள் அவனை அழைத்து, ‘போய் ஏதாவது வேலை செய்து சம்பாதித்து, சாயங்காலம் பணத்தை கொண்டு வா, இல்லாவிட்டால் உனக்கு இரவு சாப்பாடு இல்லை’ என்று கூறினார். அவன் அழுது கொண்டே தன் தாயிடம் சென்று, தன் தகப்பன் தன்னிடம் சொன்னதை கூறினான். மகனின் கண்களில் கண்ணீர் வருவதை காண மாட்டாத தாய், உடனே ஒரு தங்க காசை அவனிடம் கொடுத்து, ‘சாயங்காலமாக உன் தகப்பனிடம் போய் அதை கொடு’ என்றாள். அப்படியே பகல் முழுவதும் விளையாடி திரிந்து விட்டு, சாயங்காலத்திலே தன் தகப்பனிடம் போய் அந்த தங்க நாணயத்தை அவன் கொடுத்தான். அவன் தந்தை அது எப்படி வந்திருக்கும் என்று யூகித்து அறிந்தவராக, ‘போய் இந்த நாணயத்தை அந்த கிணற்றில் போட்டு விட்டு வா’ என்று கூறினார். உடனே அதை போய் போட்டு விட்டு வந்தான். அவனது தாயை அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த நாளும் அவர் அவனிடம் போய் சம்பாதித்து வராவிட்டால், சோறு இல்லை என்று கூறியதும், அவன் தன் சகோதரியிடம் போய் அழுதான். அவளும் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் இரண்டு ரூபாயை கொடுத்தாள். சாயங்காலம் அதை எடுத்து கொண்டு போய் தகப்பனிடம் கொடுக்க, அவர் அதை ‘கிணற்றில் போட்டு விட்டு வா’ என்று கூற அதையும் தட்டாமல் போய் செய்து விட்டு வந்தான். தகப்பன் அவனுக்கு பணம் கிடைத்ததை தன் யூகத்தில் அறிந்தவராக, அவனுடைய சகோதரியையும் உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அடுத்த நாளும் அவர் அவனிடம் சம்பாதித்து வரும்படி கூறினபோது, அவனுக்கு வேறு வழியில்லாமல், பக்கத்தில் இருந்த சந்தையில் போய் வேலை கிடைக்குமா என்று பார்த்தான். அப்போது ஒரு வியாபாரி அவனிடம் ‘நீ இதை என் வீடு வரை தூக்கி வந்தால் உனக்கு இரண்டு ரூபாய் தருவேன்’ என்று சொல்லி ஒரு மூட்டையை அவனிடம் கொடுக்க, அதை தன் தலையின் மேல் வைத்து, தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அவன் கழுத்தெல்லாம் வலிக்க ஆரம்பித்தது. வேர்த்து கொட்ட ஆரம்பித்தது. காலெல்லாம் வலி. எப்படியோ அதை கொண்டு போய் சேர்த்து, அவர் கொடுத்த இரண்டு ரூபாயை வாங்கி வீடு வந்து சேர்ந்தான். அவனுடைய தகப்பனிடம் அதை கொடுத்த போது, அவர் வழக்கம் போல அதை கிணற்றில் போட்டுவிடு என்று சொல்ல, அவன் கண்கள் கலங்கி, நடுங்கி, தகப்பனிடம், ‘என் உடலெல்லாம் வலிக்கிறது. என் கழுத்து சரியாக நிற்க மாட்டேங்கிறது. இப்படி கஷ்டப்பட்டு நான் சம்பாதித்த பணத்தை கிணற்றில் போட சொல்கிறீர்களே’ என்று கதறினான். அப்போது அவன் தந்தை அவனை அணைத்து கொண்டு, ‘இப்போது உணர்ந்தாயா? கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எவ்வளவு விசேஷித்தது என்பதை?’ என்று அவனிடம் ‘இனி நான் உன்னை நம்பி வியாபாரத்தை விடலாம்’ என்று கூறினார்.

வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான் (நீதிமொழிகள் 22:13) என்று வேதம் கூறுகிறது. சோம்பேறியிடம் ஏதாவது வேலையை சொல்லி, இதை செய்து கொண்டு வா என்றால், அவன் சொல்வானாம், வெளியிலே சிங்கம் இருக்கும் என்று! எந்த தெருவில் சிங்கம் உலாவி கொண்டிருக்கிறது? சோம்பலினிமித்தம் அவன் வெளியே செல்வதற்கு இல்லாத காரணங்களை சொல்லி கொண்டிருக்கிறான்! நீதிமொழிகளில் சாலமோன் ராஜா அநேக காரியங்களை சோம்பேறியை குறித்து எழுதி வைத்துள்ளார். சோம்பேறியின் கைகள் வேலை செய்ய சம்மதிப்பில்லையாம். சந்தோஷமாய் காரும் பங்களாவுமாய் வாழ வேண்டும் என்று நினைத்தாலும், சோம்பலின் நிமித்தம் அது பகல் கனவாக இருக்குமே ஒழிய நிஜமாய் நடக்க வாய்ப்பில்லை!

சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள் (நீதிமொழிகள் 6:6) எறும்பு சுறுசுறுப்பிற்கு பேர் போனது. ஒரு நிமிஷம் ஒரு இடத்தில் இல்லாமல், உணவை தேடி அலைந்து சென்று கொண்டே இருக்கும். அதனிடம் போய் ஞானத்தை கற்று கொள் என்று சோம்பேறிக்கு சாலமோன் ராஜா அறிவுறுத்துகிறார்.

சோம்பல் தூங்கி விழப்பண்ணும் தான். படுக்கையை விட்டு எழுந்திரிக்க விடாதுதான். ஆனால் அப்படியே விட்டு கொண்டிருந்தால், ‘உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயதமணிந்தவனைப்போலவும் வரும்’ என்று வேதம் எச்சரிக்கிறது.

சுறுசுறுப்புள்ளவன் கைகளோ செல்வத்தை உண்டாக்கும், சோம்பலை விரட்டுவோம், எந்த வேலையையும்; அசதியாய் செய்யாமல் ஜாக்கிரதையாய் செய்வோம். கர்த்தர் அதை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

படுத்த பாயை கூட மடிச்சிபோடாம

பாரு வீட்டுக்குள்ள கிடக்கிறான்

அடுத்தவன் பாக்கெட்டை அலசி பார்த்துதான்

வாழ்க்கையை தினமும் நடத்துறான்

இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்

இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்

என்று கையை முடக்கி தூங்கறான்

படைச்ச ஆண்டவர்க்கு அவமானத்தை

கொடுத்து தினமும் தான் வாழுறான்

எறும்பு இதை கண்டு நீயும் மனம் திரும்பு

அட சோம்பேறியே நீ எறும்பினிடம் போய்

புத்தியை கத்துக்கோ

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது என்று வேதத்தில் பார்க்கிறோமே, சோம்பலினிமித்தம், அவனுடைய வயல் நிலமெல்லாம் காஞ்சொறி மூடியிருப்பதை போன்று, எங்கள் சோம்பலினிமித்தம் நாங்கள் பெற வேண்டிய ஆசீர்வாதத்திற்கு நாங்களே தடையாய் இல்லாதபடி, எங்கள் சோம்பலை அப்புறப்படுத்தி, உழைக்கிறவர்களாக, சுறுசுறுப்புள்ளவர்களாக எங்களை மாற்றுவீராக. சுறுசுறுப்புள்ளவன் கை செல்வத்தை உண்டாக்கும் என்ற வசனத்தின்படி, கர்த்தருடைய ராஜ்யத்தில் நாங்கள் செல்வங்களாகிய ஆத்துமாக்களை சேர்க்கும்படியாக சுறுசுறுப்பாய் வேலை செய்ய கிருபை செய்வீராக. உலக காரியங்களிலும் நாங்கள் சுறுசுறுப்பாய் இருப்பதை மற்றவர்கள் கண்டு, எங்களை நம்பி பொறுப்புக்களை தர கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.