தேனிலும் இனிமையே வேதத்தின் வசனமே

தேனிலும் இனிமையே வேதத்தின் வசனமே

..கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. – (சங்கீதம் 19:9-10).

பூக்கள் நிறைந்த அந்த பூஞ்சோலையில் எங்கும் வண்ண வண்ண வண்ணத்து பூச்சிகள், பூக்களின் வாசனை மனரம்மியமாய் இருந்தது. ஒரு சில செடிகளிலுள்ள பூக்களை தேனீக்கள் மொய்த்து கொண்டிருந்தது. ஒரு தேனீ தனது காலில் பூக்களிலுள்ள மகரந்த தூளை சேகரித்தது. மலரின் உட் குழாய்க்குள் சென்று அங்குள்ள அதிகமான தேனை தனக்கும் தன் இனத்திற்கும் எடுத்து சென்றது. அப்படி தேனை சேகரிக்கும் தேனீக்களை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு.

ஒரு தேனீ ஒரு ஸ்பூன் அளவு தேனை சேகரிப்பதற்கு 4200 தடவை மலர்களுக்கு சென்று வருகிறது. ஒரு நாளைக்கு அது ஏறத்தாழ 100 தடவை வெளியே சென்று வருகிறது. ஒரு ஸ்பூன் தேனை சேகரிக்க 400 பூக்களை நாடி செல்கிறது. தேனீ எவ்வளவு சுறுசுறுப்போடு செயல்படுகிறது பாருங்கள். அது தனக்காகவும் தன் இனத்திற்காகவும் தேனை சேகரித்தாலும் அதன் பயனை அதிகம் அனுபவிப்பவர்கள் நாம்தான்.

வேதமும் தெளி தேனிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. சங்கீதக்காரனாகிய தாவீது கூறும்போது, ‘உம்முடைய நியாயங்களாகிய உமது வசனம் தேனிலும், தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது’ என்று கூறுகிறார். அவர் வாழ்ந்த காலத்திலே இனிப்பு அல்லது மதுரம் என்றவுடன் நினைவிற்கு வருவது தேன்தான்.

இப்போது போல விதவித சுவையுள்ள இனிப்பு பண்டங்கள் இருந்திருக்காது. ஆகவே வேதத்தின் மகத்துவத்தை அறிந்து அனுபவித்த தாவீது அதை ஒரு மிக மிக இனிமையான ஒன்றோடு ஒப்பிட எண்ணி இவ்வார்த்தைகளை கூறுகிறார். பூக்களிலுள்ள தேனை தேனீக்கள் சுறுசுறுப்பாய் சேகரிப்பதை போல நாமும் வேத வசனத்தை வாஞ்சையாய் வாசிக்க வேண்டும். செய்த வேலையைத்தான் திரும்ப திரும்ப செய்ய வேண்டியுள்ளது என தேனீ சலிப்பு தட்டி என்றாவது உறங்குவதுண்டோ? இல்லை, ஆனால் நாமோ ஓ, வாசித்த வேதம் தானே என்று சோம்பல்பட்டு, வாசிப்பதில்லை.

ஒருநாள் அதிக அதிகாரங்களை வாசித்து விட்டோமானால் அதில் திருப்தி அடைந்து ஒரு வாரத்திற்கு வேதத்தை திறப்பதேயில்லை. சிலர் சங்கீத புத்தகத்தை மாத்திரம் வாசித்து விட்டு வேதத்தை மூடி விடுகிறார்கள். பழைய ஏற்பாடு போர் அடிக்கிறது என்று சிலர் வாசிப்பதேயில்லை.

வேதம், இன்று அச்சிடப்பட்டு நாளை தூக்கி எறியப்படும் செய்திதாளை போன்றதல்ல. அது 1500 வருடங்களாய் ஆவியானவரின் தொடுதலோடு எழுதப்பட்ட ஜீவனுள்ள வார்த்தைகள் அடங்கிய புத்தகமாகும். ஆயிரக்கணக்கான வருடங்கள் உருண்டோடினாலும் இன்றும் அது மனிதனை உயிர்ப்பிக்கும் வார்த்தைகளால் நிரம்பி இருக்கிறது. ஆகவே தினந்தோறும் வேதத்தை கருத்தாய் வாசியுங்கள். ஏற்ற சமயத்தில் சரியான வசனம் உங்கள் ஞாபகத்திற்கு வந்து உங்களை எச்சரிக்கும், ஆறுதல்படுத்தும்.

வாழ்க்கை பாதையில் இடறும்போதும், பாவம் செய்ய எத்தனிக்கும்போதும், வசனம் உங்களை காப்பாற்றும். எத்தனை ஆவரோடு வேதத்தை வாசிக்கிறோமோ அத்தனை ஆவலோடு தேவனும் நம்மோடு பேசுவார்.

பிரியமானவர்களே, கிறிஸ்தவர்களில் அநேகர் கிரமமாய் வேதத்தை வாசித்து தியானிப்பதில்லை. வேதத்திலிருந்து விளக்கங்களை பெற விரும்பாமல் ஞாயிறு ஆராதனையிலும், பிரசங்கங்களிலிருந்தும் அறிந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறார்கள். இதனால் வேதப்புரட்டுகளில் எளிதாக விழுந்து விடுகின்றனர். ஆனால் நாம் தேனீக்களைப்போல இருப்போம். வேதத்தை நாடி, இணை வசனங்களை தேடி கண்டுபிடித்து, ஜெபத்தொடு வாசித்து ஆவியானவரின் விளக்கத்தை பெற்று அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

தேனீக்கள் போல நாம் தேவனின் தோட்டத்தில்

சுற்றி சுற்றி வந்திடுவோம்

தேவனின் வார்த்தையாம் ஒவ்வொரு பூக்களில்

தேனை உறிஞ்சி உறிஞ்சி மகிழுவோம்

ஜெபம்:

எல்லா நன்மைக்கும் ஊற்று காரணரான எங்கள் நல்ல தெய்வமே, கர்த்தருடைய வேதத்தில் இன்னும் அதிகமாக நாங்கள் வாஞ்சை வைத்து, அதை தினமும் வாசிக்க கிருபை தாரும். நாங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்க கிருபை தாரும். உந்தன் வேதமே எங்கள் விளக்காகவும், எங்களை பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறபடியால் வேதத்தை நாங்கள் தினமும் வாசித்து, உம்மில் வளர கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.