கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். – (பிலிப்பியர் 3:12).
நான்கு தொழிலதிபர்கள் தங்கள் மனைவிகளிடம் ‘வெள்ளிக்கிழமை நாங்கள் வீட்டுக்கு வந்து விடுவோம்’ என்று சொல்லி விட்டு, விமானமேறி, வேறு இடத்திற்கு தொழில் விஷயமாக ஒரு கான்பரன்ஸிற்கு சென்றார்கள். ஆனால் அவர்கள் நினைத்ததை விட அவர்கள் கூட்டம் அதிக நேரம் எடுத்து, அவர்கள் அவசர அவசரமாக காரை பிடித்து, ஏர்போர்ட் செல்ல வேண்டி வந்தது. அவர்கள் வேகமாக அப்படி செல்லும் போது வழியில் ஆப்பிள்களை விற்று கொண்டு இருந்த பெண்ணை தள்ளி விட்டு போக வேண்டி வந்தது. அதினால் அவளுடைய ஆப்பிள்கள் எல்லாம் கீழே சிதறி விழுந்தது. அந்த பெண் அழ ஆரம்பித்தாள். அதை கண்ட தொழிலதிபர்களில் ஒருவர், நின்று, மற்றவர்களிடம் ‘நீங்கள் போங்கள், என் மனைவியிடம் நான அடுத்த விமானத்தில் வருவதாக தெரிவித்து விடுங்கள்’ என்று சொல்லி விட்டு, கீழே விழுந்த ஆப்பிள்களை எடுத்து அவளிடம் கொடுக்க ஆரம்பித்தார். கீழே விழுந்ததினால் சேதமான ஆப்பிள்களை வேறு கூடையிலும், மற்றவற்றை வேறு கூடையிலும் வைத்து, அவளிடம் கொடுத்த போதுதான் அவருக்கு தெரிந்தது, அவள் குருடான பெண் என்று.
அவளிடம் 20 டாலர்களை கொடுத்து, ‘எங்களால் உண்டான சேதத்திற்கு இதை வைத்து கொள்’ என்று சொல்லி விட்டு செல்ல ஆரம்பித்தார். அப்போது அந்த பெண் அவரை கூப்பிட தொடங்கினாள், அவர் அதை கேட்டு திரும்பி வந்த போது, அவள் அவரிடம், ‘ஐயா நீர்தான் இயேசுவா’ என்று கேட்டாள். அதை கேட்டபோது அவர் அப்படியே நின்று விட்டார். அவருடைய உள்ளத்தில் அந்த கேள்வி திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது.
பிரியமானவர்களே, நாம் அவரை போல மாற வேண்டும் என்பது தானே நாம் இந்த உலகத்தில் வாழும்போது நாம் கொண்டிருக்கிற ஆசை. ‘அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்’ – (1யோவான் 2:6). ஆம் அவர் நம்மில் நிலைத்திருந்தால் நாமும் அவர் நடந்ததை போல நடக்க வேண்டும். அவர் நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார் என்று வேதம் நமக்கு கூறுகிறது. நமக்கு தேவையானவைகளை நாம் எப்படியாவது யாரிடமாவது கேட்டு பெற்று கொள்கிறோம். ஆனால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று வரும்போது, அது மிகவும் கஷ்டம், வேறு யாரிடமாவது கேளுங்கள் என்று கைகளை கழுவி விடுகிறோம் அல்லவா? இந்த உலகத்தார் கிறிஸ்துவின் அன்பை அறியாதபடி குருடர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஒரு உதவி செய்யும்போது, அவர்கள் கிறிஸ்துவின் அன்பை ருசி பார்க்கிறார்கள். ஓ, கிறிஸ்தவர்கள் என்றால் அன்பை வெளிப்படுத்துகிறவர்கள், யார் என்று பார்க்காமல் உதவி செய்பவர்கள் என்று கிறிஸ்துவை நம்மில் காண்கிறார்கள்.
ஒரு நாள் நாமும் கூட கிறிஸ்துவை அறியாத குருடர்களாக இருந்தபோது தானே கிறிஸ்துவின் அன்பு நம்மை சந்தித்தது! நாம் அவரை தேடி போகவில்லை. அவரே நம்மை தேடி வந்த தெய்வமாக, நம்மை தேடி வந்து மீட்டெடுத்தாரே!
நாமும் அனுதின வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்துவோம். நம்மால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்வோம். நம்மால் கூடுமானதை மற்றவர்களுக்கு செய்யும்போது, அவர்கள் கிறிஸ்துவை நம்மில் காண்பார்கள். நாம் மற்றவர்களுக்கு நம்மால் இயன்றபோதும் செய்யாமல் போகும்போது, அது மற்றவர்களுக்கு முன்பாக, கிறிஸ்தவன் என்கிறான், இதை கூட செய்ய மாட்டேன் என்கிறானே என்று கிறிஸ்துவின் பெயர்தான் இழிவுபடுத்தப்படும்.
ஓவ்வொரு நாளும் கிறிஸ்துவை நம் வேலையிடத்தில், நம் குடும்பத்தில், நம் சபைகளில், நம் நண்பர்களிடத்தில், நம் தேவை உள்ளவர்களிடத்தில் வெளிப்படுத்துவோம். கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்துவோம் ஆமென் அல்லேலூயா!
தேவ ஆவியில் நடந்த மனிதரெல்லாம்
அக்கினியாய் எழும்பி ஜொலித்ததுப் போல்
என்னை மாற்றுமே என்னை மாற்றுமே
கலங்கரை விளக்காய் என்னை மாற்றுமே
ஆவியில் நடக்கணுமே – தேவ
வார்த்தையில் நிலைக்கணுமே
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும் நாங்கள் எங்கள் கிறிஸ்துவை அவரை அறியாத மக்களின் மத்தியில் வெளிப்படுத்ததக்கதாக, எங்கள் நடக்கை, செயல், சொல் எல்லாவற்றிலும் அவரை வெளிப்படுத்த கிருபை தருவீராக. எங்களால் இயன்ற உதவிகளை தேவையுள்ளோருக்கு செய்யும்படியாக எங்களை உணர்த்தும். தேவ நாமத்தை மகிமைப்படுத்தும் வாழ்வை நாங்கள் வாழ எங்களுக்கு கிருபை தாரும். எங்களை காண்பவர்கள் எங்களில் கிறிஸ்துவை காண கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.