‘இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’. – (மாற்கு 10:30).
ஒரு பெரிய பணக்காரன் இயேசுகிறிஸ்துவிடம் வந்து, ‘நான் நித்திய ஜீவனை சுதந்தரிக்க ஆசைபடுகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டான். அப்பொழுது கர்த்தர், ‘பத்து கற்பனைகளையும் கைகொள்’ என்று கூறினார். அதற்கு அவன், ‘அவற்றை எல்லாம் நான் என் சிறுவயது முதல் கைப்பற்றி வருகிறேன். வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்று கேட்டான். அப்போது இயேசுகிறிஸ்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: ‘உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா’ என்று அன்போடு கூறினார். ஆனால் அவன் பெரிய பணக்காரனாயிருந்தபடியால், அவற்றையும், அந்த பணத்தின் சொகுசு வாழ்க்கையையும் விட்டு விட மனமில்லாமல், துக்கத்தோடு போய் விட்டான். இயேசுகிறிஸ்துவிடம் வந்து துக்கத்தோடு சென்றவன் இவன் ஒருவன் மாத்திரமே!
இதை கவனித்து கொண்டிருந்த அப்போஸ்தலனாகிய பேதுரு, ‘ஐயா, இந்த மனிதன் தன் ஐசுவரியத்தை விட்டு விட்டு வர இவ்வளவு கஷ்டப்படுகிறானே, தன்னுடைய பரலோக வாழ்வையே அதற்காக தியாகம் செய்து விட்டு போகிறானே, எங்களை பாருங்கள், நீர் எங்களை அழைத்தவுடன் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மை பின் தொடர ஆரம்பித்து விட்டோம். எங்கள் மனைவி பிள்ளைகளையும், சொத்தையும், எங்கள் தொழிலாகிய மீன் பிடித்தலையும் கூட விட்டுவிட்டு உம்மை பின்தொடர்ந்து வந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?’ என்று இயேசுகிறிஸ்துவிடம் கேட்டார்.
இன்று அநேக ஊழியக்காரர்கள் தங்கள் சொத்துக்களை விற்று தேவ ஊழியத்திற்கு வந்திருக்கிறார்கள். சிலர் தாங்கள் படித்த கல்வி சான்றிதழ்களை கிழித்துவிட்டு, கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார்கள். சிலர் தங்கள் வீடுகளையும், தங்கள் கார், பங்களா என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கர்த்தருக்காக, கர்த்தர் சொல்லும் இடத்தில் சென்று ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில், பேதுருவை போல ‘இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, எங்களுக்கு என்ன ஐயா கிடைக்கும்’ என்ற கேள்வி இருந்தால், நிச்சயம் அவர்களுக்கும் பதில் உண்டு. பேதுரு இந்த கேள்வியை கேட்டதினால்தான் கர்த்தரிடமிருந்து அருமையான பதில் நமக்கும் கிடைத்தது. ‘அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் டைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று அருமையான பதிலை கூறுகிறார். அது அப்படியே அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாழ்வில் நடந்தது.
என் வாழ்விலும் ஒருமுறை என் மனதில் சத்துருவானவன் சில எண்ணங்களை கொண்டு வந்தான். ‘நீ கர்த்தருக்காக எத்தனையோ காரியங்களை செய்கிறாயே, தியாகங்களை செய்கிறாயே, உன்னை பாராட்டுவாரும், உன்னை போற்றுவாரும் யாரும் இல்லையே, நீ ஏன் இவற்றை செய்ய வேண்டும்?’ என்று எண்ணங்களை மனதில் கொண்டு வந்து கொண்டேயிருந்தான். நான் கர்த்தருக்காக செய்வது சிறிய காரியமாயிருந்தாலும், அவன் என்னிடம் நான் என்னவோ பெரிய காரியங்களை செய்வது போலவும், பெரிய தியாகங்களை செய்தது போலவும் எண்ணத்தில் கொண்டு வந்து, என்னுடன் போராட ஆரம்பித்தான். அது ஒரு பெரிய போராட்டமாகவே இருந்தது. இந்த எண்ணங்களை கொண்டு வந்த அடுத்த நாள், நான் சத்துருவிடம் நேரடியாக, ‘ இதோ பார் சாத்தானே, நான் மற்றவர்கள் புகழ வேண்டும் என்பதற்காகவோ, மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ கர்த்தருடைய ஊழியத்தை செய்யவில்லை. கர்த்தர் மேல் நான் கொண்டிருக்கும் அன்பினால் இவற்றை செய்கிறேன். நான் இந்த ஊழியங்களை செய்ய ஆரம்பிக்கும்போதே, தேவனிடம், என் பெயரோ, புகழோ வேண்டாம் தகப்பனே, உம்முடைய நாமம் மாத்திரம் இவற்றின் மூலம் மகிமைப்பட வேண்டும் என்று கேட்டுத்தான் இந்த ஊழியங்களை ஆரம்பித்தேன். ஆகவே நீ என்னை எந்த எண்ணங்களை கொண்டும் அசைக்க முடியாது, போ உன் அஸ்திராயுதங்களை எடுத்து கொண்டு, வேறு யாரிடமாவது காட்டு, என்னிடம் எதுவும பலிக்காது’ என்று கட்டளையிட்டேன். அன்று சென்றவன்தான், இன்று வரை என்னிடம் வாலாட்ட வரவேயில்லை. வரவும் முடியாது.
நாம் கர்த்தருக்காக எதை இழந்தாலும், கர்த்தர் இந்த உலகத்திலேயே மனைவியை தவிர மற்ற எல்லாவற்றையும் நூறத்தனையாகவும், பரலோக வாழ்விலே நித்திய ஜீவனையும் நமக்கு தருகிறார். நான் இன்று என் வேலையிடத்திலும், குடும்பத்திலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அனுபவிக்கிற ஆசீர்வாதங்கள் தேவன் எத்தனையாய் தம் வார்த்தையில் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி காட்டி கொண்டேயிருக்கின்றன.
கர்த்தருக்காக எதையாவது இழந்திருக்கிறீர்களா? ஊழியக்காரர்களே, உங்கள் சொத்தையும், உங்கள் வீட்டையும், உங்கள் எல்லாவற்றையும் இழந்து கர்த்தர் சொன்ன இடத்தில் ஊழியத்தை நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்களா? கர்த்தர் உங்கள் தியாகத்தையும், நீங்கள் அவர்மேல் கொண்டிருக்கிற அன்பையும் அறிந்திருக்கிறார். நிச்சயமாகவே அவர் நூறத்தனையாக எல்லாவற்றையும் திருப்பி தருவார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கர்த்தருக்காக உண்மையாக வாழ்வோம். அவருடைய நாமம் மகிமைப்படும்படியாக ஜீவிப்போம். நம் பெயர் புகழ் எதுவும் இல்லாமல், அவருடைய நாமம் மாத்திரம் நம்மில் மகிமைப்படும்படியாக வாழ்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!
கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய்
நஷ்டப்பட்டோர் கஷ்டப்பட்டதில்லை
..
உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதிவரை
கல்வாரி தொனிதான் மழைமாரி பொழியும்
நாள் வரை உழைத்திடுவோம்
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, கிறிஸ்துவின் இராஜ்யம் பரவுவதற்காக எத்தனையோ பேர் தங்கள் ஜீவனையும், தங்களுடைய அன்புக்குரியவர்களையும், தங்கள் சொத்து சுகங்களையும் இழந்திருக்கிறார்களே, அவர்களுக்கு ஆறுதலாக தேவன் கொடுத்த அருமையான வாக்குதத்தத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். உமக்கென்று கொடுத்தவர்கள் எதையும் இழக்கவில்லை, கஷ்டப்படுவதில்லை என்ற உற்சாகத்தை கொடுத்து, இன்னும் உமக்கென்று அதிகமாக உழைக்க கிருபை தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.