அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். – (லூக்கா 10:2)
ஒரு அகன்ற பாதையின் இரு பக்கங்களிலும் பயங்கரமான இருண்ட பள்ளம் காணப்பட்டது. அது ஆழமான குழி அல்ல, பாதாளம்! முடிவே இல்லாத நித்தியமான குழி. ஏராளமான பேர் அந்த பாதையில் நடந்து கால் தவறி பாதாளத்தில் ஐயோ என்ற கூக்குரலுடன் விழுகிறார்கள். அவர்களை கூர்ந்து பார்த்தபோது, அவர்களுக்கு கண் இருந்தும் குருடர்களாய் இருக்கிறார்களே! ஐயோ, இவர்களுக்கு சரியான வழியை காட்ட யாருமே இல்லையா என்று நினைக்கும்போது தூரத்திலே ஒரு சிறிய கூட்ட மக்கள் பாடி கொண்டிருந்தனர். அவர்கள் கண்கள் திறந்திருந்தன. ஆனால் அவர்களோ பாதாளத்தில் விழும் இந்த மக்களுக்காக கொஞ்சம் கூட அக்கறை கொண்டதாகவோ, பரிதபித்ததாகவோ, அவர்களை மீட்க முயற்சியும் எடுத்ததாகவோ தெரியவில்லை.
.
ஒரு தாய் தன் மூன்று பிள்ளைகளுடன் அந்த வழியாய் நடந்து வந்தாள்.
அவளது கண்களும் குருடாயிருந்தன. அவள் சறுக்கி அந்த அதால
பாதாளத்திற்குள் அலறி கொண்டு விழுந்தாள். அவளுடைய குழந்தையில்
ஒன்று குழியில் கால் சறுக்கி, ஒரு செடியை பிடித்து கொண்டு நீண்ட நேரம்
தவித்துக் கொண்டிருந்தது. யாரும் அதை காப்பாற்ற வரவில்லை. சிறிது
நேரத்தில் அந்த செடி வேரோடு வந்து விட்டது. அந்த குழந்தை கதறியபடி
பாதாளத்தில் விழுந்தது, அந்த சிறுபிள்ளையின் அழுகை நெஞ்சை
பிளப்பதாய் இருந்தது. இந்த தரிசனத்தை கண்டு, தேவ சத்தத்திற்கு
கீழ்ப்படிந்து, ‘இதோ அடியேன் வருகிறேன்’என்று ஏமிகார்மைக்கேல்
அம்மையார் இந்தியாவிற்கு மிஷனெரியாக வந்தார்கள். டோனாவூர் என்ற
இடத்தில் வல்லமையாய் ஊழியம் செய்து, நட்சத்திர கூட்டம், அநாதை விடுதி
என்றெல்லாம் ஏற்படுத்தி கர்த்தருக்கென்று பாடுபட அவர்களை இந்த
தரிசனமே ஊக்குவித்தது.
.
மிஷனெரிகளின் தந்தை என்றழைக்கப்படும் வில்லியம் கேரி இங்கிலாந்து
தேசத்திலே செருப்பு தைக்கும் தொழிலாளியாய் இருந்து, அப்படியே மரித்து
விட விரும்பாத அவர் கர்த்தருக்கென்று பெரிய காரியங்களை செய்ய
துடித்தார். இந்திய தேச வரைபடத்தை கீழே வைத்து தான் அதின்மேல்
முழங்கால் படியிட்டு, தேம்பி தேம்பி மணி கணக்கில் அழுவாராம்.
‘ஆண்டவரே இந்தியாவை எப்பொழுது சந்திப்பீர்’ என்பதே அவரது
கூக்குரலாய் இருந்தது. மட்டுமல்ல, இந்தியாவிற்கு வந்து வேத புத்தகத்தை
அநேக இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து, கர்த்தருக்கென்று
மகிமையான காரியங்களை செய்து முடித்தார். ‘பெரிய காரியங்களை
கர்த்தரிடமிருந்து எதிர்பார், பெரிய காரியங்களை கர்த்தருக்கென்று செய்து
முடித்து விடு’என்று முழக்கமிட்டார்.
.
வெளி தேசத்திலிருந்து இந்தியாவிற்கு மிஷனெரிகளாய் வந்து சாதனை
படைத்த கோதுமை மணிகள் இன்றும் ஏராளமானோர் உண்டு. ஆனால்
இந்திய தேசத்திலே பிறந்து வளர்ந்த நாம் கர்த்தருக்கென்று என்ன
செய்திருக்கிறோம்? இன்றைக்கும் கோடிக்கணக்கான ஜனங்கள்
அறியாமையினாலும், மூட பழக்கங்களினாலும் பாதாளத்தை நோக்கி மடிந்து
கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று
கர்த்தரிடம் நாம் கதற வேண்டாமா?
.
பாரம்பரியமாகவே வாழ்ந்து நானும் ஒரு கிறிஸ்தவன் என்று வாரந்தோறும்
ஆலயத்திற்கு சென்று வந்து, மற்ற நாட்களில் நமக்காகவே வாழ்ந்து
கொண்டிருக்கிற வாழ்க்கையை விட்டு, கர்த்தருக்கென்று எதையாவது
செய்ய தீர்மானிப்போமா? கடைசி நாட்களில் வாழ்கின்ற நாம் கர்த்தருக்காக
எதையாவது செய்யாவிட்டால், யார் செய்ய முடியும்? அறுப்பு மிகுதியாய்
இருக்கிறது, ஆனால் அறுப்பதற்கு ஆட்கள் கொஞ்சம் பேரே உண்டு! நமக்கு
கிடைக்கும் நேரத்தில், பொருளில், ஜெபிக்க, கொடுக்க, கர்த்தருக்காக சேவை
செய்ய ஒப்புக்கொடுப்போமா?
.
தேவன் தேடி கொண்டிருக்கிறார், அவருடைய கூப்பிடுதலின் சத்தத்தை
கேட்டு, அவருக்கென்று உழைக்க நம்மை ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தருக்காய் சாதிப்போம். நம் தாலந்துகளை, நம் நேரங்களை அவருக்காக
உபயோகிப்போம். அழிந்து போகின்ற ஆத்துமாக்களை கர்த்தரிடம்
திருப்புவோம். ஆமென் அல்லேலூயா!
.
விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ மனிதர் அழிகின்றாரே
..
ஆத்தும இரட்சிப்பு அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவன் யார்
தினமும் அவர் குரல் கேட்கலையோ
ஜெபம்
எங்கள்அன்பின் நேச தகப்பனே, எத்தனையோ வெளி நாட்டவர் எங்கள் தேசத்தில் வந்து, சுவிசேஷத்தை சொல்லி, எத்தனையோ உபத்திரவத்தின் மத்தியிலும், உம்மை எங்களுக்கு காண்பித்து கொடுத்து, கோதுமை மணிகளாய் மறைந்திருக்கிறார்கள் ஐயா, அவர்களுக்காக நாங்கள் உம்மை துதிக்கிறோம். இப்போதும் எங்கள் தேசத்தில் அழிந்து கொண்டிருக்கும் ஆயிரமாயிரமான ஆத்துமாக்களுக்காக நாங்கள் ஜெபிக்க, கொடுக்க, உழைக்க எங்களை அர்ப்பணிக்கிறோம். ஏதாவது ஒரு வகையில் கிறிஸ்துவை அவர்களுக்கு வெளிப்படுத்த எங்களை பயன்படுத்தும். எங்கள் தேச மக்களை இரட்சித்தருளும். நீரே தேவன் என்பதை அறிந்து கொள்ள அவர்கள் மனக்கண்களை திறந்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.