அதற்கு கிதியோன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன். ஒரே மனுஷனை முறியஅடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். – (நியாயாதிபதிகள் 6:15-16).
நான்காவது நூற்றாண்டில் வாழ்ந்த டெலிமாக்கஸ் (Telemachus) என்னும் கிறிஸ்தவர் தனது கிராமத்தில் அதிகமான நேரத்தை ஜெபத்தில் கழித்து, அமைதியான வாழ்க்கையை கர்த்தருக்குள் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் தேவன் அவரிடம் ‘நீ ரோமுக்கு போ’ என்று சொல்வதை கேட்டார். அந்த சத்தத்திற்கு செவிகொடுத்து, ரோமிற்கு நடந்தே செல்ல ஆரம்பித்தார். அநேக நாட்கள் நடந்தபிறகு அவர் அந்த நகரத்தை சென்றடைந்தார். அந்நேரத்தில் அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒரு பெரும் கூட்டம் கொலோசியம் என்னும் ரோம நாட்டின் பெரிய அரங்கத்திற்குள் சென்றது. அவர்களை தொடர்ந்து, அவரும் அவர்களுடன் உள்ளே சென்றார். அந்நாட்டின் மன்னரின் முன் கிளாடியேட்டர்ஸ் (Gladiators) என்பவர்கள் ‘மரிக்கபோகும் நாங்கள் உமக்கு வந்தனம் செய்கிறோம்’; என்று கூறுவதை பார்த்தார். அந்த கிளாடியேட்டர்ஸ் என்பவர்கள், கொலைகுற்றம் செய்தவர்கள், அடிமைகள். அவர்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு மற்றவர் மடியுமட்டும் போராடுவார்கள். சில நேரங்களில் சிங்கம் புலிகளோடும் போராட வேண்டி இருக்கும். அவர்கள் அப்படி போராட ஆரம்பிப்பதை கண்ட டெலிமாக்கஸ் ‘இயேசுவின் நாமத்தில் நிறுத்துங்கள்’ என்று கூச்சலிட்டு சொன்னார்.
அவர்களோ நிறுத்தாமல், விளையாட்டை ஆரம்பிப்பதை கண்ட அவர், அந்த அரங்கத்திற்குள் குதித்தார். ஒரு சிறு உருவம் கிளாடியேட்டர்களின் முன் ஓடி, இயேசுவின நாமத்தில் நிறுத்துங்கள் என்று கூறுவதை பார்த்த கூட்டத்தினர், அது ஏதோ ஜோக் (Joke) என்று நினைத்து சிரிக்க ஆரம்பித்தனர். ஆனால் அது உண்மை என்று அறிந்த போது, அவர்களுக்கு கோபம் வர ஆரம்பித்தது. டேலிமாகக்ஸ் அவர்களோடு நிறுத்துங்க்ள என்று கெஞ்சுவதை கண்ட ஒருவன், அவரை தன்னிடம் இருந்த வாளினால் குத்தினான். அவர் அப்படியே அங்கு தரையில் இரத்தம் பாய சரிந்தார். மற்றவர்கள் அவர்மேல் கல்லெறிய ஆரம்பித்தனர். அப்போதும் அவர் அவர்களிடம் இயேசுவின் நாமத்தில் தயவுசெய்து இந்த சண்டையை நிறுத்துங்கள் என்று கூறியபடியே மரித்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத ஒரு வித்தியாசமான காரியம் நடைபெற்றது. அங்கிருந்த கிளாடியேட்டர்கள் அந்த மரித்த சடலத்தை பார்த்தபடி நின்றிருந்தனர். அந்த கொலோசியம் முழுவதும் அமைதி நிலவியது. அங்கு முதலாவது இருந்த வரிசையில், ஒரு மனிதன் எழுந்து வெளியேற ஆரம்பித்தான். மற்றவர்களும் அவனை பின்தொடர்ந்து வெளியேற ஆரம்பித்தனர். மரண அமைதியில் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
கி.பி. 391 ல் நடந்த அந்த சம்பவத்திற்கு பின், அங்கு மீண்டும் அந்த கிளாடியேட்டர்கள் அந்த கொலோசியத்தில் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொல்வது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அல்லேலூயா! இவை எல்லாம் எப்படி நடந்தது, ஒரு மனிதன் தேவனின் நாமத்தில் பேசியதால்!
ஒரு வேளை நாம் ‘நான் என்ன ஒரு சிறு மூலையில் இருக்கிறேன், நான் சொல்வதை யார் கேட்க போகிறார்கள்?’ என்று நினைக்கலாம், எத்தனையோ வருடங்களாய் நடத்தப்பட்ட அந்த குரூரமான கொடிய விளையாட்டு, ஒரு மனிதனின் வேண்டுதலால் நிறுத்தப்பட்டதென்றால், நாம் நம் தேவனுக்காக கூறும் வார்த்தைகளும் நிச்சயமாக கேட்கப்படும். அன்று கிதியோன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன். ஒரே மனுஷனை முறியஅடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். அப்படியே முறியடிக்க தேவன் கிருபை செய்தார்.
சிறியவர்களை கொண்டாகிலும், எளியவர்களை கொண்டாகிலும் இரட்சிப்பது தேவனுக்கு மிகவும் எளியது. ஆனால், நாம் எதுவும் செய்யாத பட்சத்தில் தேவன் யாரை கொண்டு எந்த காரியத்தையும் செய்ய முடியும்?
ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற. உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய் – (நீதிமொழிகள் 31:8,9) என்று வேதம் நமக்கு கூறுகிறது. பேச வல்லமையில்லாதவர்களுக்கும், திக்கற்றவர்களுக்காகவும் நாம் பேச வேண்டும். கர்த்தர் அதை காண்பார், அவர்களுக்கு நியாயம் செய்வார். நான் எளியவன், நான் திக்கு வாயன் என்று எல்லாருமே பேசாமல் இருந்தால் யார் எளியவர்களுக்கு உதவி செய்ய முடியும்? மோசேயை கர்த்தர் இஸ்ரவேலரை மீட்கும்படி அழைத்தபோது, மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். – (யாத்திராகமம் 4:10-12).
அந்த திக்குவாயும் மந்த நாவுமுள்ள மோசேயைக் கொண்டுதான் சமஸ்த இஸரவேலரையும் கர்த்தர் மீட்டார். ஆகையால் போக வேண்டியது நமது கடமை, நாம் பேச வேண்டியதை கர்த்தர் அந்த நேரத்தில் நமக்கு போதிப்பார். நாம் செய்ய வேண்டியதை தேவன் நமக்கு போதிப்பார். கர்த்தருக்காக நாம் எழும்பி நிற்போமா? அவருக்காக நாம் பேசுவோமா? அவருடைய வாயாக நாம் இருப்போமா? கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென் அல்லேலூயா!
எனக்காய் பேசிட நாவு வேண்டும்
என்னைப் போல் நடந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்பு கூற ஆட்கள் வேண்டும்
அதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு நடத்திடுவார்
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசிக்கும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். மோசேயைப் போல கிதியோனைப் போல நாங்கள் எளியவர்களாயிருந்தாலும் எங்களை நீர் உமக்காக செயல்படும்படி அழைக்கிற தேவனாயிருக்கிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம். அப்படி நாங்கள் வரும் பட்சத்தில் எங்கள் மூலம் பெரும் காரியங்களை நீர் செய்வதற்காக உமக்கு ஸ்தோத்திரம். உம்முடைய அழைப்பை அறிந்து கொள்ளும் கிருபையை தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.