ஒற்றுமையாய் செயல்படுவோம்

ஒற்றுமையாய் செயல்படுவோம்

நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. – (யோவான் 15:12).

இன்றைய திருச்சபைகளில் பிரசங்கிக்கப்படும் வார்த்தைகளில் அடிக்கடி சொல்லப்படும் வார்த்தை இனி காலம் செல்லாது. கடைசி காலம் இது என்பதே. கடைசி காலத்தை பற்றியும் வருகையை பற்றியும் பேசுகிற சபைகளில் காணப்படும் பெரும் குறை என்னவென்றால் கிறிஸ்தவர்கள் மத்தியில் அன்பு தாழ்ச்சியும், சண்டையும், தர்க்கமும்தான். நம் மத்தியில் காணப்படும் பிரிவினைகளும், போட்டிகளும், பொறாமைகளும் தேவனுடைய உள்ளத்தை மிகவும் வருத்தமடைய செய்கின்றன. ஒரு சபை பரிவினருக்கும், இன்னொரு சபை பரிவினருக்கும் இடையே எத்தனை போட்டிகள், சண்டைகள், பிசாசு இதை பயன்படுத்தி கொண்டு நம்மில் அநேகரை தனக்கு இரையாக்கி கொண்டிருக்கிறான். நாமோ அறியாதவர்களாயிருக்கிறோம்.

ஒரு சபைக்கும் மற்றொரு சபைக்கும் இடையில் மாத்திரமல்ல, ஒரே சபைக்குள்ளே ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாமை, அன்பு தாழ்ச்சி, ஐக்கியமின்மை அதிகமாக காணப்படுகிறது. ‘மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு’ – (2 தீமோத்தேயு 3:1-5) என்று வேதம் வெகு தெளிவாக கடைசி கால நிகழ்ச்சிகளை குறித்தும், கடைசி கால மனிதர்களை குறித்தும் கூறுகிறது. இந்த வசனங்களில் காணப்படும் 20 காரியங்களும், வெளி உலகத்தில் மாத்திரமல்ல, சபைகளுக்குள்ளும் அதிகமாக காணப்படுகிறது. இந்த பட்டியலில் நம்மிடத்தில் எந்த குணமாவது காணப்படுகிறதா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமா?

சபையில் ஒருவர் செய்கிற மற்றவருக்கு எதிராக செய்யும் தவறான காரியத்தை மற்றவர்களால் பொறுத்து கொள்ள முடிவதில்லை. கர்த்தர் அன்பாகவே இருக்கிறார் என்றும், ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டுமென்று இயேசுகிறிஸ்து போதித்திருக்கிறார் என்றும் நன்கு அறிந்திருந்தாலும், மற்றவர் குறையை நாம் பொறுத்து போவதில்லை. சரி, பேசியாவது தீர்த்து கொள்ள முடியுமா என்று பார்த்தால், பேச ஆரம்பித்தால் அது சண்டையில் தான் போய் முடிகிறதாயிருக்கிறது. எல்லாருக்கும் எல்லாமும் நிறைவாய் இருப்பதால் யாரும் யாருக்கும் தாழ்ந்து போக முடிவதில்லை.

அவன் என்ன சொல்வது, நான் யார் தெரியுமா என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். – (1 கொரிந்தியர் 12:27) என்று வேதம் நமக்கு கூறுகிறது. கிறிஸ்து தலையாகவும், சபையில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியே அவயவங்களாகவும் இருக்கிறோம்.

உதாரணத்திற்கு நீங்கள் வலது கையின் ஒரு விரலாக இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அந்த விரல் இல்லாவிட்டால் சரீரம் முழுமையாக காணப்பட முடியுமா? இல்லை, ஒரு உறுப்பு இல்லாவிட்டாலும் அந்த சரீரம் முழுமையடைய முடியாது. அதுபோல நீங்கள் சபையில் ஒரு அவயவமாக இருக்கும்போது, நீங்கள் இல்லாமல் அந்த சபை முழுமை பெற முடியாது. சுபையில் நாம் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள்.

யாரும் விசேஷித்தவர்கள் இல்லை, அனைவருமே முக்கியமானவர்கள். வலது கையின் விரல், இடது கையின் விரலை பார்த்து, நீ ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவன், உன்னால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறமுடியுமா? எல்லா அவயவமும் முக்கியமானதே! ஓன்று இல்லாவிட்டாலும் மற்றதற்கு பிரச்சனை வரத்தான் செய்யும்.

ஒரு Zigzag Puzzle என்று சொல்லப்படும் விளையாட்டில் ஒரு படம் அநேக சிறு சிறு அட்டைகள் விதவிதமான விதத்தில் அமைந்திருக்கும். அவற்றை அது அது இருக்க வேண்டிய இடத்தில் சரியாக சேர்த்து வைத்து பார்க்கும்போது, அது முழுமையான படமாக தெரியும். ஆதில் ஒரு சிறு அட்டை இல்லாவிட்டாலும் அது முழுமையான படமாக தெரியாது. அதுப்போல சபையில் தாழ்மையான ஆத்துமாவாயிருந்தாலும், சபைக்காக உழைக்கிற ஆத்துமாவாக இருந்தாலும், ஒருவர் இல்லாவிட்டாலும் அந்த சபை முழுமை பெற முடியாது.

ஒருவருக்கொருவர் கடித்து, வழக்கிட்டு கொண்டு இராதபடி, இந்த கடைசி நாட்களில் ஒற்றுமையோடு செயல்படுவோம். இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். – (வெளிப்படுத்தின விசேஷம் 7:9) என்று அப்போஸ்தலனாகிய யோவான் கண்ட தரிசனத்தின்படி, சிங்காசனத்திற்கு முன்பாக நாம் அனைவரும் நின்று கர்த்தரை துதிக்கபோகிறோம்.

இடையில் நமக்குள்ளே எந்த பிரச்சனையும் பிரிவினையும் வேண்டாம். ஆவைகளை தகர்த்து, கர்த்தருடைய மந்தையில் ஒரே குடும்பமாக நாம் வாழ்ந்து, கர்த்தருக்கு மகிமையாக ஜீவிப்போம். அவரது நாமம் மாத்திரம் மகிமைப்படும்படியாக வாழ்ந்து அவருக்கே சாட்சியாக இருப்போம் ஆமென் அல்லேலூயா!

விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு

அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு

ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு

என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

..

திறவுண்ட வாசல் அடைபடுமுன்

நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்

நாட்கள் கொடியதாய் மாறிடுதே

காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக பிதாவே, இந்த கடைசி நாட்களில் சபையின் ஒற்றுமையை குலைக்கும்படியாக சத்துருவானவன் திட்டமிட்டு, அதன்படி சபைகளில் குழப்பத்தையும், பிரிவினைகளையும் கொண்டு வருகிறதை தேவன் அறிந்திருக்கிறபடியால், சத்துருவின் திட்டங்களை குலைத்து போடுவீராக. விசுவாசிகளுக்குள் அன்பை ஊற்றும். ஒற்றுமையை தாரும். ஒரு மனதை தாரும். ஒன்றாக தேவனுக்கு என்று உழைக்கவும், செயல்படவும்; கிருபை தருவீராக. சத்துருவின் மேல் ஜெயம் எடுக்கவும், கடைசி காலங்களில் மனிதர்கள் மத்தியில் காணப்படும் கொடுமையான குணங்களுக்கு தப்பி, உமக்கென்று வாழ கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.