கண்ணீரின் ஜெபம்

கண்ணீரின் ஜெபம்

சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்கவொட்டாதே. எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. – (புலம்பல் 2:18,19).

இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில் காணப்படும் மிகப்பெரிய குறை நொறுங்குண்ட இருதயமின்னையும், கண்ணீரற்ற கண்களுமே ஆகும். வேதத்தை போதிக்கும் போதகர்கள் அநேகர் கண்ணீரற்று இருப்பதினால் அவர்களுடைய ஊழியம் கனியற்று காணப்படுகிறது. விசுவாசிகளிடமும் அழியும் ஆத்துமாக்களைக் குறித்த பாரம் குறைவாகவே உள்ளது.

உலக எழுப்புதலின் சரித்திரத்தை நாம் பார்த்தோமானால், அநேக கிறிஸ்தவ தலைவர்களும் சுவிசேஷகர்களும் அழிந்து கொண்டிருக்கும் உலகத்திற்காக கண்ணீர் விட்டு தேவ சமுகத்தில் கதறுகிறவர்களாக இருந்தார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் துக்கமுளள் மனிதராக இருந்தார் என்று எழுதப்பட்டிருப்பதுப்போல இவர்களும் அப்படிப்பட்ட இருதயத்தோடிருந்தார்கள்.

கண்ணீரோடும், நடுக்கத்தோடும் சீனாய் மலையின் மேல் தேவ சமுகத்திலே காத்திருந்த மோசேயிடமே தேவன் பேசினார். தன் ஜனமாகிய இஸ்ரவேலருக்கு பதில் தன் பெயரை கிறுக்கி போடும்படி விண்ணப்பித்த கண்ணீரின் ஜெபத்தினால் ஒரு தேசமே காக்கப்பட்டது. தானியேலின் கண்ணீர் நிறைந்த நீண்ட உபவாச ஜெபம் பரலோகத்திலிருந்து காபிரியேல் தூதனை இறங்கபண்ணி தேவ ரசியங்களை வெளிப்படுத்தும்படி செய்தது, இயேசுவின் பிரியமுள்ள சீஷனாகிய யோவான் வெளிப்படுத்தின சுவிசேஷத்திலே முத்தரிக்கப்படடட புத்தகத்தை திறந்து பார்க்க ஒருவருக்கும் முடியவில்லை என்று கண்டபோது கண்ணீர்விட்டு அழுதான். உடனே மூப்பன் ஒருவன் அவரை ஆறுதல்படுத்தி யூத ராஜ சிங்கம் இதன் ஏழு முத்திரைகளையும் உடைக்க ஜெயம் கொணடிருக்கிறார் என்றான். அநேக சங்கீதங்கள் கண்ணீரில் எழுதபட்டவையே ஆகும். அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்திலே மகிழ்ச்சியாய் இருப்பதைக் குறித்து எழுதினாலும், கிறிஸ்துவின் சிலுவைக்கு விரோதிகளை குறித்து எழுதும்போது அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நாட்களில் உலகம் போகிற போக்கைப் பார்த்தால், எதிர்காலத்தில் நம் பிள்ளைகளின் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசிப்போமானால், நிச்சயம் அது ஒரு கேள்விக்குறியே. இன்டர்நெட், ஐ போன், இவைகள் வாலிபரை சீர்குலைக்கிறது மாத்திரமல்ல, கர்த்தருடைய வழியிலிருந்து விலக்க அவை சாத்தானின் தந்திரங்களில் ஒன்றாயிருக்கிறது. பொருளாதார வீழ்சிசியினாலே உலகம் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் ஸ்பெயின், மற்றும் பொலிவியா நாடுகளில் பூமி சூடாவதினால், தண்ணீர் இல்லாத வறட்சி இப்படி உலகம் மிகவும் மோசமான நிலைமைக்கு போய் கொண்டிருப்பது எல்லாரும் அறிந்த உண்மை. மற்றும் தீவிரவாதங்களினால் அநேக ஒன்றுமறியா மக்கள் பாதிக்கப்பட்டு உயிரை இழக்கும் நிலைமை! வேதம் நமக்கு ‘ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு’ என்று ஆலோசனை சொல்கிறது.

நாம் நம் பிள்ளைகளுக்காக தேவ சமுகத்தில் கண்ணீரோடு நம் கைளை ஏறெடுத்து அவர்களுக்காக மன்றாடவேண்டும். நம் பிள்ளைகள் இந்த உலகத்தின் பாவங்களில் சிக்கி, உலகத்தின் வழிகளில் சென்று விடக் கூடாது. நல்ல நண்பர்கள் அவர்களுக்கு கிடைக்கும்படியாகவும், கெட்ட பழக்கங்கள் எதற்கும் நம் பிள்ளைகள் அடிமைகளாக போய் விடாதபடிக்கும் நாம் தினமும் தேவ சமுகத்தில் மன்றாடவேண்டும். நாம் மட்டும் இரட்சிக்கப்பட்டிருந்தால் போதாது, நம் பிள்ளைகளையும் கர்த்தரின் வழிகளில் நடக்க பழக்குவிக்க வேண்டும். என்னதான் பரிட்சை என்றாலும், டியூஷன் எனறாலும் சபைகூடும் நாட்களில் அவர்கள் கண்டிப்பாக ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும்.

அவர்களுக்கு ஜெபிக்க கற்று கொடுக்க வேண்டும். வேதம் வாசிக்க தினமும் பழக்க வேண்டும். அநேக வீடுகளில் பெற்றோரே தினமும் வேதம் வாசிப்பது கிடையாது. ‘நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்’ என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. நாம் தினமும் வேதம் வாசிக்க வேண்டும். அதை காணும் நம் பிள்ளைகள் அவர்களும் தாங்களாகவே வேதத்தை வாசிக்க ஆரம்பிப்பார்கள். விடுமுறை நாட்களில் வேதத்தில் ஒரு பகுதி மனப்பாடம் செய்ய சொல்லி பழக்க வேண்டும்.

சில புது உபதேசங்கள் கண்ணீரின் ஜெபம் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளுக்குத்தான், புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு சந்தோஷம் மட்டும்தான் என்று தவறாக போதிக்கிறார்கள். பவுல் ஒவ்வொரு நிருபத்திலும் தான் கண்ணீரோடு ஜெபிப்பதைக் குறித்து எழுதியிருக்கிறார். சர்வ வல்லமையுள்ள நாம் ஆராதிக்கும் நம் தேவன், ‘நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்’ என்று நொறுங்குண்டவர்களிடத்திலேயே தான் தேவன் வாசம் பண்ணுகிறாராம். அவர் பொய் சொல்ல மனிதனல்ல, எப்பொதும் சந்தோஷமாய் இருக்கிறவர்களிடத்தில் நான் வாசம் பண்ணுகிறேன் என்று தேவன் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே கண்ணீரோடு பாரம் நிறைந்தவர்களாக அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக ஜெபிப்போம், நமது பிள்ளைகளுக்காக கர்த்தரிடம் மன்றாடுவோம். கர்த்தர் அதை கேட்டு நிச்சயமாக நன்மையான பதிலளிப்பார். ஆமென் அல்லேலூயா!

அன்னாளைப் போல கண்ணீரை வடிக்கணும்

சாமுவேலை (எழுப்புதல்) காணும் வரை

இதயத்தை ஊற்றணும்

நான் தூங்கினால் எதிரி களை விதைப்பான்

ஜெபிக்க மற்ந்தால் எதிரி ஜெயம் எடுப்பான்

ஜெபம்:

எங்கள் மேல் கரிசனை உள்ள நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் கண்ணீரோடு ஜெபிக்கும்போது, அதை கேட்டு உடனடியாக பதில் கொடுக்கிறவரே உமக்கு நன்றி. அழிந்து போகும் ஆத்துமாக்களுக்காக கண்ணீரோடு திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் பிள்ளைகளின் நலனுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காக கண்ணீரோடு ஜெபிக்க எங்களை ஏவியருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.