சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த்
திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும்
உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க
மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய
இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச்
சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி,
கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
-(தீமோத்தேயு 4:2-4).
.
நாம் வாழும் இந்த கடைசி நாட்களில், கள்ள போதகர்களும், கள்ள
தீர்க்கதரிசிகளும் அதிகமாய் எழும்பி கொண்டிருக்கிறார்கள். அதை நாம்
கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். இயேசுகிறிஸ்து கடைசி கால
நிகழ்ச்சிகளை ஒலிவமலையில் தன் சீஷர்களோடு பகிர்ந்து கொள்கையில்
கடைசி கால அடையாளங்களில் ஒன்றாக, அநேகங்
கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் (மத்தேயு
24:11) என்று கூறினார்.
.
சமீபத்தில் அமெரிக்காவில் ஹெரால்ட் கேம்பிங்க் (Harold Camping)
என்பவர், நியாயத்தீர்ப்பின் நாள் மே மாதம் 11ம் தேதி, 2011 என்று
திட்டவட்டமாக எழுதி மக்களை எச்சரிக்கை விடுத்தார். அவர் கூற்றின்படி,
சபைகளிலிருந்து பரிசுத்த ஆவியானவர் எடுக்கப்பட்டு விட்டதாகவும்,
இப்போது நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும்,
அக்டோபர் மாதம் 2011ல் உலகம் அழிக்கப்பட உள்ளதாகவும், ‘எக்காளம்
ஊதி, ஜனத்தை எச்சரி’ (எசேக்கியேல் 33:3) என்று வெளிப்படுத்தி
இருக்கிறார். வசனத்தை சரியாக அறியாத மக்கள் அவர் சொல்வதை
கேட்டு, தங்களிடம் உள்ள சொத்துக்களையும், எல்லாவற்றையும் விற்று,
கடைசியில் நடுத்தெருவில் நிற்க போகிறார்கள். உலக முடிவு
வருகிறதென்று இப்படி கூறினவர்கள் அநேகர் உண்டு, அதை நம்பி
தங்களது உடைமைகளை எல்லாம் விற்று, கடைசியில் சாப்பிட கூட
வழியில்லாமல் போனவர்கள் அநேகர் உண்டு. ‘ஆடுகளை
ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை
அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும்
புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்’ (மத்தேயு 10:16)
என்று இயேசுகிறிஸ்து முதலிலேயே எச்சரித்திருக்கிறார். இப்படிப்பட்ட
பொய் போதகங்கள் வரும்போது, நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக,
வசனத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இந்த செய்தியை நம்பி, சபைக்கு செல்வதையே விட்டுவிட்டவர்கள் உண்டு.
என்ன ஒரு பயங்கரமான சாத்தானின் பொய்! பரிசுத்த ஆவியானவர்
சபையிலிருந்து எடுக்கப்பட்டு போயிருந்தால், நாம் இங்கு இந்த உலகத்தில்
இருக்க மாட்டோமே! அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில்
ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார் (2 கொரிந்தியர் 1:22)
என்று வசனம் நமக்கு போதிக்கிறது. ஆவியானவர் எடுத்து
கொள்ளப்பட்டிருந்தால், நமக்குள்ளும் ஆவியானவர் இருக்க மாட்டாரே!
நாம் நம் இஷ்டம் போல் பாவத்தில் ஜீவிக்கலாமே! பரிசுத்த ஆவியானவர்,
பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும்,
உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் (யேவான் 16:8) என்று
இயேசுகிறிஸ்து சொல்லியிருக்க, பரிசுத்த ஆவியானவர் உலகத்தை விட்டு
எடுக்கப்பட்டிருந்தால் கிருபையின் காலம் முடிவடைந்திருக்குமே! இன்னும்
நாம் நற்செய்தி கூட்டங்களையும், பாவிகளை கர்த்தரிடம் சேர்க்கவும் செய்ய
முடியுமா? பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்தி, பாவ அறிக்கை செய்ய
வைக்கிறவர். அவர் இல்லாதிருந்தால் நாம் பாவ உணர்வு அடைவது
எப்படி? பரிசுத்த ஆவியானவர் இல்லாவிட்டால் சபையும் இல்லை. இந்த
உலகம் ஓநாய்களை போன்றது. நாம் ஆடுகளை போலிருந்தாலும்,
சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக்
கபடற்றவர்களுமாய் இருக்கவே வேண்டும். இல்லாவிட்டால்,
சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் நாம் நம்பி, நம்முடைய
ஆத்துமாவிற்கு மோசத்தை வருவிப்போம். ஜாக்கிரதையாக இருப்போம்.
.இன்னும் சிலர், யெகோவா சாட்சிகள் என்பவர்கள். அவர்கள் கிறிஸ்தவ
வீடுகளில் வந்து, கிறிஸ்தவர்களையே குறிவைத்து, அவர்களை தங்கள்
பக்கம் இழுக்க பார்ப்பார்கள். இவர்கள் தேவ திருத்துவத்தை மறுதலிப்பர்.
பிதா ஒருவரே தேவன் என்றும், இயேசுகிறிஸ்து படைக்கப்பட்டவர் என்றும்
கூறுவர். இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகை ஏற்கனவே 1914ம்
ஆண்டு நடந்து முடிந்துவிட்டதென்றும், அதை கண்களால் காண
முடியாததாய் இருந்தது என்றும், நரகம் என்று ஒன்று இல்லை என்றும்
வேதத்தில் எழுதப்பட்ட காரியங்களுக்கு முரண்பாடாக கூறுவார்கள்.
வசனத்தில் யாராவது சரியாக படிக்காமல் இருந்தால், அவர்கள் கூறுவது சரி
என்று அதற்கு ஒத்து கொண்டு அவர்களை போல மாறி விடுவார்கள்.
கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் வேதத்தை முறையாக ஒழுங்காக வாசிக்க
வேண்டும். அநேகருடைய வீடுகளில் வேதாகமம் ஒரு அலங்கார
பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது. ‘சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம்
உங்களை விடுதலையாக்கும்’ (யோவான் 8:32) என்று வேதம் நமக்கு
சொல்கிறது. சத்தியமாகிய வேத வசனத்தை அறிந்திருந்தால், இந்த மாதிரி
கள்ள போதகங்களுக்கும், கள்ள தீர்க்கதரிசிகளுக்கும் நாம் தப்பித்து,
நம்முடைய ஆத்துமாக்களை வழுவாதபடி காத்து கொள்ளலாம்.
இல்லாவிட்டால் ‘கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி,
கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக
அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நீங்களோ
எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு
அறிவித்திருக்கிறேன்’ (மாற்கு 13:22-23) என்று இயேசுகிறிஸ்து
எச்சரிக்கையை நாம் வெகு சாதாரணமாக எடுத்து கொண்டு, நம்முடைய
ஆத்துமாக்களை கறைபடுத்தி விடுவோம். நாம் ஜாக்கிரதையாக கிறிஸ்தவ
வாழ்வில் கிறிஸ்துவை நோக்கி ஒவ்வொரு படியாக முன்னேற தேவன்
தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.
ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விடடோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு
.
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
குற்றமின்றி காத்திடுவார்
ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த கடைசி நாட்களில்
அநேக கள்ள தீர்க்கதரிசிகளும் கள்ள போதகர்களும் எழும்பி, தெரிந்து
கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கதக்கதாக கிரியை செய்து
கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில், நாங்கள் வஞ்சிக்கப்பட்டு
போகாதபடி, வசனத்தை உறுதியாய் பிடித்து கொள்ளவும், கர்த்தருடைய
வசனத்தை யார் சொன்னாலும் அதை ஆராய்ந்து பார்க்காமல் சரியென்று
நினைத்து, அதன்படி நடவாமலும், எச்சரிக்கையாயிருக்க ஞானத்தின்
ஆவியினால் எங்களை நிரப்பியருளும். வசனத்தின் மூலமும்,
ஆவியானவரின் ஒத்தாசையுடனும் சாத்தானையும், துர் உபதேசங்களையும்
நாங்கள் வெல்லும்படியாக எங்களுக்கு பெலத்தையும் உணர்வுள்ள
இருதயத்தையும் தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில்
கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.