…
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். – (2 கொரிந்தியர் 12:9)
பெரும்பாலும் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் நாம் விரும்பாத சில காரியங்கள் சில இருப்பதுண்டு. அவற்றை நாம் வேண்டாம் என நினைத்தாலும் அவை நம்மை விட்டு நீங்குவதில்லை. ஒரு வேளை அது உடல் ஊனமாக இருக்கலாம், அல்லது தீராத வியாதியாக இருக்கலாம், அல்லது நமக்கு தொல்லை தரக்கூடிய ஏதோ ஒரு காரியமாக இருக்கலாம். இவை யாவும் வேண்டாத விருந்தினர்களாக எப்போதும் நம்மோடு இருந்து நமக்கு தொல்லை தருவதாக இருக்கலாம்.
.
உலகிலுள்ள பெரும்பாலோருடைய இருதயத்தில் ஒரு ஏக்கமுண்டு. நான்
சற்று உயரமாக வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே, பார்ப்பதற்கு
அழகாகவோ,வேறொரு குடும்பத்திலோ பிறந்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும், நல்ல உடல் ஆரோக்கியமுள்ளவனாக நான்
பிறந்திருக்கலாமே, இது போன்ற எண்ணங்கள் நம்மில் பலரது உள்ளத்தில்
இருக்கலாம்.
.
நம்முடைய ஏக்கங்களும் விருப்பங்களும் அப்படியாக இருந்தாலும், தேவன்
தம்முடைய அளவிட முடியாத ஞானத்தினால் நம் வாழ்வையும், நம்
உருவத்தையும் அவருடைய சித்தத்தின்படி உருவாக்கியுள்ளார். ஆகவே
நாம் இருக்கும் நிலை தேவனுடைய கிருபையினாலே ஆனது. மாற்ற
இயலாதவைகளை இருக்கிற வண்ணமாகவே முழு மனதோடு ஏற்று
கொள்வது நமக்கு மிகுந்த சமாதானத்தை தரும். அன்பின் தேவனால் இது
என் வாழ்வில் அனுமதிக்கப்பட்டுள்ளது என ஏற்று கொள்ளும்
மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். தேவன் அதை
அனுமதித்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும்
நிச்சயமாகவே நமக்கு தருவார்.
.
அப்போஸ்தலனாகிய பவுல் தன் சரீரத்திலுள்ள முள் நீங்க வேண்டுமென்று
மூன்று முறை தேவனை நோக்கி ஜெபிக்கிறார். ஆனால் தேவனோ, அந்த
முள்ளை எடுக்கவில்லை. அந்த முள்ளை தாங்கி கொள்வதற்கான
கிருபையையே தருவதாக வாக்கு கொடுத்தார்.
.
இதை கேட்ட பவுல், ‘கிறிஸ்துவின் வல்லமை என் மேல் தங்கும்படி, என்
பெலவீனங்களை குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை
பாராட்டுவேன்’ என்றார். பவுலின் இந்த ஆவிக்குரிய முதிர்ச்சியை
கண்பார்வையற்ற அம்மையாரும், அநேக கிறிஸ்தவ பாடல்களை
இயற்றியவருமாகிய பேனி கிராஸ்பி கற்று கொண்டார்.
அவர் தனது எட்டாம் வயதில் எழுதிய பாடல்,
‘கண் பார்வை இல்லை யெனினும்
களிகூரும் பிள்ளை நான்
மண்ணுலக வாழ்வுதனில்
இது போதுமென்று வாழ்ந்திடுவேன்’
.
பிரியமானவர்களே விரும்பாத விருந்தாளிகளாய் நம்முடன் இருக்கும்
வியாதி, ஊனம் போன்ற இவற்றை கண்டு சலித்து, விரக்தியோடு வாழ்வை
கடத்தாதீர்கள். தேவ சித்தமின்றி, எதுவும் நம் வாழ்வில் ஏற்படாது. ஆகவே
நம் வாழ்விலுள்ள குறைவுகள் தேவனை கிட்டி சேர ஒரு வாய்ப்;பாக எடுத்து
கொண்டு, எப்போதும் மகிழ்ச்சியோடு தேவ நாமத்தை
மகிமைப்படுத்துவோம். நம்முடைய பெலவீனங்களில் அவருடைய பெலன்
பூரணமாய் விளங்குகிறபடியால், நாம் பவுலைப்போல கர்த்தருடைய
வல்லமை நம்மில் விளங்கும்படி, அவருக்கு சாட்சியாக வாழ்வோம்.
அவருடய கிருபை நம்மை விட்டு எப்போதும் விலகுவதே இல்லை! ஆமென்
அல்லேலூயா!
.
குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரைகளில் மெதுவாகவே நடத்துகிறீர்
இறைவனாம் யேசு எல்லாவற்றிலும்
திருப்தியாக்குகிறீர், திருப்தியாக்குகிறீர்,
.
ஓ! இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் எல்லா குறைகளிலும், என் கிருபை உனக்கு போதும் என்று எங்களை தேற்றுவதற்காக உம்மை துதிக்கிறோம். அநேக பரிசுத்தவான்கள் தங்கள் குறைகள் மத்தியிலும் உமக்காக எழும்பி பிரகாசித்தார்களே, நாங்களும், எங்கள் குறைகளை குறித்து சோர்ந்து போகாமல் தேவனை எப்போதும் மகிமைப்படுத்தி எங்கள் குறைகளிலும் உம்முடைய கிருபை எங்களுக்கு போதுமானதாக இருப்பதால், எங்களை திருப்தி செய்வதால், உம்மையே துதித்து வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.