ஆபத்து அவன்மேல் வரும்போது தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ? (யோபு 27:9)
ஒரு தகப்பனும் மகனும் கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தனர். மகன் தகப்பனின் கரத்தை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு விளையாட வேண்டும் என்று தோன்றியது. உடனே ‘அப்பா நான் தண்ணீரில் விளையாட வேண்டும் போலிருக்கிறது’ என்று கூறினான். தகப்பன், ‘சரி நீ விளையாடு, ஆனால் என் கையை பிடித்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார். அவன் சிறிது நேரம் அவருடைய கையை பிடித்து கொண்டு நடந்தான். பின்னர் கொஞ்சம் கையை விட்டால் அவருக்கு தெரியாது என்று நினைத்து, அவருடைய கையை விட்டு அலைகளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான். அவனுடைய தகப்பனார், ‘என் கையை விட்டு வி;ட்டாய், தூர போகாதே’ என்றார். அவன் கால்களை அலைகளில் நனைய விட்டு, ‘எனக்கு இப்போது நீர் வேண்டாம், நான் பத்திரமாகத்தான் இருக்கிறேன்’ என்று கூறினான். தகப்பனார் ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஆனால் அமைதியானார், மகன் கற்று கொள்ள வேண்டியது இன்னும் உண்டு என்பதை உணர்ந்தவராக அமைதியானார்.
.
கொஞ்ச நேரம் ஆனதும், இன்னும் கொஞ்சம் உள்ளே போனான். அலைகள் அதிகமாய் இருந்தபடியால், அவனது இடுப்பு வரை அலைகள் வந்தது. மகனை அழைத்தார், ‘மகனே இருட்டி கொண்டு வருகிறது, வந்து விடு’ என்று அவசரமாய் அழைத்தார். அவனோ, ‘இப்போதுதான் ஜாலியாக இருக்கிறது, நான் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று கூறி இன்னும் உள்ளே போக ஆரம்பித்தான். ஒரு அலை வேகமாய் அவன் மேல் மோதினது. கீழே விழ ஆரம்பித்த போது, ‘அப்பா எனக்கு இப்போது நீங்கள் வேண்டும்’ என்று கத்தினான். ஆனால் கரையிலிருந்து அவன் வெகு தூரத்தில் இருந்தபடியால் தகப்பனுக்கு காது கேட்குமோ என்று நினைத்து அவன் கண்களில் கண்ணீர் வழிந்தபடி அப்பா தன் கையை பிடித்து கொள்ள சொன்னாரே நான் கேட்கவில்லையே என்று நினைத்து, ‘அப்பா எனக்கு நீங்கள் வேண்டும்’ என்று கதறினான். அடுத்த நிமிடம் அவன் தகப்பன் அவன் அருகில் இருந்தார். அவன் அவரை கட்டி பிடித்து, ‘அப்பா நீங்கள் என்னை விட்டு விட்டீர்கள் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் என்னை விடவில்லை’ என்று கண்ணீருடன் கைகளை திரும்ப பிடித்து நடக்க ஆரம்பித்தான். தகப்பன், ‘நான் உன்னை கைவிடவில்லை, நீ என்னை விட்டு விட்டு போனபோதும் நான் எப்போதும் போல் உன்னை நேசித்தேன். நீ என்னை கூப்பிடுவதற்காக காத்திருந்தேன்’ என்று கூறினார்.
.
பிரியமானவர்களே, நாம் கர்த்தரோடு நடக்கும்போது, அவருடைய வழிநடத்துதலையும், அவருடைய அரவணைப்பையும் உணருவதில்லை. அவரை விட்டு போகும்போது எல்லாமே சந்தோஷமாகத்தான் தோன்றும். ஆனால் ஒரு நாள் வரும், நாம் நம்பின யாவரும் நம்மை கைவிட்டு விடும்போது, யாரும் நமக்கு இல்லையே என்று தோன்றும். தனிமையான நேரத்தில், கர்த்தரை விட்டு விட்டு தூர வந்து விட்டோமே என்று அங்கலாய்த்து, ஆபத்து நேரத்தில் ஆண்டவரே எனக்கு இரங்கும் என்று கூப்பிடும்போது, கதறும் போது, நாம் எவ்வளவு தூரம் அவரை விட்டு போயிருந்தாலும், அவர் நம்மேல் வைத்த அதே நேசத்தோடு நம்மை வந்து மீட்கும் தேவனாயிருக்கிறார். யோபுவின் காலத்தில் மாயக்காரனை குறித்து, அவர் ‘ஆபத்து அவன்மேல் வரும்போது தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?’ என்று கேட்டார். யோபுவின் காலத்தில் மனிதனுக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேச இயேசுகிறிஸ்து இல்லை. ஆனால் நம்முடைய நாட்களில், நமக்காக தம் சொந்த இரத்தம் சிந்தி மரித்து, உயிரோடு எழுந்து, நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசி கொண்டிருக்கும் இயேசுகிறிஸ்து உண்டு.
.
தேவனுடைய வசனம் கூறுகிறது, ‘ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்’ (சங்கீதம் 50:15) என்று. நாம் உண்மையுள்ளவர்கள் என்பதினால் அல்ல, நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் (2 தீமோத்தேயு 2:12) என்று வசனம் கூறுகிறது. நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராயிருக்கிறபடியால், நாம் அவரை விட்டு தூர போனாலும், அவர் நம்மில் கரிசனை உள்ளவராய், நாம் நம்முடைய ஆபத்து காலத்தில் அவரை நோக்கி கூப்பிடும்போது உடனே நமக்கு பதில் கொடுக்கும் தேவனாயிருக்கிறார். ஒருமுறை அவரை நம் சொந்த இரட்சகராக நாம் ஏற்று கொண்டிருந்தால், அதினிமித்தம், அவர் நம்மை என்றும் கைவிடாதவராக, என்றும் நம்மோடு இருக்கிறார்.
.
நாம் அவரை விட்டு தூர போயிருந்தாலும், எப்போது மனம் திரும்பி மீண்டும் அவரை நோக்கி, ‘எனக்கு நீர்தான் வேண்டும்’ என்று அவரை பற்றி கொள்கிறோமோ உடனே தேவன் நம்மை ஏற்று கொள்ள வாஞ்சையுள்ளவராயிருக்கிறார். அப்படிப்பட்டதான மகத்துவமான தேவனை நம் தெய்வமாக கொண்டிருக்கிற நாம் எத்தனை பாக்கியமுள்ளவர்கள்!
.
நம்முடைய பிரயாசங்களிலும், வேதனைகளிலும், நோய்களிலும், தேவைகளிலும் நாம் கர்த்தரையே நோக்கி பார்ப்போம், அவரிடத்திலிருந்தே நமக்கு ஒத்தாசை வரும்! அவரிடத்திலிருந்தே விடுதலை வரும்! அவரிடத்திலிருந்தே சுகம் வரும்! அவரிடத்திலிருந்தே நமக்கு பதில் வரும்! அவரையே பற்றி கொள்வோம்! ஆமென் அல்லேலூயா!
கூப்பிடும் யாவருக்கும் மிக அருகினில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே – என் இயேசு ராஜா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
உயிருள்ள நாளெல்லாமே
ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் பிரயாசங்களிலும், எல்லா துன்ப நேரங்களிலும் எங்கள் துணையாய் எங்கள் துருகமாய், எங்கள் தஞ்சமாய் நீர் இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் எங்கள் பாவ தன்மையினாலே உம்மை விட்டு விலகி போனாலும், நாங்கள் எங்கள் ஆபத்து நேரத்தில் உம்மை நோக்கி கூப்பிடும்போது எங்களுக்கு உடனே வந்து பதில் கொடுக்கிற நல்ல தெய்வமே உம்மை துதிக்கிறோம். நாங்கள் உம்மையே பற்றி கொள்கிறோம் தகப்பனே, நீரே எங்களுக்கு வேண்டும் என்று உம்மையே சார்ந்து கொள்கிறோம். எங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுதலை தருகிற உம்மையே பற்றி கொள்கிறோம். பெலனை தாரும், விடுதலையை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்