வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. – (2 தீமோத்தேயு 3:16-17)
ஜான் தன்னிடமிருந்த அந்த மெஷினோடு போராடி கொண்டிருந்தான். அவனுக்கு அதை எப்படி வேலை செய்ய வைக்க முடியும் என்று தெரியவில்லை. யாராவது வந்து உதவினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். எப்படித்தான் இதை வேலை செய்ய வைப்பதோ என்று அவன் போராடி கொண்டு இருந்தபோது, அவனது அண்ணன், ‘ஏன் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாய்? நம் அப்பா இந்த மெஷினை உருவாக்கினபோது, இதை எப்படி ஆபரேட் செய்ய வேண்டும் என்று ஒரு புத்தகத்தில் எழுதி இருந்தார் அல்லவா? அதை படித்தாயா?’ என்று கேட்டான்.
.
ஜான் அதற்கு ஏன் இவன் இந்த மாதிரியான கஷ்டமான கேள்விகளை கேட்கிறான்? அந்த புத்தகத்தில் என்னுடைய பிரச்சனையை குறித்து எதுவும் எழுதப்படவில்லையே என்று நினைத்தவனாக ‘ஏதோ கொஞ்சம் படித்தேன்’ என்று கூறினான். அதற்கு அவனுடைய அண்ணன், ‘இதை உருவாக்கினவருக்கு எப்படி என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். ஆகவே உட்கார்;நது சரியாக அதைப் படி, அப்போது உனக்கு புரியும்’ என்று கூறினான்.
.
அதன்படி ஜான் அதை உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தபோது, அவனுக்கு த்ன பிரச்சனையின் காரியங்களை குறித்தும், தன் தகப்பன் அதை உருவாக்கினதன் நோக்கமும் புரிய ஆரம்பித்தது. அந்த மெஷினை நல்லபடியாக ஆரம்பித்து வேலை செய்ய வைத்தான்.
.
பிரியமானவர்களே, தேவனும் நம்மிடம் நம் வாழ்க்கையை சந்தோஷமாய் நடத்துவதற்கான வழிமுறைகளை வேதத்தில் எழுதி வைத்துள்ளார். ஆனால் நாமோ அவற்றை படிக்காமல், எப்படி நாம் நம் வாழ்வை நடத்த வேண்டும் என்பதை அறியாதவர்களாக, நாமே நம் வாழ்வை கையில் எடுத்து கொண்டு, எப்படி நடத்துவது என்று தெரியாமல் புரியாமல் தடுமாறி கொண்டிருக்கிறோம்.
.
‘என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்’ (ஓசியா 8:12) என்று தேவன் சொல்கிறார். அவர் நாம் வாழ்வதற்கும், நம்முடைய ஒழுக்கத்திற்கும் எழுதி கொடுத்த புத்தகத்தை நாம் அது யாருக்கோ, எனக்கல்ல என்று நினைத்து அதை அந்நிய காரியமாக நினைக்கிறோம். அதினால் தான் நம் வாழ்வில் நாம் முன்னேற முடியாமல், எல்லாவற்றிற்கும் பிறரது தயவையும், ஜெபத்தையும் நாடி கொண்டிருக்கிறோம்.
.
வேதத்தை வாசிப்பது நமக்கு உணவாக மாறட்டும். தேவன் எழுதி கொடுத்த மகத்துவங்களை வாசித்து, நம்முடைய வாழ்வில் அவற்றை கடைப்பிடிப்போம். ஒவ்வொரு வார்த்தையும் எனக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்று விசுவாசித்து, அதில் வரும் வாக்குதத்தங்களில் அவனுக்கு என்பதற்கு பதிலாக உங்கள் பெயரையும், அவளுக்கு என்பதற்கு பதிலாக உங்கள் பெயரையும் போட்டு கொள்ளுங்கள். அது எத்தனை ஆசீர்வாதம்! அதை உரிமைபாராட்டி கேட்கும்போது, தேவன் அவற்றை நிச்சயமாகவே நமக்கு ஆம் என்றும் ஆமென் என்றும் வாய்க்க செய்வார். ஆமென் அல்லேலூயா!
.
வேதத்திலே வேதத்திலே விலைமதியா முத்துக்கள் உண்டு
தினந்தோறும் அம்முத்துக்களை பார்
மெய்யாகவே நீயும் ஓர் முத்தாய் மாறுவாய்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, வேதத்தில் நாங்கள் நடைமுறையில் செயல்படுத்தும் வண்ணம் அனேக காரியங்களை நீர் எங்களுக்கு எழுதி கொடுத்தும் அவற்றை நாங்கள் அந்நிய காரியமாக நினைத்து படிக்காமல் போன நாட்களை எங்களுக்கு மன்னியும். வேதத்தை வாசித்து அதன்படி நடக்க எங்களுக்கு கிருபை தாரும். அதன் இரகசியங்களை அறிந்து கொள்ள மனக்கண்களை திறந்தருளும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.