தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். – (லூக்கா 9:24).
சாது சுந்தர் சிங் அவர்கள் திபெத்தில் ஊழியம் செய்த நாட்களில், ஒரு குளிர் நாளில் திபெத்தின் மலைகள் வழியாய் அவர் போய் கொண்டிருநதார். சாயங்கால வேளையானதால் குளிர் அதிகமாகி கொண்டே வந்தது. இவரை போல திபெத்திய வழிபோக்கனொருவனும் இவருடன் சேர்ந்து கொண்டான். பனி மூடிய அம்மலை சிகரங்களில் பயங்கர குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தபடியாலும், பனிபெய்து கொண்டிருந்தபடியாலும், குளிரின் கொடுமையை தாங்காமல் தாங்கள் கருதிய ஊர்போய் சேருமுன் குளிரால் விரைத்து இறந்து போவோமென்று பயந்து கொண்டே இருவரும் நடந்தார்கள்.
.
ஓரிடத்தில் அவர்கள் வந்தபோது, ஆழமான செங்குத்தான ஒரு பள்ளத்தில்
செத்தவன் போல கிடந்த ஒரு மனிதனை கண்டனர். சுந்தர் இவனையும்
சுமந்து கொண்டு அவ்வூர் போவோம் என்று தன் சகபயணியிடம் கூறினார்.
ஆனால் அவனோ, ‘நாம் உயிரோடே ஊர் போய் சேர்வதே பெரிய காரியம்,
அப்படி இருக்க இவனையும் தூக்கி கொண்டு செல்வதா? என்னால்
முடியாது, உனக்கு இரக்கமிருந்தால் நீயே சுமந்து கொண்டு வா, நான்
முன்னே போகிறேன்’ என்று சுந்தரிடம் சொல்லிவிட்டு, தன் வழியே
வேகமாய் நடந்தான். ஆகவே சுந்தர் தாமே அந்த மனிதனை தன்
தோளின்மேல் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார். குளிரும் அதிகரித்து,
இருட்டவும் ஆரம்பித்தது. தோளின் மேல் இருந்தவன் உடலும், சுந்தர்
உடலும் உரசி கொண்டதால் சிறிது அனல் உண்டானது. அது வீசிக்
கொண்டிருக்கும் கடுங்குளிரை தாங்கி கொள்ள போதுமானதாயிருந்தது.
.
அப்படி அவர் நடந்து சென்றபோது, பாதையில் ஒருவன் இறந்து கிடந்ததை
பார்த்தார். அருகில் வந்தபோது, அவன், தன்னுடன் வழி நடந்து தனக்கு முன்
சென்ற பயணிதான் என்று அறிந்து கொண்டார். அவன் குளிர் தாங்காமல்
இறந்து போனான். இவர்கள் இருவராய் இருந்ததினால் அனல் உண்டாகி,
குளிரை தாங்க தக்க பலனை கொடுத்தது. சுமந்து வந்தவனை பக்கத்து
கிராமத்தில் சேர்த்தார். ‘தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை
.
இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன்
அதை இரட்சித்துக்கொள்ளுவான்’ என்ற தேவ வசனத்தோடு ஒப்பிடடு இந்த
நிகழ்ச்சியை சுந்தது அடிக்கடி தன் பிரசங்கத்தில் கூறுவார்.
.
‘தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்;
என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை
இரட்சித்துக்கொள்ளுவான்’ என்று இயேசுகிறிஸ்து கூறினார். நாம்
இரட்சிக்கப்படுவதற்கு முன் நம் இஷ்டம் போல வாழ்ந்து வந்தோம். சுய
சித்தத்தை நிறைவேற்றி வந்தோம். ஆனால் கிறிஸ்துவை ஏற்று
கொண்டப்பின் நாம் சுயத்திற்கு மரித்து, அவருடைய சித்தத்தை
நிறைவேற்றுகிறவர்களாக மாற வேண்டும். அதுவே நம் ஜீவனை
இழத்தலாகும். நாம் சுயத்திற்கு மரித்து, கர்த்தருக்காக வாழும்போது, நாம் நம்
ஜீவனை கர்த்தருக்குள் இரட்சித்து கொள்கிறோம். ஆனால் சுயமாய்
வாழும்போது, அதை இழந்து போகிறோம். பாவத்திலும், பழைய
சுபாவத்திலும் நாம் இருக்கும்போது, நம்முடைய வாழ்வில் ஒரு மாற்றமும்
உண்டாகாமல், நாம் மரித்தவர்களாகவே காணப்படுவோம். அதைத்தான்
கிறிஸ்து இந்த இடத்தில் தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை
இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன்
அதை இரட்சித்துக்கொள்ளுவான் என்று கூறினார்.
.
சுந்தர்சிங் மற்றவனை காக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் எடுத்த
முடிவு எப்படி அவருக்கும் ஜீவனை கொடுத்து, மற்றவனுக்கும்
பிரயோஜனமாயிருந்ததோ, அப்படி நாம் கிறிஸ்துவினிமித்தம்
மற்றவர்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்போது, நம் ஜீவனையும்,
மற்றவர்களின் ஜீவனையும் இரட்சித்து கொள்வோம். ஆனால் சுயத்திற்காய்
வாழ்ந்தோமானால், மற்றவர்களுக்கும் பிரயோஜனமில்லாமல், நம் ஜீவனை
இழந்து போகிறவர்களாக காணப்படுவோம்.
.
மட்டுமல்ல, சாத்ராக்,மேஷாக்,ஆபெத்நேகோ ஆகிய எபிரேய வாலிபர்கள்
தங்கள் ஜீவனை வெறுத்து, ‘எங்களை கொன்றாலும் நாங்கள் கர்த்தரை
மறுதலிக்க மாட்டோம்’ என்று தைரியமாக நின்றதால், அவர்களோடு கூட
கிறிஸ்துவும் நான்காவது நபராக அந்த எரியும் அக்கினி ஜுவாலையில்
இருந்தாரே! அதோடு, அவர்களை வெளியே கொண்டு வந்து, அந்த
இடத்திலே உயர்த்தினாரல்லவா? கர்த்தருக்காக எதையும் இழக்கிற யாரும்
வெறுமையாய் போனதில்லை!
.
நாம் ஒவ்வொருவரும் உலகத்திற்கு உப்பாகவும், ஒளியாகவும்
இருக்கும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். அதை மறந்தவர்களாக, நாம்
நமக்காகவே வாழுவோமானால், இந்த உலகம், உப்பில்லா பண்டம்
குப்பையிலே என்ற வார்த்தையின்படி, சுவையற்றதாக, பிரயோஜனமற்றதாக
மாறிவிடும். ஒளியை கொடுக்க மறப்போமானால், உலகம் இருளாக
மாறிவிடும். நாம் நம் ஜீவனை இரட்சித்து கொள்ளும்படியாக சுயத்தை
வெறுத்து கர்த்தருக்காகவும், மற்றவர்களுக்காகவும் வாழுவோம்! ஆமென்
அல்லேலூயா!
.
ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ
ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ
ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
ஜீவனை வெறுப்பவனோ பற்றி கொள்வானே – நம்மிலே
ஜெபம்…..
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களுக்கு ஜீவனை கொடுத்திருப்பது உமது கிருபை ஐயா. அதை நாங்கள் நேசித்து, சுயமாய் வாழும்போது, அதை இழந்து போக நேரிடுமே, சுயத்தை வெறுத்து, நீர் கொடுக்கும் ஜீவனை பற்றி கொள்ள தேவன் எங்களுக்கு உதவி செய்யும். உமக்காய் வாழவும், உலகத்திற்கு உப்பாகவும், ஒளியாகவும் ஜீவிக்கவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.