நமது தெரிந்தெடுப்பு எது?

நமது தெரிந்தெடுப்பு எது?

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்… (லூக்கா 15:17-18)

ஒரு மனிதன் குழுவாக கடலின் அடியில் முத்துக்குளிக்க சென்றான். சற்று நேரம் கழித்து, எல்லாரும் திரும்பி விட்டனர். ஆனால் அவனோ திரும்பவில்லை. அநேக நேரம் தேடியும் அவனை காணவில்லை. அவன் தான் இருக்கும் நாட்டின் நீந்த கூடாத எல்லையை தாண்டி நீந்தினபடியால், போலீசால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தான். அங்கிருந்து அவன் தன் தாய்க்கு போன் செய்து சொன்னபடியால், அவன் இருக்கும் இடம் தெரிந்தது.

.

அந்த மனிதனின் பிரச்சனை அவன் செல்லக்கூடாத எல்லைக்குள் கடந்து சென்றபடியால் ஆரம்பமானது. இங்கு எல்லாரும் அவனை தேடி கொண்டிருந்தபோது, அவனோ பத்திரமாக ஜெயிலில் இருந்தான். ஆனால் அது வசதியான இடமோ? இல்லை, ஏனெனில் அவன் தனக்கு குறிக்கப்பட்ட இடத்திலிருந்து மீறி, அதையும் கடந்து செல்லும்படி தவறானதை தெரிந்து கொண்டபடியால், போலீசால் கைது செய்யப்பட்டு, கஷ்டத்திற்குள் கடந்து செல்ல வேண்டி இருந்தது.

.

வேதத்திலும் சிலர் தங்கள் வழிகளை தவறாக தெரிந்து கொண்டதினிமித்தம் அநேக பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க வேண்டி வந்தது. இளைய குமாரன், தன் தகப்பனிடம் தன் சொத்தின் பாகத்தை பிரித்து கேட்டு, அதை பெற்று கொண்டு, அதை தவறான வழியில் செலவழித்து, பின் கையில் காசு இல்லாமல், பன்றிகளை மேய்க்கும் ஒருவனிடம் வேலைக்கு சேர்ந்து, பன்றிகளுக்கு போடப்படும் தவிட்டினாலே தன் வயிறை நிரப்ப ஆசையாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது.

.

தேவன் யோனாவை நினிவேக்கு போக சொன்னபோது, அவனோ நினிவேயின் குடிகளுக்கு பயந்து, தர்ஷீசுக்கு செல்லும் கப்பலில் ஏறி போக ஆரம்பித்தான். அதனால் நடுக்கடலில் புயல் ஏற்பட்டு, அவனை கடலில் தூக்கி எறியப்பட்டு, மீனின் வயிற்றில் (குடல்களும், நாற்றமும் நிறைந்த இடத்தில்) மூன்று நாட்கள் இருக்க வேண்டியதாயிற்று.

.

அப்போஸ்தலனாகிய பவுல், தான் பவுல் ஆவதற்கு முன், கிறிஸ்தவர்களை துன்பப்படுத்த சென்றபோது, இயேசுகிறிஸ்துவினால் கண்கள் குருடாக்கப்பட்டார்.

.

ஆனால் இவர்கள் மூவரும் தாங்கள் இருந்த துன்பமான இடங்களில் இருந்தபோது ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்தார்கள். ஒருவேளை தாங்கள் இருந்த இடத்திலேயே இருந்திருக்கலாம், ஆனால் அந்த இடங்களிலிருந்து வெளியேறும்படியாக, தாங்கள் படுகின்ற தொல்லைகளிலிருந்து வெளியே வரும்படியாக, தாங்கள் தவறான காரியத்தை தெரிந்து கொண்டதினால் பட்ட பாடுகளை நினைத்து, அதிலிருந்து வெளிவரும்படியாக நல்ல தீர்மானங்களை எடுத்தார்கள். அதிலிருந்து வெளியே வந்தார்கள்.

.

கெட்ட குமாரன், நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான் (லூக்கா 15:18-20) என்று பார்க்கிறோம். அவன் எடுத்த அந்த நல்ல முடிவினால், தன் தகப்பனிடம் வந்தபோது, அவர் அவனை ஏற்று கொண்டார்.

.

யோனா மீனின் வயிற்றில் இருந்தபோது, நான் நினிவேக்கு செல்லவே முடியாது என்று தீர்மானித்திருந்தால், அந்த மீனின் வயிற்றிலேயே ஒருவேளை அழுகி போயிருந்திருக்கலாம், ஆனால் அதிலிருந்து வெளிவரும்படி கர்த்தரை நோக்கி துதித்து விண்ணப்பம் செய்தபோது, தேவன் அந்த மீனுக்கு அவனை வெளியே கக்கும்படி கட்டளையிட்டார்.

.

சவுல், நான் தேவனுக்காகத்தானே வைராக்கியமாயிருக்கிறேன், நான் குருடாயிருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்திருந்தால், அப்படியே சாகும்வரை குருடாயிருந்திருக்க வேண்டியதுதான். ஆனால், ஆண்டவரே நான் என்ன செய்ய வேண்டும் என்று தன்னை தாழ்த்தி, அவரிடம் வந்தபடியால், பவுலாக மாறி இன்று வரை வேதத்தில் நீங்கா புகழை பெற்றிருக்கிறார்.

.

பிரியமானவர்களே, நாம் வேதத்தில் பார்க்கிற இவர்கள் தாங்கள் இருக்கும் நிலையிலிருந்து வெளியேவர ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். அதினால் தாங்கள் இருந்த மோசமான நிலையிலிருந்து வெளியே வந்தார்கள். ஒருவேளை இதை வாசிக்கிற நீங்கள் வெளியே வரமுடியாத மிகவும் மோசமான பாவமான நிலையில் இருக்கிறீர்களா? தவறு என்று தெரிந்தும், அதிலிருந்து வெளியே வராமல் அதற்குள்ளேயே முழுகி கொண்டு இருக்கிறீர்களா? நீங்களாக ஒரு தீர்மானம் எடுக்காமல், அதிலிருந்து வெளியே வரவே முடியாது.

.

இன்றைக்கே ஒரு தீர்மானம் எடுங்கள், நான் இத்தனை நாட்கள் இந்த பாவ சேற்றில் இருந்தது போதும், இத்தனை நாள் இந்த மோசமான நிலையில் இருந்தது போதும், யாரும் உதவிட முடியாத நிலையில் நான் காலம் கழித்தது போதும், இனி வெளியே வருவேன், இருக்கும் இந்த அசுத்தமான, மோசமான நிலையில் இருந்து வெளியே வருவேன் என்று ஒரு தீர்மானம் எடுங்கள். நீங்கள் எடுக்கும் தீர்மானம்தான் உங்கள் வாழ்வை நன்மையாகவோ, தீமையாகவோ மாற்ற போகிறது. மேலே கண்ட மூவரும், தங்கள் வாழ்வை நன்மைக்கேதுவாக மாற்ற தீர்மானம் செய்தார்கள். அதன்படி செய்தார்கள், வெளியே வந்தார்கள். தேவன் அவர்களுக்கு உதவினார்;.

.

நீங்களாக தீர்மானம் எடுக்காதவரை தேவனும் கூட உங்களுக்கு உதவ முடியாது. ஆகவே இன்றே இவற்றை விட்டு விடுவேன், திரும்ப இந்த காரியத்தை செய்ய மாட்டேன் என்று முடிவெடுங்கள். அதை திரும்ப செய்ய வேண்டும் என்று ஆசை வந்தாலும், எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் நில்லுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு உதவ முன்வருவார்;. பாவத்திற்கு எதிர்த்து நில்லுங்கள், பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். இதுவரை வாழ்ந்த நிலையிலிருந்து உங்கள் வாழ்வை வேறு நல்ல திசைக்கு மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. இன்றே இப்பொழுதே முடிவெடுங்கள். அதிலே நிலைத்திருங்கள். தேவன் தாமே உங்களுக்கு உதவி செய்வார். ஆமென் அல்லேலூயா!

.

யார் வேண்டும் நாதா நீரல்லவோ

எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ

பாழாகும் லோகம் வேண்டாமையா

வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

.

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்

பேரின்ப நாதா நீர் போதாதா

யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ

எங்கே நான் போவேன் உம்மையல்லால்

ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, நாங்களாக தெரிந்து கொண்டு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிற மோசமான நாங்களே விரும்பாத இந்த நிலையிலிருந்து வெளிவர வாஞ்சிக்கிறோம் ஐயா. இதிலிருந்து வெளிவரும்படியாக ஒரு நல்ல தீர்மானத்தை எடுக்கிறோம். எங்களுக்கு உம்மையல்லாமல் வேறு தஞ்சமில்லை என்பதை உணர்ந்தவர்களாக, எங்களுக்கு நல்ல வழிகாட்டும் உம்மையே பற்றி கொள்கிறோம். எங்களுக்கு விடுதலையை கட்டளையிட்டருளும். நாங்கள் எடுக்கும் தீர்மானத்தில் நிலைத்திருக்க உதவி செய்யும். நீர் அப்படி செய்வதற்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.