நல்ல மேய்ப்பனின் ஆடுகள்

நல்ல மேய்ப்பனின் ஆடுகள்

மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது (யோவான் 10:4)

ஒரு போதகர் தன் சபையினரோடு புண்ணிய ஸ்தலமாகிய இஸ்ரவேலுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஒவ்வொரு இடத்திலும் நின்று அந்த இடத்தின் அருமையை குறித்து சொல்லி கொண்டு வந்தார். அப்போது யோவான் 10ஆம் அதிகாரத்தை எடுத்து, அதன் உவமையை எடுத்து சொல்லி, ‘ஆடுகளை மேய்க்கின்ற மேய்ப்பன் தன் ஆடுகளை வெளியே விட்டு, அவைகளுக்கு முன்பாக நடந்து போகிறான்’ என்ற பகுதியை எடுத்து வாசித்து, அதை விளக்க ஆரம்பித்தார். ‘இந்த இஸ்ரவேல் தேசத்திலும் இன்னும் மேய்ப்பர்கள் ஆடுகளை மேய்த்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆடுகளுக்கு முன்பாக சென்று, எதிர் கொண்டு வரும் எல்லா அபாயங்களிலிருந்தும் தன் ஆடுகளை காப்பாற்றுகிறார்கள்’ என்று விளக்கி கொண்டு இருந்தார்.

.

அவர் அப்படி விளக்கி கொண்டு இருக்கும் நேரத்தில் ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை அந்த பக்கமாக ஓட்டி கொண்டு வந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் போதகர் சொன்னது போல அவைகளுக்கு முன்பாக செல்லாமல், அவைகளுக்கு பின்பாக சென்றும், மற்றும் அவைகளை துரத்தி கொண்டு செல்லுகிறது போலவும் இருந்தது. இதை கண்ட போதகரின் முகம் சிவந்தது. நான் இப்படி சொல்லி கொண்டிக்கும்போது, இந்த மேய்ப்பன் இப்படி செய்கிறானே என்று நினைத்தவராக, ஓடிப்போய் அந்த மேய்ப்பனிடம், ‘நான் கேட்டிருக்கிறேன், மேய்ப்பன் தன் ஆடுகளுக்கு முன்பாக நடப்பான் என்று, ஆனால் நீரோ பின்னாக செல்கிறீரே’ என்று கேட்டார். அதற்கு அந்த மேய்ப்பன், ‘நான் மேய்ப்பனல்ல, இந்த ஆடுகளை பிடித்து, வெட்டுவதற்காக அவைகளை பிடிக்க சென்று கொண்டிருக்கிறேன்’ என்றான்.

.

நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக தன் ஜீவனையும் கொடுக்கிறான் என்று வேதத்தில் வாசிக்கிறோம். நானே நல்ல மேய்ப்பன் என்ற இயேசுகிறிஸ்து தம் ஆடுகளாகிய நமக்காக தம் ஜீவனையே கொடுத்தார். கொடுத்து நம்மை சத்துருவின் பிடியிலிருந்து மீட்டு கொண்டார்.

.

அந்தப்படியே இந்நாட்களில் சபையாகிய மந்தையை மேய்க்கின்ற மேய்ப்பர்கள் தங்கள் சபை மக்களாகிய ஆடுகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு தன் நிருபத்தில் ‘உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்’ (1பேதுரு 5:2-3) என்று மேய்ப்பர்களுக்கு அறிவுறுத்துகிறார். மேய்ப்பர்களாயிருப்பவர்கள் மந்தைக்கு பின்னாக சென்று துரத்துகிறவர்களாக அல்ல, முன்னாக சென்று, மந்தைக்கு மாதிரிகளாக, ஓநாய்களோ, எந்த மிருகங்களோ பிடித்து சென்று விடாதபடி காத்து கொள்ள வேண்டும்.

.நல்ல மேய்ப்பனுக்கு ஆடுகளும் அடங்கி, அவருடைய சொல்லுக்கு கீழ்ப்பட்டு மந்தையில் இருக்க வேண்டும். ‘ஏனென்றால், மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும்’ (அப்போஸ்தலர் 20:29) என்று அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்திருக்கிறார். அந்த ஓநாய் போன்ற கள்ள உபதேசங்கள், சபைக்கு உள்ளே நுழைந்து, பெலவீனப்பட்டிருக்கிற ஆடுகளை பிடித்து கொண்டு போய் விடும் நாட்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர்களுக்கு சபைக்கு செல்லும் ஆத்துமாக்கள் மேல்தான் எல்லா கவனமும்! ஆகவே கவனத்துடன் இருக்க வேண்டும்.

.

ஒரு நல்ல சத்தியத்தின்படி போதிக்கப்படுகிற சபையில் இருந்த ஒரு சகோதரி, வசனத்தில் ஆழமாக ஊன்றக்கட்டப்படாததால், கள்ள உபதேசத்திற்கு செவி கொடுத்து, அந்த சபையை விட்டே வெளியே சென்ற பரிதாப நிலைமைகள் உண்டு. சபையில் போதகர்கள் கர்த்தரிடத்தில் காத்திருந்து நல்ல செய்திகளை சபைக்கு தருகிறார்கள். ஆனால் அவற்றை நாம் எப்படி எடுத்து கொள்கிறோம் என்பதை பொறுத்தே அதன் விளைவு இருக்கிறது.

.

வசனத்தை கருத்தோடு கேட்டு, அதன்படி நடக்க தீர்மானம் செய்கிறவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதையை போல நூறுமடங்கு சபைக்கும் சமுதாயத்திற்கும் பிரயோஜனமாயிருக்க முடியும். ஏதோ சபைக்கு வந்தோம், வசனத்தை கேட்டோம் என்று போகிறவர்களால், வசனத்தில் ஆழமாக ஊன்றி நிற்க முடியாது. அவற்றை அவர்கள் கேட்டும், அது உள்ளே செல்லாததால், அவர்களுக்கும் அது பிரயோஜனமாயிராது, அவர்களால் மற்றவர்களுக்கும் பிரயோஜனம் இருக்காது.

.

நல்ல மேய்ப்பர்களை கர்த்தர் கிருபையாய் நமக்கு தருகிறார். ஆனால் அவர்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்டு, பிரயோஜனமாயிருக்கும் சபை மக்கள் மிகவும் குறைவு. இதை மிகுந்த துக்கத்தோடு எழுதுகிறேன். நன்கு வளர்ந்த விசுவாசிகள் என்று சொல்கிறவர்கள் கூட விசுவாசத்தில் உறுதியாய் நிற்பதில்லை. கர்த்தருடைய வார்த்தை சொல்லும் வண்ணம் ஜீவிப்பதில்லை. எப்பொழுதும் குறைவுள்ளவர்களாக, மனபாரம் உள்ளவர்களாக, முறையிடுகிறவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அனைவரையும் சொல்லவில்லை. விசுவாசத்தில் உறுதிப்பட்ட விசுவாசிகளும் உண்டு. ஆனால் அதிகபட்சமான மக்கள் நாங்களும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டு ஏதோ ஒரு வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

.

பிரியமானவர்களே, நம்முடைய தாழ்ந்த, குறைவுள்ள சிந்தனைகளை மாற்றுவோம். கர்த்தரின் வார்த்தையை அனுதினமும் வாசித்து அதன்படி வாழ முயற்சிப்போம். போதகர்கள் கர்;த்தருடைய பாதத்தில் அமர்ந்து பெற்றுதரும் கர்த்தருடைய வார்த்தைகளை உட்கொண்டு, அவற்றை அனுதின ஜீவியத்தில் அப்பியாசித்து, சபைக்கும் சமுதாயத்திற்கும் பிரயோஜனமாயிருப்போம். நல்ல நிலத்திலே விழுந்த விதையை போல முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் கொடுக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

நல்ல மேய்ப்பன் குரலை கேட்பேன்

நாளும் பின்தொடர்வேன்

தோளில் அமர்ந்து கவலை மறந்து

தொடர்ந்து பயணம் செய்வேன்

எனது தலைவன் இயேசு ராஜன்

மார்பில் சாய்ந்து சாய்ந்து

மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நல்ல மேய்ப்பனுக்கு செவிகொடுக்கும் ஆடுகளாக மேய்ப்பனின் சொல் கேட்டு நடக்கும் ஆடுகளாக எங்கள் ஒவ்வொருவரையும் வழிநடத்தும். ஓநாய் போன்ற கள்ள உபதேசங்களுக்கு ஒவ்வொரு சபை மக்களையும் விலக்கி காத்து கொள்ளும். சத்தியத்தை கேட்கிற மக்கள், அதன்படி நடக்கவும், தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பிரயோஜனம் உள்ளவர்களாக மாற்றும். நூறு மடங்கு பலன் கொடுக்கிறவர்களாக ஒவ்வொருவரையும் மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.