போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள் (1 கொரிந்தியர் 11:25-26)
ஒரு இந்தியாவில் உள்ள தாஜ்மகால் மிகவும் அழகிய புகழ்பெற்ற கட்டிடமாகும். தன் மனைவி நூர்ஜகானின் நினைவாக, அவள் மேல் தான் வைத்த அன்பை வெளிப்படுத்தும் வண்ணமாக மொகாலய பேரரசர் ஷாஜகான் கட்டின நினைவு மண்டபம் தான் இந்த தாஜ்மகால். நூர் ஜகானின் சரீரம் இந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதை கட்டி முடிக்க 22 வருடங்கள் ஆனது. இந்த தாஜ்மகாலை பார்க்க உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். உலக அதிசயங்களில் ஒன்றாக இந்த தாஜ்மகால் இன்றும் விளங்குகிறது.
.
அநேக தேவாலயங்களும் அந்த இடத்தில் ஊழியம் செய்த ஊழியர்களின் ஞாபகார்த்தமாய் கட்டப்பட்டிருப்பதை நாம் காணலாம். உதாரணத்திற்கு சேலத்தில் உள்ள லெக்லர் ஞாபகார்த்த ஆலயம், வேலூரில் உள்ள இராட்சேபர் ஞாபகார்த்த ஆலயம் என்று… ஆனால் எங்கும் கிறிஸ்து ஞாபகார்த்த ஆலயம் என்று நாம் பார்க்கவே முடியாது. ஏனெனில் அவர் மரித்தவர் அல்ல, மரித்து உயிரோடு எழுந்தவர். உயிரோடு இருப்பவர்களுக்கு ஞாபகார்த்த மண்டபமோ, கோபுரங்களோ, ஆலயங்களோ தேவையில்லை.
.
இன்னும் ஆயிரக்கணக்கானோர் போய் பார்க்கும் இன்னொரு இடமும் உள்ளது. அது எருசலேமில் உள்ளது. அது இயேசுகிறிஸ்துவின் சரீரம் வைக்கப்பட்ட இடம். ஆனால் அவருடைய சரீரம் இந்த இடத்தில் சில நாட்களே வைக்கப்பட்டிருந்தது. அது இப்போது அங்கு இல்லை. அவர் தாம் சொன்னபடியே மூன்றாம் உயிரோடு எழுந்தார்.
.
எருசலேமில் இரண்டு இடங்களில் இதுதான் இயேசுகிறிஸ்துவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடம் என்று சொல்லுகின்றனர். ஓன்று ஹோலி செபல்கர் (Holy Sepulchre) என்று சொல்லப்படும் இடம், மற்றொன்று கபால மலை என்று சொல்லப்படும் கொல்கதா மலையின் அருகில் இருக்கும் குகை போன்ற கல்லறை. இவை இரண்டில் எது உண்மையானது என்று நமக்கு தெரியாவிட்டாலும், ஒன்று மட்டும் நிச்சயம், இயேசுகிறிஸ்து அந்த இரண்டிலும் இல்லை. அவர் உயிரோடு எழுந்தார் என்பதே!
கிறிஸ்து தம்மை நினைவு கூரும்படி பெரிய மாளிகைகளையோ, கோபுரங்களையோ, மண்டபங்களையோ கட்ட சொல்லவில்லை. ஆனால் ஒரு காரியத்தை செய்ய சொன்னார். அதுதான் இராப்போஜனமாகிய கர்த்தருடைய பந்தி. அதில் நாம் பங்கு பெறும்போதெல்லாம் அவருடைய மரணத்தை நாம் நினைவு கூருகிறோம். ஏனெனில் ‘என்னை நினைவுகூரும்படி இதை செய்யுங்கள்’ என்று அவர் கட்டளையிட்டு சென்றிருக்கிறபடியால், நாம் அதில் கண்டிப்பாய் பங்கு பெற வேண்டும்.
.
கர்த்தருடைய பந்தி என்பது பரிசுத்தமான பந்தி. அதில் அசுத்தமானவர்களுக்கும் பாவிகளுக்கும் பங்கு இல்லை. அதில் பங்கு பெறுகிறவர்கள் பரிசுத்தமாய் பங்கு பெற வேண்டும். இரட்சிப்பின் நிச்சயத்தையும், தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் பங்கு பெறும்போது, பக்தியோடும், பரிசுதத்ததோடும் அவருடைய மரணத்தை நினைவுகூர்ந்தவர்களாக பங்கு பெற வேண்டும்.
.
‘கர்த்தருடைய சரீரம் எனக்காக பிட்கப்பட்டது, அதில் பங்கு பெறும் எனக்கு அவருடைய சரீரத்தில் பட்ட தழும்புகளால் நான் குணமானேன் என்ற வசனத்தின்படி, தேவன் எனக்கு பரிபூரண சுகத்தை இதில் வைத்திருக்கிறார். அதன்படி தேவன் எனக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறார்’ என்றும், அவருடைய திருஇரத்தத்தை பானம்பண்ணும்போது, ‘கிறிஸ்துவின் திரு இரத்தம், பரிசுத்த இரத்தம், நீதிமானாகிய அவருடைய இரத்தம், என் சரீரத்தில் பாய்ந்து செல்லும்போது, என் சரீரத்தில் காணப்படும் பாவங்களும், சாபங்களும், நோய்களும் மாறிப்போக போவதற்காக ஸ்தோத்திரம்’ என்றும் நினைத்தவர்களாக, ஜெபித்தவர்களாக, சிலுவையில் எனக்காக நீர் பட்ட எல்லா பாடுகளுக்காகவும் நன்றி என்று சொல்லி, அவருடைய மரணத்தை நினைவுகூர்ந்தவர்களாக பங்கு பெற வேண்டும். அப்படிப்பட்டவர்களாக, பாத்திரமுள்ளவர்களாக கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற்று அவருடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.
என் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டீர்
என் அக்கிரமங்கட்காய் நீர் நொறுக்கப்பட்டீர்
எனக்காகவே அடிகள் பட்டீர்
என்னை உயர்த்த தம்மை தாழ்த்தினீர்
இயேசுகிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசுகிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோ தகப்பனே, எத்தனையோ பேர் தங்கள் பெயர் விளங்கும்படியாக, பெரிய பெரிய மண்டபங்களையும், கோபுரங்களையும் கட்டி கொண்டு இருக்கும்போது, உமது குமாரனாகிய கிறிஸ்துவோ என்னை நினைவுகூரும்படி இதை செய்யுங்கள் என்று கர்த்தருடைய பந்தியை எங்களை ஆசரிக்கும்படியாக கட்டளையிட்டு சென்றிருக்கிறபடியால் நாங்கள் அந்த பந்தியை பயத்தோடும், பரிசுத்தத்தோடும் ஆசரிக்க எங்களுக்கு கிருபை செய்யும். எங்களுக்கென்று பந்தியின் மூலமாக அநேக ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறபடியால், பாத்திரவான்களாக அதில் பங்கு பெற்று அவற்றை சுதந்தரித்து கொள்ள கிருபை செய்வீராக.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.