பாவம் தொடர்ந்து பிடிக்கும்

பாவம் தொடர்ந்து பிடிக்கும்

‘.. உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்’. – (எண்ணாகமம் 32:23).

ஒரு முறை விஞ்ஞானிகள் பரிசோதனை ஒன்றை மேற்கொண்டனர். அது என்னவென்றால், ஒரு பாத்திரத்தில் நன்றாக சூடாக்கப்பட்ட தண்ணீரில் ஒரு தவளையை போட்டனர். அது மறு வினாடியே துள்ளி குதித்து வெளியே வந்தது. பின் மற்றொரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீரை எடுத்து அதில் ஒரு தவளையை விட்டனர். முதலில் அது மிகவும் மகிழ்ச்சியாக சுற்றி வந்தது. பின் அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி கொண்டே வந்தனர். தவளையும் எவ்வித வித்தியாச உணர்வுமின்றி வெதுவெதுப்பான நீரில் சுகமாய் நீந்தி கொண்டு வந்தது. தண்ணீரும் சற்று நேரத்தில் நன்றாக சூடானது. நீந்தி கொண்டிருந்த தவளை சிறிது சிறிதாக தன் பெலனை இழந்து வெளிவர நினைத்தும் முடியாமல் செத்து பரிதாபமாக மிதந்தது.

நமது வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவம் நடக்கின்றன. திடீரென்று பாவத்தில் விழும்போது ஐயோ இது பாவமல்லவா, இதன் விளைவு மரணமல்லவா என உணர்வடைந்து பாவத்தின் தண்டனைக்கு தப்பித்து கொள்கிறோம். இதை நன்கு அறிந்து கொண்ட எதிரியான பிசாசானவன் வஞ்சகமாய் நம்மை வீழ்த்த பார்க்கிறான். அதற்கு அவன் எடுக்கும் யுக்தி என்ன? பிசாசானவன் நம்மை சிறுவயது முதலே பாவத்தில் மூழ்கடித்து அதன் விளைவையும் சிந்திக்க விடாமல் பாவத்தில் விளையாட வைக்கிறான். பின் பாவம் கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை ஆட்கொள்கிறது. பாவ உணர்வு முற்றிலும் அற்று போகிறது. அங்கு தேவனின் கிருபை எடுக்கப்பட்டு போகிறது.

அதினிமித்தம் பாவத்திற்கு ஏற்ற தண்டனை வரும்போது அதிலிருந்து தப்பிக்க துடிக்கிறோம. அதற்குள் பாவத்திற்குரிய தண்டனை நம்மை பிடித்து கொள்கிறது. இந்நாட்களில் பிரசங்க பீடத்தில் பாவத்தை குறித்ததான எச்சரிப்பும் பாவத்தின் விளைவும் அதிகமாய் போதிக்கப்படுவதில்லை. இயேசு சுகமாக்குகிறவர், அற்புதம் செய்கிறவர், ஆறுதல் அளிப்பவர், ஆசீர்வதிப்பவர் என்பது மட்டுமே போதிக்கப்படுகிறது. ஆகவே சிறு தவறுகள் செய்தால் அவைகளெல்லாம் பாவமல்ல என்பது போன்ற உணர்வு மக்கள் மனதில் வந்து விட்டது. தேவனோடு நெருங்கி சேர சேர நமது சிறு தவறுகளும் பெரிதாக தோன்றும் அனுபவமெல்லாம் அநேகருக்கு இல்லை. ஆகவே இநத கடைசி காலத்தில் பாவ உணர்வு அற்றவர்களாக மாறி விடாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

இதை வாசிக்கும் பிரியமானவர்களே, நீங்களும் சாத்தானின் வஞ்சக திட்டத்தில் விழுந்து பாவத்தில் உழன்று கொண்டிருக்கிறீர்களோ? இது பாவம் என்ற உணர்வு இல்லாதவர்களாய் உங்கள் மனது உணர்வற்றதாய் மாறி விட்டதோ? தேவ வார்த்தை உங்கள் பாவத்தை சுட்டிகாட்டும்போது இதயத்தை கடினப்படுத்துகிறீர்களோ? பார்வோன் தேவ ஜனத்தை அனுப்பி விடாதபடி தன் இருதயத்தை ஆரம்பத்தில் கடினப்படுத்தினான்.

ஆவன் கடினப்படுத்த கடினப்படுத்த தேவ கோபம் அதிகமாய் அவன் மேல் இறங்கி வந்தது. பின் தேவனே அவனுடைய இருதயத்தை கடினப்படித்தினார். அவன் தன் நாட்டின் அநேக அருமையான காரியங்களையும், கடைசியில் தன் தலைச்சன் மகனையும் இழக்க வேண்டியதானது. தேவனுடைய எச்சரிப்பின் சத்தத்திற்கு செவிகொடுங்கள். இன்று பாவம் செய்ய உஙகளோடு உடன்படுகிறவர்கள் நியாயத்தீர்ப்பு நாளிலே உங்கள் அருகில் நிற்பதில்லை. எவ்வித சாக்கு போக்கும் அங்கு செல்லாது. உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள். நீதிபதியாம் கிறிஸ்துவின் முன்பு குற்றவாளியாக நீங்கள் தனியாக நின்று செய்த பாவத்திற்கு கூலியாக நரக ஆக்கினை அடைய வேண்டியதாயிருக்கும். அங்கு மனம் கசந்து கதறினாலும் மன்னிப்பிற்கு இடமில்லை. இன்றே இரட்சண்ய நாள், இன்றே மனந்திரும்புங்கள். கர்த்தர் மன்னித்து மறுவாழ்வு கொடுப்பார். ஆமென் அல்லேலூயா!

பாவத்தின் பலன் மரணம் மரணம் – ஓ

பாவி நடுங்கிடாயோ

கண் காண்பதெல்லாம் அழியும் அழியும்

காணாததல்லோ நிச்சயம்

இயேசு ராஜா வருவார் இன்னும் கொஞ்ச காலம்தான்

மோட்ச லோகம் சேர்ந்திடுவோம்

ஜெபம்:

எங்கள் அன்பின பரலோக தந்தையே, பாவத்தின் பலன் மரணம் என்பதை நிச்சயமாக நாங்கள் உணர்ந்து எந்த பாவத்தின் கட்டுகளிலிருந்தும் வெளிவர தேவன் கிருபை செய்வீராக. பாவத்தின் அநீதத்தில் களிகூர்ந்து, பின் வெளி வர முடியாமல், அதன் பலனாகிய மரணத்தை, நித்திய நரகத்தை நாங்கள் சென்று அடையாதபடி, தேவன் இப்போது கொடுத்திருக்கும் தருணத்தில், கிருபையின் காலத்தில் பாவத்திலிருந்து வெளிவந்து பரிசுத்தமாய் ஜீவிக்க கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.