பொறுப்பான தாய்

பொறுப்பான தாய்

அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள். – (நீதிமொழிகள் 31:28).

ஒரு கிராமத்தில் தன் ஒன்றறை வயது மகனை கூட்டிக்கொண்டு ஒரு தாய் ஆற்றிற்கு குளிக்க சென்றாள். ஆற்றங்கரையில் மகனை உட்கார வைத்து விட்டு துணிகளை துவைக்க தொடங்கினாள். சற்று நேரத்தில் ஆற்று நீரில் ஏதோ பளபளப்பாக மிதந்து வருவதை கண்டு வேகமாக நீந்தி சென்று அதை போய் அடைந்தாள். ஆனால் அது ஏதோ ஒரு மினுமினுப்பான கலர் பேப்பர் என அறிந்து அதை விட்டு விட்டு கரைக்கு வந்தாள். வந்தால் கரையில் உட்கார வைத்திருந்த பிள்ளையை காணவில்லை. பதறி போய் எல்லா இடத்திலும் தேடினாள். அந்தோ பரிதாபம், பிள்ளை ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டிருந்தான். பிள்ளையை விட ஏதோ தேவையில்லாத காரியத்தின் மேல் முக்கியம் என்று நினைத்து போய் பிள்ளையை இழந்தாளே!

இன்று அநேக தாய்மார்களுக்கு பிள்ளையை விட ஆபீஸ் வேலை, தொலை காட்சி சீரியல்கள், அண்டை வீட்டாரோடு அநாவிசிய பேச்சு போன்றவை தான் முக்கியமாக தோன்றுகிறது. பிள்ளைகள் பள்ளிக்கு சென்ற உடன், வேகவேகமாக சமையலை முடித்து விட்டு, டிவி பெட்டிக்கு முன் உட்கார்ந்து வரிசையாக சீரியல் பார்க்கும் தாய்மார்கள் அநேகர் உண்டு. தாங்கள் சீரியலை பார்க்க வேண்டும் என்பதற்காகவே பிள்ளைகளை டியூஷன் அனுப்பும் தாய்மார்கள் உண்டு. டிவி காரர்கள், தாங்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கண்ட கண்ட கதைகளை சீரியல் என்று போட்டு காட்டி கொண்டு இருக்கிறார்கள். அதை வேலையை விட்டு பார்க்கும் நம் தாய்மார்களை என்னவென்று சொல்வது? தாங்கள் ஊர்க்கதை பேச வேண்டும் என்பதற்காகவே அந்த நேரத்தில் பிள்ளைகளை நீ போய் டிவி பாரு என்று சொல்லும் தாய்மார்களும் உண்டு.

வேதம் ஒரு தாய்க்கு சொல்லும் அறிவுரை என்ன? தன் பிள்ளைக்கு தயையுள்ள போதகம் பண்ணுகிறவளாக இருக்க வேண்டும் (நீதிமொழிகள் 31:26). பிள்ளைகள் தவறு செய்யும்போது கடிந்து கொணடு புத்தி சொல்லி தேவைப்படும் போது பிரம்பை கையாடுகிறவளாயும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அன்போடும், பொறுமையோடும் நடந்து கொள்ளுகிறவளாயும் திகழ வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தருக்கு பயப்படும் பயத்தை சொல்லி கொடுக்க வேண்டும்.

பிரியமான தாய்மாரே! தேவன் நம்மை நம்பி கொடுத்திருக்கிற பிள்ளைகளை கருவிலிருந்தே பாதுகாப்போடு வளர்ப்பது நமது கடமை. பிள்ளை வளரும்போது அவர்களுக்கு தேவையான சத்தான சுகாதாரமான உணவை வீட்டிலேயே தயாரித்து கொடுங்கள். பிள்ளை போதுமென்ற பின் கட்டாயமாக திணிக்காதீர்கள். நீங்கள் ஒரளவு படித்த தாய் என்றால் பிள்ளையை டியூஷனுக்கு விரட்டாமல் வீட்டிலேயே புரிந்து கொள்ளும் விதத்தில் பாடங்களை செயல் முறையோடு சொல்லி கொடுங்கள். படிப்பில் பிள்ளை மேல் தாயகாட்டும் அக்கறையும் கவனமும் தனிதானே. பிள்ளைகளுக்கு வேதத்தை கற்று கொடுப்பது சண்டே கிளாஸ் டீச்சரின் பொறுப்பு என்று விட்டு விடாமல், நீங்களும் வேதாகம் சம்பவங்களை கூறி, வசனங்களை மனனம் செய்ய வையுங்கள்.

குடும்ப ஜெபம் செய்யுங்கள். தவறாமல் ஆலயம் செல்லுங்கள். பெண் பிள்ளைகளாய் இருந்தால் அவர்கள் என்ன உடுத்துகிறார்கள், எப்படி உடுத்துகிறார்கள் என்பதில் தனி கவனம் செலுத்துங்கள். அவள் ரொம்ப பேஷன் என்று சொல்லி, தேவையில்லாத உடலை காட்டக்கூடிய உடைகளை வாங்கி தராதீர்கள். அதற்காக பிள்ளை உங்களிடம் கோப பட்டால், கண்டிப்பாய் இருங்கள். பிள்ளைகளின் உடல் சுத்தத்தை குறித்து கற்று தாருங்கள். தலையை எப்படி வார வேண்டும், சுத்தமாய் வைத்து கொள்ளவேண்டும் என்று கற்று தாருங்கள். பிள்ளை வளர்ப்பது பணிப்பெண்ணின் வேலை என்று எண்ணி, பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி விடாதீர்கள். ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுக்காக கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும். பிள்ளைகள் கெட்ட நண்பர்களோடு சேர்ந்து விடாதபடிக்கு, கெட்ட பழக்கங்களை கற்று கொண்டு விடாதபடிக்கு கர்த்தர் பாதுகாத்து கொள்ளும்படியாக அவரிடம் மன்றாட வேண்டும்.

பிள்ளைகளின் தாலந்துகளை கண்டறிந்து அவைகளை உற்சாகப் படுத்த வேண்டும். அதை உலக காரியத்திற்காக பயன்படுத்தாதபடிக்கு கர்த்தருக்கென்று பயன்படுத்தும்படியாய் சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு கற்று தர வேண்டும். கெட்ட வார்த்தை ஒன்றும் வாயில் வராதபடி, பிள்ளைகளை வளர்க்க வேண்டும். சில நேரங்களில் பெற்றோர் பேசுவதை கேட்டு பிள்ளைகளும் அதை வேகமாக கற்று கொள்வார்கள். பிள்ளைகள் முன்பு அப்படிப்பட்ட வார்த்தைகளை பேசாதபடி உங்களை காத்து கொள்ளுங்கள். சனியனே, தரித்திரமே பிசாசே என்றெல்லாம் பிள்ளைகளை திட்டாதீர்கள். மிருகங்களின் பெயர்களையும் சொல்லி பிள்ளைகளை அழைக்காதீர்கள்.

அவர்களுக்கு பெயர் உண்டு, அது பரலோகத்திலும் எழுதப்பட்டிருக்கிறபடியால், அவர்களின் பெயரை சொல்லி அழையுங்கள். சிறுவயதிலிருந்தே ஜெபிக்க கற்று கொடுங்கள். குடும்ப ஜெபத்தில் பிள்ளைகளும் ஜெபிக்கட்டும். சத்தமாய் ஜெபிக்கும்போது அவர்கள் இன்னும் அழகாய் ஜெபிக்க கற்று கொள்வார்கள்.

இவைகளை செய்து வளர்த்தால் உங்கள் பிள்ளைகள் எழும்பி உங்களை பாக்கியவதி என்பார்கள். ஆமென் அல்லேலூயா!

ஓரு தாய் தேற்றுவது போல்

என் நேசர் தேற்றுவார்

மார்போடு அணைப்பாரே

மனக்கவலை தீர்ப்பாரே

ஜெபம்:

ஒரு தாயை போல எங்களை தேற்றி அணைக்கிற எங்கள் நல்ல கர்த்தரே உம்மை துதிக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவ தாய்மாரும் தங்களுக்கு கிருபையாக தேவன் கொடுத்த பிள்ளைகளின் மேல் உள்ள பொறுப்பை உணர்ந்து பிள்ளைகளை உமக்குள் வளர்க்க கிருபை செய்வீராக. தேவனுக்கு பயந்து பெற்றோருக்கு கீழ்ப்படிகிற பிள்ளைகளாக ஒவ்வொரு பிள்ளையையும் வளர்க்கவும், தேவ பக்தியுள்ள பிள்ளைகளாக வளர்க்கவும் ஏற்ற ஞானத்தை தருவீராக. அவர்களுடைய பிள்ளைகள் எழும்பி அவர்களை பாக்கியவதி என்றழைக்கதக்கதாக தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள ஒவ்வொரு தாய்மாருக்கும் கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.