நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். – (கலாத்தியர் 4:1-5).
மாவீரன் அலெக்ஸாண்டரை பற்றி அறியாதவர்கள் யாரும் சரித்திரம் படித்தவர்களாக இருக்க முடியாது. தனது இள வயதில் மேசிடோனியாவின் அரசனான அவர், உலகத்தையே தன் காலின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற தாகத்தோடு செயல்பட்டவர். பத்து வருடங்களில் உலகத்தை வென்று கொண்டே வந்தவர். அப்படி அவர் ஜெயித்து கொண்டே வந்தபோது, ஒவ்வொரு நாட்டிலும் பேசும் மொழிகளை குறித்தும், அவர்களுடைய கலாச்சாரங்களை குறித்தும் அவர் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார். ஏனெனில் அவர் வெற்றி எடுக்கும் நாடுகளில் எந்த மொழியில் பேசுவது, எப்படி செல்வது என்று யோசித்து கொண்டிருந்தார். அதன்படி, அவர் தான் வெற்றி கொள்ளும் நாடுகளில் காலனிகளை அமைத்து, அங்கு கிரேக்க கலாச்சாரங்களை கற்பிக்க ஆரம்பித்தார்.
இந்த காரியங்கள் தேவனால் நியமிக்கப்பட்டது என்ற அலெக்சாண்டருக்கு தெரியாது. அவர், தான் உலகத்தையே வென்று, எல்லாரையும் தன் காலின் கீழ் கொண்டு வருவதாக நினைத்து கொண்டிருந்தார்.
தனது திட்டத்தின்படி காலனிகளில் அவர் கிரேக்க மொழியை கற்று கொடுக்க திட்டங்கள் தீட்டி, அதன்படி அவர் ஆட்களை கொண்டு அந்த இடங்களில் கிரேக்க மொழியை கற்று கொடுத்து, மக்கள் அதை பயில ஆரம்பித்தனர். அதனால் தான் செல்லும் இடங்களில் கிரேக்க மொழியில் பேச முடியும் என்பது அவர் எண்ணம். மட்டுமல்ல, அந்த நாடுகளில் முக்கிய பாதைகளையும் அவர் உண்டாக்க ஆரம்பித்தார். தான் பயணம் செல்லும்போது, தனக்கு வசதியாக இருக்கும் என்று காடுகளை வெட்டியும், ஒரு நாட்டிலிருந்து மற்ற நாடுகளை இணைக்கும் பாதைகளை போட ஆரம்பித்தார். அவர் தான் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த காரியங்களை செய்தார். ஆனால் சர்வ ஞானியான நம் தேவன் அவற்றை குறித்து வேறு திட்டம் வைத்திருந்தார். அதன்படி, தனது 33 ஆவது வயதில் தான் மரிக்கும்முன், உலகமெங்கும் சுவிசேஷம் பரவுவதற்கான முக்கிய இரண்டு பணிகளை அவர் செய்து முடித்திருந்தார். அதாவது மொழி, மற்றும் நாடுகளுக்கு செல்வதற்கான சரியான பாதைகள்! கிறிஸ்துவுக்கு முன் 356 ஆம் ஆண்டு பிறந்த அவர், ராஜாதி ராஜாவின் சுவிசேஷம் பரவுவதற்கான பாதையை செம்மையாக்கினவராய் மாறினார். அவர் தான் செய்வது எதற்காக என்று அறியாதபடி செய்தார். ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன் அவற்றை தமது குமாரனை உலகத்திற்கு அனுப்புவதற்கான நோக்கத்தை உலக மக்கள் அறியும்படியாக அதை தமக்கு சாதகமாக்கினார்.
காலம் நிறைவேறினபோது, கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, நமக்கு இரட்சிப்பை, சிலுவையில் தமது சொந்த இரத்தத்தை சிந்தி வாங்கி கொடுத்து, அந்த சுவிசேஷத்தை சுவிசேஷகர்கள் உலகமெங்கும் பிரசித்தப்படுத்தும்படி, நல்ல பாதையையும், மொழியையும் அலெக்சாண்டர் மூலமாக செய்து கொடுத்தார். உலகத்தின் சரித்திரம் தேவனுடைய கைகளில்! அவர் அறியாமல் ஒரு அணுவும் அசைய முடியாது. அவர் தீமையையும் நன்மையாக மாற்றுகிற தேவன். ஒரு மனிதன் தன் பெருமைக்காக, தன் பெயர் நிலைத்திருக்கும்படியாக செய்த காரியங்களை நமது தேவன் தமது குமாரனின் பெயர் அறியாத மக்களுக்கு அறிவிக்கும்படியாக, தெரியாத, இருளில் வாழும் மக்களுக்கு தெரிவிக்கும்படியாக மாற்றினார். அல்லேலூயா!
இன்று நீங்கள் உங்கள் வாழ்வின் பிரச்சனைகளை கண்டு, என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறீர்களா? நமது காலங்கள் நமது தேவனின் கரத்தில் இருப்பதால், எதை குறித்தும் கலங்காதிருங்கள். நீங்கள் அவருடைய பிள்ளைகளாயிருந்தால், அவருடைய சித்தமில்லாமல் நமது வாழ்வில் எதுவும் நடப்பதில்லை. தமது குமாரன் 356 வருடங்கள் கழித்து பிறக்குமுன்னே, அவரது சுவிசேஷம் செல்வதற்கான பாதையை அமைத்த தேவன், ‘நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்’ – (ஏசாயா 43:19) என்று வாக்குதத்தம் செய்தவர், எதுவுமே இல்லாத நிலையிலும், நமக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பார். வனாந்திரத்தில் நாம் வழியை எதிர்ப்பார்க்க முடியுமா? எங்கு பார்த்தாலும் மணலாய் இருக்கும். மலை மலையாக மணல் குன்றுகள். கண்ணுக்கெட்டிய தூரம் மணல்தான். அங்கு தார் போட்டு, பாதையை அமைக்க யாராலும் முடியாது. ஆனால் நமக்காக கர்த்தர் அந்த வழி தெரியாத வனாந்தரத்தில் வழியை உண்டாக்குவாராம்! எத்தனை ஆச்சரியமான தேவன் நம் தேவன்! அதுபோல நம் வாழ்விலும், கசப்பின் மேல் கசப்பு, பிரச்சனையின் மேல் பிரச்சனை வரும் நேரத்தில் அதற்கு எப்படி தப்பிப்பது என்று தவிக்கும் நேரத்தில் அதற்கு வழியை காட்டி, அதிலிருந்து நம்மை விடுவிப்பாராம் நாம் நம்பும் நம் தேவன். எத்தனை நல்லவர் அவர்! உங்கள் கவலைகளை அவர் மேல் வைத்து விடுங்கள். தேவன் பொறுப்பேற்று கொள்வார். அவர் நம்மை நடத்துவார். ஆமென் அல்லேலூயா!
இந்த வனாந்தர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிபபோமே
..
ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, கிறிஸ்து பிறப்பதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்பே, அவருடைய சுவிசேஷம் செல்லும்படியாக மாவீரன் அலெக்சாண்டர் மூலமாக வாசல்களை திறந்த தேவனே, எங்கள் வாழ்க்கையிலும் அடைக்கப்பட்டிருக்கும் வாசல்களை திறப்பீராக. ஆசீர்வாதத்தின் வாசல்கள், கிருபையின் வாசல்கள், நன்மையின் வாசல்கள், ஆரோக்கியத்தின் வாசல்கள், நல்ல குடும்ப வாழ்வின் வாசல்கள் இவற்றை எங்களுக்காக திறந்தருளும். வனாந்திரத்தில் வழிகளையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் ஓட செய்யும் தேவன் எங்கள் வாழ்க்கையிலும் இருக்கிற வனாந்திரங்களில் வழியை காட்டுவீராக. அற்புதங்களை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.