உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன் (சங்கீதம் 119:92)
ருமேனியா தேசத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஞாயிறு ஆராதனை நடந்து கொண்டிருந்தது. போர் வீரர்கள் அந்த ஆலயத்தை சூழ்ந்து கொண்டார்கள். காரணம் கிறிஸ்துவை ஆராதிப்பதற்கோ, சபை நடத்தவதற்கோ அந்த அரசாங்கம் தடை விதித்திருந்தது. ஒரு போலீஸ் அதிகாரி ஆலயத்திற்குள் வந்து, அங்கு ஆல்டரில் வைக்கப்பட்டிருந்த வேத புத்தகத்தை எடுத்து தூக்கி வீசி எறிந்தான். அது ஆலயத்தின் வாசலில் திறந்தபடி வந்து விழுந்தது.
.
‘யார் யாருக்கு உயிரின் மேல் ஆசையோ, யார் உங்கள் குழந்தைகளை பார்க்க வேண்டுமோ அவர்கள் போகலாம. ஆனால் ஒரு நிபந்தனை, போகும் முன்னால் வாசற்படியில் கிடக்கும் வேத புத்தகத்தின் மேல் காரி துப்பி விட்டு, போக வேண்டும்’ என்றான். ஆலயத்தில் அமைதி நிலவியது. ஒரு சில நிமிடங்கள் கழித்து ஒருவர் எழுந்து வேதாகத்தின் மேல் காரி துப்பி விட்டு வெளியேறினார், அவரை தொடர்ந்து மற்றவர்களும் துப்ப ஆரம்பித்தனர்.
.
ஒரு வாலிப சகோதரியால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. வேகமாக எழுந்து வாசலை நோக்கி ஓடி, தன் கரங்களினால் வேதாகமத்தை எடுத்து, தன் மார்போடு அணைத்து கொண்டாள். தன் முகத்தால் அதில் படிந்த எச்சில துடைத்தாள். ‘என் ஆத்தும நேசர் எழுதி கொடுத்த பொக்கிஷம் அல்லவா? எனக்காக ஜீவனை கொடுத்தவரின் அன்பு கடிதம் அல்லவா?’ என்று சொல்லி, முத்தமிட்டாள். அவள் முழங்காலில் நின்று வேதாகமத்தை நெஞ்சோடு அணைத்து கொண்டாள். அப்பொழுது அவள் அருகில் நின்ற போர் வீரன், தன் கையிலிருந்த துப்பாக்கி முனையிலுள்ள கூரிய கத்தியினால் அவளை குத்தி வீழ்த்தினான். வேதத்தை அணைத்தபடியே அவள் துடிதுடித்து ஜீவனை கொடுத்தாள்.
.
அவள் இரத்தசாட்சியாக மரித்த காட்சியை ஆலயத்திலுள்ள மற்ற விசுவாசிகள் கண்டபோது அவர்கள் கர்த்தருக்காக திடன் கொண்டார்கள். அவர்கள் விசுவாசம் பலப்பட்டது. அதன் பின்பு ஒருவரும் வெளியே எழுந்து செல்லவில்லை.
.
பிரியமானவர்களே, நாம் வேதத்தை எந்த அளவு நேசிக்கிறோம்? வீட்டில் அதை பத்திரமாக தூசி படாமல் பூட்டி வைத்திருக்கிறோமா? அல்லது தினமும் அதை வாசித்து, தேவன் எனக்காக எழுதி கொடுத்த அன்பு மடல் என்று அதை நமக்கு உரிமையாக்கி கொள்கிறோமா?
.
சிலருடைய வீட்டில் வேதத்தை வாசிக்க மாட்டார்கள். அதை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்கள். வெளியே வந்து சொல்வார்கள், ‘நான் வேதத்திற்கென்று ஒரு விசேஷித்த இடத்தை கட்டி வைத்திருக்கிறேன். அங்கு தான் அதை வைத்திருக்கிறேன்’ என்று. வேதம் வைத்து அழகு பார்ப்பதற்காக நம்முடைய கையில் கொடுக்கப்பட்டது இல்லை. யாரோ படித்து, நாம் அதை கேட்கும்படியாகவும், அது நமக்கு அருளப்பட்டது இல்லை. நாமே அனுதினமும் அதை வாசித்து, கர்த்தர் நமக்கு எழுதி கொடுத்த சத்தியங்களை அறிந்து, அதன்படி நடப்பதற்காகவே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
.
எத்தனையோ மொழிகளில் வேதம் இன்னும் மொழி பெயர்க்கப்படவில்லை. ஆனால் தமிழில் அருமையாக மொழி பெயர்க்கப்பட்டு, நாம் வாசிக்கும் வண்ணம் நம்முடைய கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய மொழிகளிலேயே எத்தனையோ மொழிகளில் இன்னும் மொழி பெயர்க்கப்படவில்லை. நாம் எத்தனை பாக்கியவான்கள்! நாம் வேதத்தை கையில் எடுத்து, அதை வாசித்து மகிழும்படி தேவன் கிருபை பாராட்டி இருக்கிறாரே!
.
மற்ற எந்த வேத தியானங்களும், ஏன் அனுதின மன்னாவுமே வேத வாசிப்புக்கு ஒரு போதும் ஈடாகாது. ஒவ்வொரு நாளும் நிச்சயமாக வேதத்தை வாசிக்க வேண்டும்.
.
அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை. அந்த நாட்களில் இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் வேதத்தை ஏந்தி, ஆலயத்திற்கு செல்வதை சகஜமாக காணலாம். இஸ்லாமிய நாடுகளாயிருந்தாலும், அந்த நாடுகளில் மக்களுக்கு ஆலயத்திற்கு செல்ல வேண்டும், வேதத்தை வாசிக்க வேண்டும் என்கிற தாகம் இருப்பதை காண முடியும். வேதத்தை நீ சுமந்தால், பின்நாளில் அது உன்னை சுமக்கும் என்று சொல்வார்கள்.
.
கர்த்தர் நமக்கு கிருபையாக எழுதி கொடுத்த வேதத்தை வாசிப்போம். ஒவ்வொரு நாளும் இந்த அற்புத வேதத்தை வாசித்து முடித்தவுடன், தேவரீர் எனக்காக கொடுத்த இந்த அற்புத வார்த்தைகளுக்காக நன்றி என்று முத்தம் கொடுப்பது வழக்கம். அதை காணும் என் பிள்ளைகளும் அவ்வாறே செய்கிறார்கள். ஆம், நாம் வேதத்தை உண்மையாய் நேசிக்க வேண்டும். வேதத்தை வாசிப்பது நமக்கு மனமகிழ்ச்சியாக மாறட்டும்! ‘உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்’ என்ற சங்கீதக்காரனின் சாட்சி நம்முடைய வாழ்விலும் இருக்கட்டும், ஆமென் அல்லேலூயா!
சததிய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனை தேற்றிடும் ஒளஷதம்
.
வேத பிரியர் தேவ புதல்வர்
சேதமடையா நடத்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, வேதத்தை எங்களுக்காக எழுதி கொடுத்த உமது மட்டில்லாத கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். எங்களது மனமகிழ்ச்சியாக, எங்களுக்கு துணையாக, எங்களுக்கு ஆறுதலாக, எங்களுக்கு மருந்தாக, எங்கள் பாதைக்கு தீபமாக, நாங்கள் நடக்கும் வழியை எங்களுக்கு காட்டுவதாக விளங்கும் வேதத்திற்காக உமக்கு கோடி நன்றிகள் ஐயா. வேதத்தை எங்கள் உயிரினும் மேலாக நேசிக்கவும், வாசிக்கவும் உணர்த்தும் ஐயா. வேதத்தை தினந்தோறும் வாசித்து பழக கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.