யாவரும் போக விரும்பும் இடம்

யாவரும் போக விரும்பும் இடம் 

எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. – (1 கொரிந்தியர் 2:9).

நேற்றைய தினம் யாரும் போக விரும்பாத இடம் நரகம் என்று பார்த்தோம். இன்று யாவரும் போக விரும்பும் இடமாகிய பரலோகத்தை குறித்து பார்க்க போகிறோம். தென்கொரிய நாட்டின் பிரசித்த பெற்ற தேவ ஊழியராகிய பால் யாங்கி சோ அவர்கள் ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் தனிப்பட்ட ஊழியம் செய்து வந்தார். அவர் ஒரு சகோதரியிடம் நரகத்தை குறித்து விவரித்து, ‘நீங்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டாம். நீங்கள் கர்த்தரை ஏற்று கொள்ளுங்கள்’ என்று நரகத்தை குறித்து விவரித்தார். அதை கேட்டு கொண்டிருந்த சகோதரி, ‘ நான் ஏற்கனவே நரகத்தில் தான் இருக்கிறேன். என் கணவர் குடித்து கொண்டு வந்து என்னை தினமும் தர்மஅடி கொடுத்து கொண்டு இருக்கிறார். பற்றாகுறைக்கு கடன்காரன் என்னை அசிங்கமாக பேசி போகிறான். இவற்றை விட நரகம் மேல் என்று தோன்றுகிறது’ என்று அவரை பேச விடாமல் அனுப்பி விட்டார்கள். அவரோ வீட்டிற்கு வந்து, ‘நான் உம்முடைய வார்த்தைகளை தானே பேசினேன், ஏன் அந்த சகோதரி ஏற்று கொள்ளவில்லை’ என்று கர்த்தரிடம் முறையிட்டார். அப்போது தேவன் அவரிடம், ‘நீ இன்று பரலோகத்தை குறித்து பகிர்ந்து கொள்’ என்று கூறினார். அதன்படி அவர் பரலோகத்தை குறித்து அந்த சகோதரியிடம் விளக்கினபோது, அவர்கள் ‘அப்படி ஒரு இடம் இருந்தால் நிச்சயமாக நான் அங்கு செல்லவே விரும்புகிறேன்’ என்று தன்னை கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஏற்று கொண்டார்களாம். ஆம், நாம் இந்த உலகத்தில் படும் பாடுகள், துன்பங்கள் மத்தியில் இந்த உலகத்தில் தான் நரக வாழ்க்கை என்றால், மறு வாழ்விலும் நித்திய நரகம் என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் நமக்காக ஒரு வாசஸ்தலத்தை பரலோகத்தில் ஆயத்தம் செய்யவே நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பரலோகம் சென்றிருக்கிறார்.

எல்லா மதத்திலும் பரலோகம் உண்டு என்பதை சொர்க்கம், பரலோகம், மேலோகம் என்றெல்லாம் அழைக்கப்படுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். சிலருக்கு அவர்கள் தங்கள் உயிரை தங்கள் மதத்திற்காக கொடுத்தால் அவர்கள் மரித்த பின்பு 72 கன்னிகைகள் அவர்களை பரலோகத்தில் வரவேற்பார்கள். அதுதான் சொர்க்கம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் வேதத்தில் பரலோகத்தை குறித்து அநேக அற்புதமான காரியங்கள் விளக்கப்பட்டுள்ளது.

பரலோகம் என்பது இரட்சிக்கப்பட்டவர்கள் மாத்திரமே செல்லும் இடமாகும். அங்கு தேவனையோ, கிறிஸ்துவையோ மறுதலிக்கிறவர்கள் இருக்க மாட்டார்கள். இரட்சிக்கப்பட்டு பரலோகத்திற்கு செல்லுபவர்களுக்காக தேவன் உண்டு பண்ணினதைதான் இதுவரை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. அப்படிப்பட்ட அற்புத காரியங்களால் நிறைந்ததுதான் பரலோகமாகும்.

•முதலாவது அங்கு தேவனிருப்பதால் அது சிறந்த இடமாகும் (மத்தேயு 10:32).
•தேவன் அங்கிருப்பதால் அந்த இடத்தில் இருளுக்கும் பாவத்திற்கும் இடமில்லை. தேவனே ஒளியாயிருந்து தம் ஜனத்தை நடத்துவார்.
•பரலோகம் மிகுந்த சந்தோஷம் நிறைந்த இடமாகும். (யூதா 1:24)
•பரலோகத்தில் பொக்கிஷங்களை நாம் இந்த உலகத்தில் இருக்கும்போதே சேர்த்து வைக்க முடியும். (மாற்கு 10: 21)
•பரலோகம் பலன்கள் மிகுதியாய் கிடைக்கும் இடமாகும் (மத்தேயு 5:12)
•பரலோகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறது (லூக்கா 10:20)
•மரணமோ, துக்கமோ, அலறுதலோ வருத்தமோ இல்லாத இடம் பரலோகமாகும் (வெளிப்படுத்தின விசேஷம் 21:4).

‘அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்’ (வெளிப்படுத்தின விசேஷம் 21:22-26) ‘பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்’. – (வெளிப்படுத்தின விசேஷம் 22:1-3).

இப்படிபட்ட அற்புதமான பரலோகத்திற்கு செல்ல ஒரே ஒரு வழி மாத்திரம்தான் உண்டு. ‘தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்’ (வெளிப்படுத்தின விசேஷம் 21:27).

ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட என்ன செய்ய வேண்டும்? ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களை போக்க வந்த பலி அவர்தான் என்று அறிந்து, ஏற்று கொண்டு, நம்முடைய பாவங்களை அவரிடம் சொல்லி, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவும் என்று சொல்லி மன்னிப்பை கேட்டு பெற்று கொள்ள வேண்டும். அதுவே இரட்சிப்பு ஆகும். அப்படி இரட்சிப்பை பெற்று கொண்டப்பின் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று கொள்ள வேண்டும். ‘இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்’ (யோவான் 3:5) என்று இயேசுகிறிஸ்து கூறினார், அப்படியென்றால் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவர்களே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். மற்றவர்கள் உள்ளே பிரவேசிக்க முடியாது. அதன்பின் நல்ல ஆவிக்குரிய சபையில் சேர்ந்து, கர்த்தருக்குள் வளர வேண்டும். பாவத்திற்கு நீங்கலாகி, பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கர்த்தருக்குள் பரிசுத்தமாய் தங்களை காத்து கொள்ள வேண்டும்.

இந்த தகுதிகளை பெற்றவர்கள் நிச்சயமாக பரலோகத்தில் பிரவேசிக்க முடியும். அந்த பரம கானானுக்குள் நாம் அனைவரும் சென்று கர்த்தருடைய பிரசன்னத்திற்க்குள் மகிழ்ந்து, கர்த்தருக்குள் மரித்த நமக்கு பிரியமானவர்களை கண்டு, நித்திய நித்தியமாய் களிப்போடு வாழும்படி நம் அனைவருக்கும் தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

பரலோகந்தான் என் பேச்சு
பரிசுத்தம்தான் என் மூச்சு
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய்
..

உருமாற்றம் அடைந்து
முகமுகமாக என் நேசரைக் காண்பேன்
தொட்டு தொட்டுப் பார்ப்பேன்..இயேசுவை
..

சங்கீதக்காரன் தாவீதை காண்பேன்
பாடச் சொல்லி கேட்பேன் – அங்கு
சேர்ந்து பாடிடுவேன் – நான்
நடனமாடிடுவேன்

ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, இந்த உலகத்தில் பாடுகளை அனுபவிக்கிற எங்களுக்கு பரவசமான, சந்தோஷமான ஒரு நம்பிக்கையை கொடுத்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம். அனுதினமன்னா வாசகர்கள் ஒவ்வொருவரும் பரலோகத்திற்கு வரவேண்டுமே தகப்பனே, ஒருவராவது விட்டு போகாதபடி பரிசுத்தமாய் வாழும்படியாக கிருபை பாராட்டுவீராக. ஓவ்வொருவரின் பெயரும் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கத்தக்கதாக தங்கள் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணித்து வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.