சுவிகார பிள்ளைகள்

சுவிகார பிள்ளைகள் 

முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். – (கொலோசேயர் 1:21)

தென் ஆப்பிரிக்காவில் இருந்த ஒரு கோர்ட் அறையில் 70 வயதிற்கும் மேலான கறுப்பு நிறத்தவரான ஒரு வயதான மூதாட்டி தட்டு தடுமாறி எழுந்து நின்றார்கள். அவருக்கு எதிராக இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிகள் அந்த மூதாட்டியின் கணவரையும், ஒரே மகனையும் கொன்றதன் காரணமாக, குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டு, அவருக்கு முன் நின்றார்கள். அவர்களில் வேன் டெர் பிரோக் (Van Der Broek) என்பவனும் ஒருவன்.
.
அந்த மூதாட்டி கடந்த காலத்தை நினைத்து பார்த்தார்கள். அவர்கள் இருந்த வீட்டிற்கு இந்த மனிதன் வந்து, இளைஞனாக இருந்த அவரது மகனை அந்த தாயாரின் எதிரிலேயே துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, மரித்த சடலத்தை எடுத்து கொண்டு போய், அவர்கள் குடித்து கும்மாளம் போட்ட இடத்தில் நெருப்பினால் கொளுத்தி போட்டான். அதோடு அவனுடைய ஆத்திரம் தீரவில்லை.
.
வயதான அவருடைய கணவரை பிடித்து கொண்டு போனான். இரண்டு வருடத்திற்கு மேலாக அவருடைய கணவரிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. ஒரு நாள் அந்த மனிதன் திரும்ப வந்து, இந்த தாயாரையும் பிடித்து கொண்டு போய், அவர் கணவர் இருந்த இடத்திற்கு கொண்டு போய் காண்பித்தான்.
.
அங்கு அவர் கைகளும் கால்களும் கட்டப்பட்டு, அங்கிருந்த மரத்தில் கட்டப்பட்டவராய், அடிக்கப்பட்டவராக இருந்தார். இந்த தாயார் பதறி போய், அவரிடம் ஓடிப்போய் அவர்களை விடுவிக்க முற்பட்டபோது, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே, அவர் மேல் மண்ணெண்னையை ஊற்றி, நெருப்பு பற்ற வைத்தான் அந்த ஈவிரக்கிமில்லாத அரக்கன். அவர் பற்றி எரியும்போது, அவர் வாயிலிருந்து, ‘பிதாவே இவர்களுக்கு மன்னியும்’ என்று கூறியவாறே துடிதுடித்து மரித்து போனார்.
.
எத்தனையோ காலங்கள் ஆனப்பிறகு, அவர்களை கொன்ற அந்த மனிதர்கள் பிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் என்று தீர்க்கப்பட்டு, தண்டனை கூறப்பட காத்திருந்தார்கள். அப்பொழுது, அந்த தாயாரிடம், நீதிபதி, ‘அம்மா, உங்கள் கண்களுக்கு முன் உங்கள் மகனையும், கணவரையும், இரக்கமில்லாமல் கொன்று போட்ட இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்’ என்று கேட்டார்.
.
அப்போது அந்த தாய், ‘ஐயா எனக்கு மூன்று காரியங்கள் வேண்டும். முதலாவது, என் கணவர் எரிந்து சாம்பலாய் போன இடத்திற்கு நான் போய், அந்த சாம்பலை அள்ளி கொண்டு வந்து, அவருக்கு முறையாக அடக்க ஆராதனை செய்ய வேண்டும். இரண்டாவதாக, எனக்கிருந்த ஒரே உறவு முறையான என் கணவரும் என் மகனும் இறந்து விட்டதால், நான் இந்த மனிதனை என்னுடைய சுவீகாரத்து மகனாக ஏற்று கொள்கிறேன். அதனால் அவன் மாதம் இரண்டு முறை என் வீட்டிற்கு வந்து, என்னோடு தங்கி, என்னிடத்தில் மீதமிருக்கிற அன்பை நான் கொடுக்கும்படியாக வர வேண்டும்.
.
மூன்றாவதாக, என்னை அவனிடம் கொண்டு போங்கள், நான் அவன் கையை பிடித்து, நான் உன்னை மனதார மன்னித்து விட்டேன் என்று கூற வேண்டும். ஏனென்றால் நம் பாவத்தை மன்னிக்கும்படியாக இயேசுகிறிஸ்து நமக்காக மரித்தார். என் கணவரின் ஆசையும் அதுவே’ என்று கூறினபோது, அந்த கோர்ட் அறையில் கண்ணீர் வராதவர்கள் யாருமே இல்லை. மெதுவாக அவர்களை அந்த மனிதனிடம் கூட்டி வந்த போது, அங்கு கூடியிருந்த அவர்களுடைய பக்கத்து வீட்டார், போலீசார், நீதிபதி யாவரும், மெதுவாக “Amazing grace. How sweet the sound that saved a wretch like me”’என பாட ஆரம்பித்தார்கள்.
.
ஆம், பிரியமானவர்களே, இப்படிப்பட்ட அற்புதமான பாவ மன்னிப்பைத்தான் பிதாவானவர் மனிதராகிய நமக்கு காண்பித்தார். அவருடைய ஒரே பேறான குமாரனாகிய கிறிஸ்துவை நாம் மறுதலித்து, பாவம் செய்து, அவரை சிலுவையில் அறைய வைத்தும், அவருடைய மரணத்தினால் தகுதியில்லாத நம்மையும் பிதாவின் சுவிகார பிள்ளைகளாக ஏற்று கொண்டிருக்கிறாரே! அவருடைய அன்புதான் எத்தனை பெரியது!
.
‘முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்’ என்று பவுல் அப்போஸ்தலன் எழுதுவது போல, அந்நியராகவும், கர்த்தரை அறியாதவர்களாகவும், அசுத்தமுள்ளவர்களாகவும், தேவனை நேசியாதவர்களாகவும் நாம் இருந்த போதிலும், நம்மை பரிசுத்தமானவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும், ஆக்கினை தீர்ப்புக்கு நம்மை உட்படுத்தாமல், பிதாவாகிய தேவனுக்கு முன் நாம் நிற்கும்படியாக, தம்முடைய ஒரே பேறான இயேசுகிறிஸ்துவின் மாம்ச சரீரத்தில் பட்ட பாடுகளினால், மரணத்தினால், சிந்திய இரத்தத்தினால் நம்மை இரட்சித்து, நம்மை அவருடைய சுவிகார பிள்ளைகளாக மாற்றினாரே அவருடைய தியாகத்திற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை, இல்லை, இருக்க போவதும் இல்லை!
.
அந்த அன்பின் தியாகத்தை உணராதவர்களாக இன்னும் பாவத்திலும், அசுத்தத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்? நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த கிருபையின் நாட்களிலாவது அவரின் தியாகத்தை உணருவோமா? மனம் திரும்புவோமா? ஆந்த அன்பை நினைத்து அவருக்கு நன்றியின் ஜீவியத்தை செய்வோமா? நமக்காக தம்முடைய ஒரே பேறான குமாரனை தியாக பலியாக கொடுத்த தேவனுக்கு நம் வாழ்க்கையை அர்ப்பணிப்போமா? பாவமில்லாத பரிசுத்த வாழ்வு வாழ்ந்து, நித்திய நித்தியமாக கர்த்தரோடு வாழும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போமா? கிறிஸ்துவின் பாடுகள், மரணம் வீணாக போய் விடாதபடி, இரட்சிக்கப்பட்டு, அவருக்குள் வாழும் வாழ்க்கை வாழ தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

இனி நான் பாவியல்ல

பரிசுத்தமாகி விட்டேன்

நேசரின் பின் செல்வேன் – நான்

திரும்பி பார்க்க மாட்டேன்

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்

தம் மகனாய் என் தேவன் ஏற்று கொண்டார்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பாவிகளாய் இருந்த போதிலும் எங்களுக்காக தமது ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பி, எங்களை நரக ஆக்கினையிலிருந்து மீட்டு எடுத்த கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். எங்களை உமது சுவிகார பிள்ளைகளாக ஏற்று கொண்ட தயவிற்காக உமக்கு ஸ்தோத்திரம். அதற்கு தகுதியானவர்களாக நாங்கள் ஜீவிக்கும்படியாக பரிசுத்தமாய் எங்களை காத்து கொள்ள கிருபை தாரும். இந்த உலகத்தின் இன்பங்களே நித்தியமானவைகள் என்று பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மனம் திரும்ப கிருபை செய்வீராக. அவர்களையும் தேவன் நேசிக்கிறீர் என்பதை உணர்ந்து, உமக்காக வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.