உற்சாகமாய் கொடுப்போம்

உற்சாகமாய் கொடுப்போம்


‘எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்’. – (1 நாளாகமம் 29:14) .
ஹேட்டி வயாட் என்ற ஒன்பது வயது சிறுமி ஞாயிறு பள்ளிக்கு மிக ஆவலோடு சென்றாள். அங்கு அவள் உட்காருவதற்கு இடம் இல்லாதபடியால் சோர்வுடன் வீட்டிற்கு சென்று விட்டாள். பின்பு இரண்டு ஆண்டுகளில் அவளுடைய சரீரத்தில் ஏற்பட்ட கொடிய வியாதியின் காரணமாக சுகவீனமாகி, படுத்த படுக்கையாகி, இறுதியில் மரித்து போனாள். சில நாட்களுக்கு பின் அவள் தலையணையின் அடியில் ஒரு கவருக்குள் 57 சென்ட் பணம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது. அதில் ‘இந்த பணத்தை ஞாயிறு பள்ளி சிறுவர்கள் அதிக அளவில் உட்கார வசதியாக, நமது ஆலயத்தை பெரியதாக கட்ட இந்த காணிக்கையை உபயோகப்படுத்துங்கள்’ என்று எழுதியிருந்தது.
சிறுமியின் இச்செயலை சபை ஆராதனையில் போதகர் கூறியபோது சபையார் மனதுருகினர். அதை தொடர்ந்து தேவனுக்கு கொடுக்க வேண்டுமென்ற தீவிர வாஞ்சை ஒவ்வொருவர் இருதயத்திலும் உண்டானது. அனைவரும் மனஉற்சாகமாய் காணிக்கை கொடுத்தார்கள். அந்த காணிக்கையை கொண்டு, பிலதெல்பியா என்னும் இடத்தில் 3,300 பேர் அமர்ந்து தேவனை ஆராதிக்கும் சபையும், அதனுடன் 1400 மாணவர்கள வேதாகம கல்வி பயிலும் பெரிய கல்லூரியும் கட்டப்பட்டது. அந்த சிறுபெண் கொடுத்த 57 சென்ட் பணம் எவ்வளவு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது பார்த்தீர்களா? அதுபோல வேதத்தில் ஒரு சிறுபையன் கொடுத்த 5 அப்பமும், இரண்டு மீனும் 5000 பேருக்கு அதிகமானோர் திருப்தியாய் சாப்பிட போதுமானதாய் இருந்தது. நாம் காணிக்கை கொடுப்பது எப்படி இருக்கிறது?
வருமானத்தில் பத்தில் ஒன்றை தசமபாகமாக கொடுக்க வேண்டியது வேதத்தின் சட்டம். அதை ஒழுங்காக கொடுக்கிறோமா? சிலர் இது பழைய ஏற்பாட்டு கட்டளை என்று கூறினாலும், இயேசுகிறிஸ்து ‘மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே’ (மத்தேயு 23:23) என்று கூறுகிறார். தசம பாகம் கொடுக்க வேண்டுமென்பது கட்டாயமாயிருந்தாலும், புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் அதை விட அதிகமாய் கொடுக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.
எல்லாரும் காணிக்கை கொடுப்பது போல் நாமும் கொடாவிட்டால் ஊழியர்கள் என்ன நினைப்பார்கள் என்று அனனியா சப்பீராளை போன்று மனக்கஷ்டத்தோடு காணிக்கை கொடுக்கிறோமா?
காணிக்கை கொடாவிட்டால் எனக்கு வீண் செலவு வந்து விடும். பணம் வீட்டில் தங்காது என பயந்து காணிக்கை கொடுக்கிறோமா?
நான் ஒரு பங்கு கொடுத்தால், தேவன் அதை பல மடங்காக திருப்பி தருவார் என்று பெருக்கல் கணக்கு போட்டு, பார்த்து கொடுக்கிறோமா? கொடுப்பதை குறித்து தாவீது கூறும்போது, ‘தேவனுக்கு கொடுப்பதற்கு நான் எம்மாத்திரம், என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது, உமது கரத்திலே வாங்கி உமக்கே கொடுக்கிறோம்’ என்று அருமையாக உண்மையை உணர்ந்து கூறுகிறார். ஆகவே நமமிடமுள்ள அனைத்தும் நாம் தேவனிடமிருந்து பெற்று கொண்டதே. அவருடையதிலிருந்து அவருக்கு கொடுக்கிறோம். ஆகவே காணிக்கை கொடுக்கும் போது முழுமனதாய் உற்சாகமாய் கொடுப்போம். ‘அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்’ – (2 கொரிந்தியர் 9:7) என்று வேதம் கூறுகிறது. உற்சாமாய் கொடுப்போம், தேவனுக்கு பிரியமாய் நடப்போம். ஆமென் அல்லேலூயா!
நீ செலுத்தும் காணிக்கைகள்நினைவு கூர்ந்திடுவார்
நன்றிப்பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக் கொள்வார்
பிரியமாய் ஏற்றுக் கொள்வார்
..

நெருக்கடி வேளையில் பதில் அளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
என்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தந்தையே, பூமியும் அதின் நிறைவும் தேவனுடையது என்று நாங்கள் வேதத்தில் வாசிக்கிறோம் தகப்பனே, அப்படிபட்ட பெரிய தேவனுக்கு நாங்கள் என்னத்தை கொடுக்க முடியும் ஐயா. முதலாவது எங்களை உமக்கு தருகிறோம். பின் நீர் எங்களுக்கு கொடுத்த ஆசீர்வாதங்களிலிருந்து உமக்கு தருகிறோம். கொடுப்பதை உற்சாகமாய் கொடுக்க கிருபை தாரும். உள்ளத்தின் அன்போடு கொடுக்க கிருபை செய்யும். விசனத்தோடும் கட்டாயத்தோடும் இல்லாதபடி, உற்சாகமாய் எங்கள் தேவனுக்கென்று எங்களால் இயன்றதை கொடுக்க கிருபை செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.