தேவனை குறித்தே மேன்மை பாராட்டுவோம்

தேவனை குறித்தே மேன்மை பாராட்டுவோம்

நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர். – (சங்கீதம் 119:98).

கி.பி 1623 ல் பிறந்து 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர் விஞ்ஞானி பிளேஸ் பாஸ்கல் (Blaise Pascal) என்ற பிரெஞ்ச் நாட்டு மேதையாவார். இவர் கண்டுபிடித்ததோ கணக்கில் அடங்காதவை. சாலையோரத்தில் மண்களை தோண்டும் JCB இயந்திரத்தை உருவாக்கினவர் இவர். 50 பேர் செய்ய வேண்டிய வேலையை மிகச்சுலபமாக சில மணி நேரத்தில் செய்து முடிக்கும்படி இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி அநேக இய்நதிரங்களை கண்டுபிடித்தவர் இவர். தனது 11 ஆவது வயதில் அதிர்வினால் உண்டாகும் அலைகளை குறித்து இவர் எழுதியதை கண்ட பெரிய விஞ்ஞானிகளும் வியந்தனர். இன்று விஞ்ஞானிகளால் அதிகம் பயன்படும் பாஸ்கல் விதியை கண்டுபிடித்தவரும் இவரே.

பாஸ்கல் தனது 18 ஆவது வயதில் மிகக்கடுமையான வியாதிகளால் தாக்கப்பட்டார். நரம்பு தளர்ச்சியினால் கடுமையாக வேதனைப்பட்டார். தலைவலி, வயிற்றெரிச்சல் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். பின் ஏற்பட்ட பக்கவாதத்தினால் ஒரு குச்சியின் உதவியுடன் நடக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார். இவரது முகத்தில் எரிச்சலும், கோபமுமே இருந்தது. சிரிப்பதும் புன்முறுவல் பூப்பதும் மிகமிக அரிது. இந்நாட்களில் தனது நண்பர்கள் மூலம் ஆண்டவரை ஏற்று கொண்டார். பின் கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே மறுமைக்குள் சென்று விட்டார்.

இப்படிப்பட்ட நாட்களில் ஒரு நாள் தனது நண்பர்களுடன் குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்தார். வண்டி ஒரு பாலத்தை கடக்கும் போது குதிரைகள் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தன. இருப்பினும் இவர் உட்கார்ந்திருந்த பெட்டி, ஆற்றில் விழாமல், பாலத்தின் மீது தொங்கி கொண்டிருந்தது. ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் உயிர் தப்பினார். இச்சம்பவத்திற்கு பின் ஒரு இரவில் தேவனிடமிருந்து வல்லமையான வெளிப்பாடுகளை பெற்று மீண்டும் தேவனிடம் கிட்டி சேர்ந்தார். இந்த அனுபவத்தை ஒரு சிறு தாளில் இப்படியாக எழுதினார். ‘தத்துவ ஞானி, மேதைகளின் தேவனல்ல, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன் என்னை சந்தித்தார்’ என்று எழுதின இந்த தாளை அவர் ஒவ்வொரு நாளும் அணியும் உடையில் சேர்த்து இணைத்து கொள்வார். இன்றும் கூட அவரது உடையும் எழுதப்பட்ட தாளும் நினைவாக வைக்கப்பட்டுள்ளது.

பிரியமானவர்களே, உலகத்திலுள்ள அநேகரின் கருத்து என்ன தெரியுமா? ஒருவனுக்கு ஞானம் அறிவு இருந்தால் அவன் கடவுளை நம்பி வாழாமல் தன்னையே நம்பி வாழலாம் என்பர். ஆனால் இந்த உலக புகழ் பெற்ற விஞ்ஞானியோ ஆண்டவரின் பாதமே தஞ்சம் என வாழ்ந்ததை பார்க்கிறோம். ‘ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ (எரேமியா 9:23-24) என்ற வசனத்தை போல அவர் ‘பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்’ என்ற கர்த்தரை குறித்தே மேன்மை பாராட்டினார்.

அவருடைய கண்டுபிடிப்புகளிலெல்லாம் பெரிய கண்டுபிடிப்பு இயேசுகிறிஸ்துவே உலக இரட்சகர் என்று கண்டுபிடித்ததே என்று தனது புத்தகத்தில் அழகாக எழுதி வைத்துள்ளார். அவர் தனது ஞானத்தையோ, அறிவையையோ சார்ந்து வாழாமல் தேவனையே சார்ந்து வாழ்ந்ததினால் கர்த்தர் அவரை அதிக ஞானமுள்ளவராக்கி, அநேகருக்கு பிரயோஜனமான காரியங்களை கண்டுபிடிக்க கிருபை செய்தார். நாமும் தேவனை குறித்தே மேன்மை பாராட்டி, அநேகருக்கு பிரயோஜனமாக நம் வாழ்க்கையை வாழுவோமா? பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்’ என்றபடி அவரை அறிந்து உணர்ந்திருக்கிறதை குறித்து மேன்மை பாராட்டி, நம் ஞானம் அறிவு கல்வி செல்வம் எல்லாம் குப்பை என்று உணர்ந்து, அவருக்குள் வாழ தேவன் தாமே கிருபை செய்வாராக, ஆமென் அல்லேலூயா!

என் ஞானம் கல்வி செல்வம் எல்லாம்
ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம்
அனுக்கிரகம் தர வேண்டுமே

ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, எங்களுடைய எல்லா மேன்மையும் வீணானவை என்பதை உணர கிருபை செய்யும். உம்மை குறித்து அறிந்து உணர்ந்திருப்பதே எங்கள் மேன்மை என்பதையும், பெரிய விஞ்ஞானிகளாயிருந்தாலும் சிலர் உம்மை தவிர வேறு எதை குறித்தும் மேன்மை பாராட்டாதபடி உம்மையே தங்கள் வாழ்வில் மேன்மை பாராட்டினதை போல எங்கள் வாழ்விலும் எங்கள் பெருமை எதுவும் இல்லாதபடி உம்மை குறித்தே மேன்மை பாராட்ட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.