ஜெபத்தில் ஒரு அங்கம்
நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். – (மாற்கு 11:25).
ஒரு கிறிஸ்தவ பெண்களின் கருத்தரங்கிற்கு ஜப்பானிலிருந்து (From Japan) யுமாரா (Yumarah) என்னும் சகோதரியும், பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டிலிருந்து லயானோ (Leonah) என்ற சகோதரியும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது இரண்டாவது உலகப்போர் முடிவடைந்து சிறிது காலமே ஆகியிருந்தது. ஜப்பானியர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டினரை மிகவும் துன்பப்படுத்தியிருந்ததால் அவர்கள் ஜப்பானியர் மேல் மிகவும் கோபத்துடனும் வெறுப்புடனும் இருந்தனர். ஒரு நாள் அந்த கருத்தரங்கில் செய்தி முடிவடையும் நேரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சகோதரி வேகமாக எழுந்து வந்து, தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டு, தன்னுடைய வெறுப்பின் நிமித்தம், குற்ற உணர்வுடன், ஆவியானவரின் கிரியைக்கு தன்னை விட்டுக்கொடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தார். அப்போது, அவர்களின் அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்தபோது ஜப்பானை சேர்ந்த சகோதரி அங்கு நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இவரிடம், ‘நம் இரண்டு பேருக்கு இடையில் நமது நாடுகளின் போரின் நிமித்தம் கசப்புணர்வு இருப்பதாக காண்கிறேன். அப்படியானால், என் மக்கள் செய்த கொடிய செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். தயவுசெய்து மன்னிப்பாயா’ என்று கண்ணீரோடு கேட்டார்கள். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டு சகோதரி அவர்களை கட்டியணைத்து, அவர்களை மன்னித்தார்கள். பரிசுத்த ஆவியானவரை கிரியை அன்றி எதிரிகளை மன்னிக்க யாரால் முடியும்? பொதுவாக நாம் ஜெவிக்க முழங்கால் படியிட்டவுடன் ஆண்டவரை துதிப்போம். நன்றி செலுத்துவோம், பின் நமது விண்ணப்பங்களை ஆண்டவருக்கு தெரியப்படுத்துவோம்.
இதோடுகூட ஜெபத்தில் மற்றொரு முக்கிய பகுதி ஒன்றும் உள்ளது. அது என்ன தெரியமா? ஜெபிக்கத் துவங்குவதற்கு முன்னர் நம்மை ஆராய்ந்து பார்த்தல் ஆகும். இந்த செயல் ஒவ்வொரு நாளும் நம் ஜெபத்தில் இடம் பெறவேண்டியது மிகமிக அவசியம். அப்படி ஆராயும் போது யார் மீதாவது நமக்கு கோபம், மனஸ்தாபம், வெறுப்பு, கசப்பு இருக்குமானால் ஜெபத்தை தொடரும் முன்னர் அவர்களை மன்னித்து விடுவது அத்தியாவசியம். ஜெபம் பண்ணும்பொழுது விசுவாசியுங்கள், ஜெபிப்பதற்கு முன்னர் மன்னியுங்கள். நமக்கு வெளியே இருக்கும் மலைப் போன்ற பிரச்சனையை தகர்க்கும் விசுவாசத்தைப் போலவே, நமக்கு உள்ளே இருக்கும் குறைகளை பார்க்க மன்னிப்பு அவசியம். விசுவாசம் மன்னிப்பு இந்த இரண்டிற்குள்ளும் அடங்கியிருக்கும் ஜெபத்தை இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு கற்று கொடுத்தார்.
லூக்கா 17:3 ல் உன் சகோதரன் மனஸ்தாபப்ட்டால் மன்னிப்பாயாக என்று வேதம் கூறுகிறது. ஒருவேளை வெளியே சொல்ல வெட்கி அல்லது தயங்கி மனதளவில் அவர் மனஸ்தாபப்படுவதை நாம் உணருகிறோம் என்றால் உடனே அவரை நாம் மன்னிக்க வேண்டும். மனஸ்தாபப்டுகிறேன் என்று சொன்னாலும் (உண்மையோ பொய்யோ) மன்னிப்பாயாக என்று வேதம் கூறுகிறது.
ஆனால் மாற்கு 11:25-ன்படி வேதனைப்படுத்தின அந்த நபர் நம்மிடம் வந்து மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும் நாம் அவரை மன்னிக்க வேண்டும். அவ்வசனத்தை கவனித்து பாருங்கள், எதிராளியை குறித்து அவ்வசனத்தில் ஒன்றுமே கூறவில்லை.
அவன் மன்ஸ்தாபப்படுகிறோனோ இல்லையோ நமக்கு அவன்மேல் குறை இருந்தால் நாம் அவனை மன்னித்து விட வேண்டும், அவ்வளவு தான். அதை செய்வது மிகவும் கடினம் தான், ஆனால் நாம் அப்படி மன்னியாதிருந்தால் நம் தப்பிதங்களும் மன்னிக்கப்படாது என்றல்லவா கிறிஸ்து கூறுகிறார்! சிலர் சொல்வார்கள் நான் சாகும்வரை அந்த முகத்திலேயே முழிக்க மாட்டேன் என்று. வைராக்கியம் வைப்பதால் எந்த பிரயோஜனமுமில்லை. நாம் சாகும்போதும் அந்த வைராக்கியம் வைத்திருந்தால் நாம் தான் இரட்சிப்பை இழக்க நேரிடும். எத்தனையோ பேருடைய வாழ்வில் இந்த மன்னிப்பில்லாததால் எத்தனை மனக்கஷ்டங்கள்! எத்தனை மனவருத்தங்கள்!
ஒருவரையொருவர் மன்னிப்பது என்பது அத்தனை கஷ்டமான காரியமாக இருக்கிறது! தேவன் நம்மை மன்னியாதிருந்தால் நாம் நித்திய ஜீவனை பெற்றிருக்க முடியாதே! நாம் நித்திய அக்கினியில் கிடந்திருப்போமே! தேவன் நம்மை கிருபையாக மன்னித்திருக்க, நாம் மற்றவர்களை மன்னிக்க கடமை பட்டிருக்கிறோம். அதனால் அநேகர் வியாதியிலிருந்து சுகமடைந்திருக்கிறார்கள். மன்னிக்காத பட்சத்தில், அநேகர் வியாதியிலேயே இருந்திருக்கிறார்கள்!
பிரியமானவர்களே, மன்னிப்பை பற்றி எழுதுவதற்கும், பிரசங்கிப்பதும் எளிது. ஆனால் அதை நடைமுறையில், வாழ்வில் அப்பியாசப்படுத்துவது மிகக்கடினமாக இருநதாலும் அது செயல்படுத்த முடியாத ஒரு காரியமல்ல. பரிசுத்த ஆவியானவரின் துணையோடு முயற்சி செய்யும்போது அது நமக்கு மிகுந்த சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் தரும் எனபது நிச்சயம். ஆகவே நமது ஜெபம் கேட்கப்பட்டு நமது தப்பிதங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால் நாம் நம்மை ஆராய்நது பார்க்கவேண்டும். இனி உங்கள் ஜெபத்தில் மன்னிப்பும் ஒர் அங்கமாய் மாறட்டும். கர்த்தர் நம்மை மன்னிக்கிறவர்களாய் மாற்றுவாராக!
விலையேற பெற்ற உம் இரத்தத்தாலே
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்
ஆராதனை ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கே
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்
ஆராதனை ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கே
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்களை ஆராய்ந்து பார்த்து, எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்தவர்களை மன்னிக்க எங்களுக்கு கிருபை தாரும். எங்களால் அது முடியாமற்போனாலும், ஆவியானவர் தாமே எங்களுக்கு உதவி செய்வாராக. நீர் எங்கள் குற்றங்களை மன்னித்தீரே, அதைப் போல நாங்களும் மன்னிக்க எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.