‘ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது’. – (கொலோசேயர் 1:16).
கொடுங்கோல் ஆட்சி நடத்தி மக்களை துன்பப்படுத்தி கொண்டிருந்த ஒரு தலைவனுக்கு எதிராக ஒரு மனிதன் வீறு கொண்டெழுந்தான். அடக்குமுறை ஆட்சியை அகற்றி விட்டு மனித நேயமிக்க ஒரு அரசு அமைத்து மக்களுக்கு நல்லதை செய்ய விரும்பினான். அராஜக தலைவனின் பிடியிலிருந்து மக்களை மீட்க எண்ணிய அவன் ஒரு புரட்சிகரமான பாதையில் போய் கொண்டிருந்தான். ஆனால் அந்த முயற்சியின் பாதையில் அவன் தன் மனைவியை இழந்தான். தன் பிள்ளைகளையும் இழந்தான். தனக்கு உறுதுணையாக நின்ற சிலரையும் இழந்தான். சண்டை ஒன்றில் ஒரு காலையும் இழந்தான். ஆயினும் அவன் அனுதினமும் கடவுளிடம், ‘எனக்கு இன்னும் சில ஆண்டுகள் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று பிராத்தனை செய்தான்.
ஒரு நாள் அவனுடைய உற்ற நண்பன் ஒருவன் அவனை பார்த்து, ‘உன் உயிரை தவிர உன்னிடம் இழக்க இனி வேறெதுவும் இல்லை. இவைகளெல்லாம் இழந்த பின்பு; உனக்கு வாழ்வின் மேல் வெறுப்பு ஏற்படாமல், வாழ வேண்டும் என்ற ஆசை எப்படி வருகிறது’ என்று கேட்டான். அதற்கு அவன், ‘நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். ஆனால் எபபடியாகிலும் இந்த நாட்டு மக்களை அடக்கு முறை ஆட்சியாளனிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்ற இலக்கையும், ஆசையையும் இழக்கவில்லையே. அதை இழக்காதவரை நான் வாழ்வது எனக்கு அர்த்தமுள்ளது’ என்று பதிலளித்தான். ஆம், உயர்ந்த ஒரு நோக்கம் தான் இந்த பூமியில் நாம் வாழ்வதை அர்த்தமுள்ளதாகவும், அவசியமானதாகவும் நம்மை பார்க்க வைக்கிறது.
வாழ்க்கையில் எதிர்பாராத புயல்கள் வீசி வாழ்வை சீரழிக்கும்போது வாழ்வு என்பது கடினமான சுமையாகவும், வேண்டாம் என்று வீசி விடலாமா என எண்ண வைக்கும் ஒன்றாகவும் மாறிவிடுகிறது. இந்த பூமியில் நான் வாழ்வதில் என்ன அர்த்தம்? என்ன பயன்? என்ன அவசியம்? என்ன மேன்மை? என எவரும் நினைப்பது இயற்கையானது.
ஆனால் வாழ்வை அர்த்தமற்றது என்று எண்ணுவதற்கு உண்மையான காரணம் மேற்கண்டது போன்ற துன்ப விஷயங்கள் அல்ல. உங்கள் வாழ்வின் மேல் தேவன் வைத்திருக்கிற உண்மையான நோக்கத்தினை உணர்ந்து, அந்த நோக்கத்தை இலக்காக வைத்து, வாழாமல் போவதே காரணம். அதாவது இந்த வாழ்வு தேவனுக்கென்று வாழ்வதற்காகவே தரப்பட்டுள்ளது என்று அறியாமல், நமக்காகவே வாழ்ந்திருப்பதே விரக்திக்கும், வெறுப்பிற்கும் முக்கிய காரணம்.
பிரியமானவர்களே, வாழ்வை மிக அர்த்தமுள்ளதாகவும், திருப்தியுடையதாகவும் மாற்றுவது தேவ நோக்கத்தை இலக்காக கொண்ட வாழ்க்கை முறையே. மனிதனை தேவன் தமக்காகவும், அவரது திட்டத்தை நிறைவேற்றும் கருவியாகவும் படைத்தார் என்ற செய்திதான் வேதம் தரும் முக்கிய செய்தி. எனவே தேவனுக்காக வாழ்வது மனிதனின் ஒரு தெரிந்தெடுப்பு அல்ல. இயற்கையான கட்டாயம். அவ்விதம் வாழுகிற மனிதன் தான் விரும்பிய எதையும் அடையாமற் போனாலும் சரி, தான் பெற்றிருந்த எதையும் இழந்தாலும் சரி அவனோ தான் வாழ்வது அர்த்தம் மிகுந்தது என்ற நல்ல நிச்சயம் உடையவனாக இருப்பான்.
நான் ஏன் வாழ வேண்டும் என எண்ணும், சகோதரனே, சகோதரியே நீங்கள் மண்ணிற்கு சுமையும் இல்லை, உஙகளுக்கு நீங்கள் பாரமும் அல்ல. தேவன் உங்களுக்கு நியமித்த நாட்கள் வரை அவருக்காய் வாழ இன்றே அர்ப்பணியுங்கள். துக்கத்தையும் சுய பரிதாபத்தையும் விட்டெறியுங்கள். நான் வாழ்வது அவருக்காக என்று அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள். ஆமென் அல்லேலூயா!
வந்துபோன மனிதர் எல்லாம்
உலகம் நினைப்பதில்லை
மரித்தும் பேசும் மனிதர் உண்டு
என்றும் அவர்கள் கொஞ்சமே
தியாகத்தோடு தீபமாக
வாழ்ந்த தேவ மனிதரை
இதிகாசம் மறந்ததாக
சேதி ஒன்றும் இல்லையே!
..
உலகம் நினைப்பதில்லை
மரித்தும் பேசும் மனிதர் உண்டு
என்றும் அவர்கள் கொஞ்சமே
தியாகத்தோடு தீபமாக
வாழ்ந்த தேவ மனிதரை
இதிகாசம் மறந்ததாக
சேதி ஒன்றும் இல்லையே!
..
உனக்கும் எனக்கும் தேவன் தந்த
காலம் அல்லவா .. இதை
உணராமல் ஜீவிப்பது பாவம் அல்லவா!
தேவனுக்காக வாழும் வாழ்க்கை
உன்னதம் அல்லவா .. இதை
அறிந்து உணர்ந்து வாழும்போது
இலாபம் அல்லவா!
காலம் அல்லவா .. இதை
உணராமல் ஜீவிப்பது பாவம் அல்லவா!
தேவனுக்காக வாழும் வாழ்க்கை
உன்னதம் அல்லவா .. இதை
அறிந்து உணர்ந்து வாழும்போது
இலாபம் அல்லவா!
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் எங்கள் ஒவ்வொருவரையும் உருவாக்கின நோக்கத்தை அறிந்து நாங்கள் வாழ எங்களுக்கு கிருபை தாரும். நோக்கமில்லாமல் வாழும் வாழ்க்கை வாழ்க்கையல்ல என்பதை உணர்த்தியருளும். நீர் படைத்த எல்லாம் உமக்காகவும் உம்மை கொண்டும் படைக்கப்பட்டது என்பதை உணர கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.