‘அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்’. – (எசேக்கியேல் 14:14).
இந்த அதிகாரத்தில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிச மூலம் ‘மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி’ பஞ்சம், பட்டயம், கொள்ளை நோய், துஷ்ட மிருகங்கள் ஆகிய நான்கு தீங்குகளை அந்த தேசத்தின் மேல் வரப்பண்ணுவேன்’ என்று கூறுகிறார். ‘அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்’ என்று பார்க்கிறோம். சமீபத்தில் எகிப்தில் தோன்றின மங்கின குதிரையின் படங்களை அனுதின மன்னாவில் வெளியிட்டிருந்தோம். வெளிப்படுத்தின விசேஷத்தின் ஆறாம் அதிகாரம் 8-ம் வசனத்தின் முத்திரை உடைக்கப்பட்டு, மங்கின குதிரை வெளிப்படுகிறது. ‘நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கடுக்கப்பட்டது’ (வெளிப்படுத்தின விசேஷம் 6:8). பாருங்கள், இந்த இடத்திலும், பஞ்சம், பட்டயம், சாவு, துஷ்டமிருகங்களினால் கொலை செய்யப்படுவதை காண்கிறோம்.
இந்த தீங்குகள் நேரிடும்போது, நோவா. தானியேல், யோபு போன்ற பழைய ஏற்பாட்டு பக்தர்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அது ஏன் அவர்கள் பெயர்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது? ஏன் அவர்கள் மாத்திரம் தங்கள் ஆத்துமாக்களை தப்புவிப்பார்கள்?
நோவா: நோவா உலகத்தின் மேல் ஜெயம் கொண்டவராக காணப்பட்டார். எத்தனையோ பேர் அவரிடம் மழையா பெய்ய போகிறது? என்று அவரை கேலி பண்ணினாலும், பேழையை கட்டி அவரும், அவருடைய குடும்பமுமாக எட்டு பேர் மாத்திரம் காக்கப்பட்டார்கள். பேழைக்குள் இருந்தவர்கள் காக்கப்பட்டார்கள். பேழைக்கு வெளியே இருந்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். ‘…அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,…’ (1பேதுரு 3:21) என்று பார்க்கிறோம். பேழையிலே காக்கப்பட்டது, ஞானஸ்நானத்திற்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளதை பாருங்கள். ‘விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்’ (மாற்கு 16:16) இந்த வார்த்தைகளின்படி, ஞானஸ்நானம் பெற்றவர்கள் காக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள்.
தானியேல்: தானியேல் மாம்சத்தின் மேல் வெற்றி பெற்றவராக காணப்பட்டார். ‘தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்’. – (தானியேல் 1:8). தானியேல் வாலிப பிராயத்தில் இருந்தாலும், திராட்சரசம் தனக்கு வேண்டாம் என்று தன் இருதயத்தில் தீர்மானம் செய்து அதன்படி நடந்து கொண்டார்.
நாமும் கூட மாம்சீகத்திலே வெற்றி பெற்றவர்களாக நடக்க வேண்டும். மாம்ச இச்சைகளுக்கும், ஜீவனத்தின் பெருமைக்கும் நீங்கினவர்களாக காணப்பட வேண்டும்.
மதுபானத்தையோ, சிற்றின்பங்களுக்கோ நாம் இடம் கொடாமல், பேரின்ப நாதரை மகிமைப்படுத்தும் வாழ்வையே வாழ வேண்டும். தானியேல் அவற்றை வெறுத்ததால் தாழ்ந்து போய் விடவில்லை. புறஜாதியான இராஜா கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக வாழ்ந்து காட்டி, பெரும்பான்மையான மக்கள் மத்தியில் சிறுபான்மையான தானியேலின் தேவனே தேவன் என்பதை நிரூபித்து காட்டினார். கர்த்தர் அவரையும், அவருடைய தோழர்களையும், அடிமைகளாக வந்த அந்த நாட்டில் பெரிய அதிபதிகளாக மாற்றினார். அல்லேலூயா!
யோபு: யோபு சாத்தானின் மேல் வெற்றி பெற்றவராக காணப்பட்டார். சாத்தான் எத்தனை தான் சோதனைகளை கொண்டு வந்தாலும், கர்த்தரை தூஷிக்காதபடி வாழ்ந்து தன் உத்தமத்திலே நிலை நின்றவர். தேவனே சாத்தானிடம் அவரை குறித்து சவால் விடும்படி உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தார். அவர் தன் பிள்ளைகள், சொத்துக்கள், சுகங்கள் எல்லாவற்றையுமே இழந்துவிட்ட போதிலும், தேவனை தூஷிக்காதபடி பரிசுத்தமாய் வாழ்ந்த அவருக்கு எல்லாமே இரட்டிப்பாய் திரும்பவும் கிடைத்தது.; தேவனுக்கு முன்பாக சாத்தான் தோல்வியடைந்தான். இந்த நாளில் தேவன் நம்மை குறித்து சாத்தானிடம் சவால் விடும்படியான வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா, அல்லது அவர் வெட்கப்படும்படியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?
இப்படிப்பட்ட மூன்று புருஷர்களை போல நாமும் இந்த கடைசி நாட்களில் வாழும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த மனிதர்களை போல உலகத்தின் மேலும், மாம்சத்தின் மேலும், சாத்தானின் மேலும் வெற்றி பெற்றவர்களே, உலகத்தில் வர இருக்கிற பஞ்சம், பட்டயம், கொள்ளைநோய், துஷ்ட மிருகங்களின் பாடுகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களின் ஆத்துமாக்களே தப்புவிக்கப்படும். நாம் அவர்களை போல வாழ்ந்து, வரப்போகும் உபத்திரவ மற்றும் மகா உபத்திரவ காலத்திற்கு தப்புவோமா? ஞானஸ்நானம் எடுக்காதவர்கள், சீக்கிரமாய் ஞானஸ்நான சாட்சிக்கு நம்மை ஒப்புக்கொடுப்போமா? கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோம். ஆமென் அல்லேலூயா!
சுயவெறுப்பின் கோட்டிற்கு வா – நீ வா
நயமாக அழைக்கிறார் வா – நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா – நீவா
இயேசுவைப் பின்பற்ற வா
..
நயமாக அழைக்கிறார் வா – நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா – நீவா
இயேசுவைப் பின்பற்ற வா
..
ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா – நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
உன்னை சிலுவையில் பதித்திட வா – நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா – நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உலக, மாமிச இச்சைகளை வெறுத்து, சாத்தானின் மேல் ஜெயம் எடுத்து கர்த்தருக்காக வாழும்படியாக எங்களை ஒப்பு கொடுக்கிறோம் தகப்பனே. நோவா, தானியேல், யோபுவை போல வாழவும், வரப்போகும் மகா உபத்திரவ காலத்திற்கு எங்களையும், எங்கள் குடும்பங்களையும் தப்புவித்து கொள்ளும்படியாக எங்களை அர்ப்பணிக்கிறோம். ஞானஸ்நான சாட்சிக்கு ஒப்புக்கொடுக்காதவர்கள் இந்த கடைசி நாட்களில் ஒப்புக்கொடுக்கவும் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து கீழ்ப்படியவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.