கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். – (ஏசாயா 40:31).
கழுகின் முட்டைகளில் ஒன்று, தவறுதலாக கோழி முட்டைகளுடன் கலந்து விட்டது. கோழியும் தன் முட்டைகளோடு கழுகின் முட்டையும் அடைகாத்து குஞ்சு பொரித்தது. வளர வளர கழுகு குஞ்சின் உருவமும் சப்தமும் மாற தொடங்கியது. ஒரு முறை கோழிக்குஞ்சுகளை வேட்டையாடும்படி வந்த கழுகு, கோழிகுஞ்சுகளின் நடுவில் தனது இனத்தவனை கண்டதும் மெதுவாய் கழுகு குஞ்சுடன் பேச ஆரம்பித்தது. ‘நீ எப்படி இங்கு வந்தாய்?’ என்று கேட்டது. அதற்கு கழுகு குஞ்சு ‘நான் பிறந்ததிலிருந்தே இங்கு தான் இருக்கிறேன்’ என்றது. சற்று தொலைவில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை காட்டி ‘அதுதான் என் தாய்’ என்றது. அதற்கு கழுகு ‘இல்லையில்லை, நன்றாக பார், என்னை போல நீயும் ஒரு கழுகுதான்’ என்றது. கழுகு குஞ்சு உறுதியாக நம்ப மறுத்துவிட்டது. பல விதங்களில இதற்கு புரிய வைத்தும் எதையும் நம்புவதாய் இல்லை குட்டி கழுகு. சற்று நேரம் யோசித்த கழுகு, ‘நம்மை பற்றி உலகிலேயே மிக சிறந்த புத்தகமான வேதாகமத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று சொல்லட்டுமா?’ என்று சொல்ல ஆரம்பித்தது.
நாம் கோழிகளை போல குப்பைகளை கிளற கூடாது. எல்லா பறவைகளை காட்டிலும் உயரத்தில் பறக்கும்படி தேவன் நம்மை படைத்திருக்கிறார். – (யோபு 39:27).
நாம் கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும் அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம் ப்ணணும்படி தேவன் நம்மை படைத்திருக்கிறார். – (யோபு 39:28).
நாம் உயரத்திலிருந்து நம் இரையை பார்க்கும்படி (சுமார் 150 அடி பிரகாசமான கண்களை கொடுத்திருக்கிறார். – (யோபு 39:29).
நாம் நம்முடைய குஞ்சுகளை செட்டைகளில் சுமக்க கூடிய பெலன் நமக்கு உண்டு (உபாகமம் (32:1) என்று எடுத்து கூறி, ‘நீ இருக்க வேண்டிய இடம் இதுவல்ல, கன்மலையின் மேல்’ என்று கூறி தன்னுடன் அழைத்து சென்றது.
இந்த கழுகு குஞ்சுகளை போல நாமும் கூட அநேக நேரங்களில் நம் நிலையை மறந்து உலகத்தின் காரியத்தில் மூழ்கி போய் விடுகிறோம். நாம் உலகத்தின் குப்பைகளிலுள்ள புழுக்களையல்ல, உயரத்தில் பறந்து உற்சாகத்தோடு தேவனோடு உறவாட அழைக்கப்பட்டிருக்கிறோம். அப்படியில்லாமல் இந்த உலகிலேயே வாழ்க்கை முடிந்து விடுவதை போல உலகத்தின் காரியங்களிலேயே திருப்தியாக இருந்து விடாதீர்கள்.
மறுமைக்குரிய மேலான காரியங்களில் வளர பிரயாசமெடுங்கள். சுமார் 150 அடி உயரத்திற்கு மேலாக கழுகு பறந்தாலும் தன் இரையை துல்லியமாக பார்க்கும் திறமையுடையது. நாம் எந்த சூழ்நிலையிலிருந்தாலும் நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கும் நோக்கத்தை மற்நது விடக்கூடாது. பரந்த பார்வையோடு இச்சமுதாயத்தை பார்த்து தேவையில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும். உதவிக்காக நிற்போர் நம் கண்களுக்கு தெரியவில்லை என்றால் ஆவிக்குரிய கண் கண்ணாடி கண்டிப்பாக அணிந்தே ஆக வேண்டும். நம்மால் இயன்றவரை தேவையுள்ளவர்களுக்கு நாம் உதவத்தான் வேண்டும்.
மேலும் கழுகின் பெலன் எப்பொழுதும் குறைவதில்லை. வருடத்தின் குறிப்பிட்ட காலத்தில் அதற்கு இறகுகளனைத்தும் உதிர்ந்து பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் இந்நிலையில், அது சிகரத்தின் உச்சிக்கு சென்று சூரிய ஒளி தன்மீது படும்படி இரவு பகலாக இறக்கைகளை விரித்து அமர்ந்து விடும். சில நாட்களில் புதிய இறக்கைகளுடன் புது பெலத்துடன் தன் வாழ்வை தொடங்குகிறது. நம் வாழ்விலும் சில நேரங்களில் பள்ளத்தாக்கில் விழுந்து விட்டதை போன்ற உணர்வு, ஏன் இந்த நெருக்கடி என்பது போன்ற பயம் காணப்படலாம். சோர்ந்து போய் விடாதீர்கள். கழுகு சிகரத்திற்கு செல்வதை போல உங்களுக்கு இது ஒரு காத்திருக்கும் காலம். தேவ சந்நிதியில் அமர்ந்திருந்து அவருடைய வார்த்தைகளின் மெல்லிய சத்தத்திற்கு கீழ்ப்படிவோம். புது பெலனை பெற்று கொள்வோம். செட்டைகளை அடித்து எழும்புவோம். சோர்ந்து போகாதபடி, இளைப்படையாதபடி கர்த்தருக்காய் உற்சாகமாய் எழும்பி பிரகாசிப்போம். ஆமென் அல்லேலூயா!
சர்ப்பங்களை எடுப்பாய்
தேள்களையும் மிதிப்பாய்
சத்ருவின் அதிகாரம்
சகலமும் மேற்கொள்வாய்
..
தேள்களையும் மிதிப்பாய்
சத்ருவின் அதிகாரம்
சகலமும் மேற்கொள்வாய்
..
கர்த்தருக்கு காத்திருந்து
கழுகு போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்
புது பெலன் அடைந்திடுவாய் – நீ
கழுகு போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்
புது பெலன் அடைந்திடுவாய் – நீ
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் கோழிகளை போல இந்த உலக குப்பைகளை கிளறி கொண்டு வாழ்கிறவர்களாக இல்லாமல், கழுகுகளை போல உயரத்தில் தேவனோடு இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர எங்களுக்கு ஞானத்தை தாரும். எந்த சூழ்நிலையிலும் தேவன் எங்களை அழைத்த அழைப்பை மறவாதவர்களாக உமக்கு சாட்சிகளாக வாழவும், உமக்கு காத்திருந்து புதுபெலனை பெற்று வாழவும் கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.