இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே

இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே

ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். –  (1 பேதுரு 4:16).
1955ஆம் ஆண்டு ருமேனியா நாட்டை பொதுவுடைமை கொள்கையினர் கைப்பற்றினர். அப்போது கிறிஸ்தவ சபைகளை அடக்கி ஒடுக்கி பாழ்ப்படுத்த தொடங்கினர். கிறிஸ்தவர்களில் ஏராளமானோர் சிறை கைதிகளாயினர். இரத்த சாட்சிகளாய் மரித்தனர். இது குறித்து ரிச்சர்ட் உம்பிராண்ட் என்ற தேவ மனிதர் இவ்வாறு எழுதியுள்ளார். ‘அந்த நாட்களில் ஒர் அந்தரஙக சபையில் இளம் வாலிப சகோதரி ஒருத்தி இருந்தாள். அவள் இரகசியமாக சுவிசேஷ பிரதிகளை விநியோகித்து, சிறு பிள்ளைகளுக்கு கிறிஸ்துவை பற்றி சொல்லி கொடுத்து வந்தாள். அது கம்யூனிச போலீசுக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அவளுடைய மனதை புண்படுத்தி, அவளை கைது செய்வதற்கான நேரத்தை அவர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர். அதற்காக அவளது மணநாள் வரை காத்திருந்தனர். அது அவளுடைய மண நாள். மணப்பெண்ணாக அழகிய உடையை அணிந்திருந்தாள் அவள்.
மணநாளே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அற்புத நாள். அப்போது திடீரென்று கதவுகள் திறந்தன. இரகசிய போலீசார் வீட்டினுள் நுழைந்தனர். போலீசாரை கண்டதும் அவள் ஒன்றும் பேசாமல் விலங்கிடப்படுவதற்கு தனது கரங்களை நீட்டினாள். அவர்கள் அந்த மென்மையான கரங்களில் விலங்கை மாட்டினர்.
வெளியே செல்வதற்கு முன் மணமகனை ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு, விலங்கினை முத்தமிட்டபடி அவள், ‘என்னுடைய மணநாளன்று இந்த ஆபரணத்தை எனக்களித்த எனது பரம மணவாளனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவருக்காக நான் இதை சகிக்க பாத்திரமுள்ளவளென்று அறிந்த அவரை வாழ்த்துகிறேன்’ என்று கூறினாள். கண்ணீர் சொரிந்து நிற்கும் உறவினர்களையும் தனித்து விடப்பட்ட மணமகனையும் விட்டு அவள் இழுத்து செல்லப்பட்டாள். கிறிஸ்தவ வாலிப பெண்களுக்கு கம்யூனிச நாடுகளிலுள்ள சிறைக்காவலர்களால் என்ன நேரிடும் என்பதை அறிந்திருந்தபடியால், அவர்கள் மிகவும் கலங்கி, நடுநடுங்கி, அலறி தவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு பின் பாழ்படுத்தப்பட்டு, உருக்குலைந்து, இளமை கடந்து, முப்பது வயதை கடந்த பெண்ணாக காட்சியளித்த அவள் விடுதலை செய்யப்பட்டாள். அதுவரையிலும் அவளுடைய மணவாளன் காத்திருந்தான். அவள் வெளியே வந்தபின் தன்னுடைய இரட்சகரான கிறிஸ்துவுக்காக இவ்வளவு குறைவாகத்தான் தன்னால் செய்ய முடிந்தது என கூறினாள். இப்படிப்பட்ட அழகு ததும்பும் அருமையான விசுவாசிகள் அந்தரங்க சபைகளில் இருந்தார்கள். அதனால்தான் கம்யூனிச நாடுகளின் இரும்பு திரைகள் அகற்றப்பட்டு சுவிசேஷம் எடுத்து செல்லப்பட்டது. அல்லேலூயா!’
பிரியமானவர்களே, கிறிஸ்துவுக்காக, சுவிசேஷம் எடுத்து செல்லப்படுவதற்காக நீங்கள் பாடுகளை சகிக்க ஆயத்தமா, இன்றைய நாட்களில் கிறிஸ்து எனக்காக என்ன செய்வார் என்பதே அநேகருடைய உள்ளத்தின் வாஞ்சையாக உள்ளது. மாறாக நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்ய போகிறேன் என்ற ஏக்கமும் தாகமும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். கர்த்தருடைய சீஷர்களில் யோவானைத்தவிர அனைவரும் இரத்த சாட்சிகளாக மரித்தவர்களே! தங்களுக்காக ஜீவனை தந்த இரட்சகருக்காக தங்கள் ஜீவனையும் தர அவர்கள் ஆயத்தமானார்கள். நாம் நம் ஜீவனை தராவிட்டாலும், அவருக்காக எதையாவது செய்ய வேண்டாமா? நம் உயிர் வாழும் நாட்களெல்லாம் அவருக்காக உழைக்க, அவரை அறிவிக்க, கிறிஸ்து இல்லாமல் நித்திய நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆத்துமாக்களை கர்த்தரிடம் கொண்டு சேர்க்க பாடுபடுவோமா? ஜெபிப்போமா?
இந்தியாவில் அலகாபாத்தில் ஒவ்வொரு வருடமும் கும்ப மேளா என்ற பெயரில் இலட்சக்கணக்கானவர்கள் தங்கள் பாவம் கழுவப்பட கங்கை நதியில் மூழ்கி ஸ்நானம் பண்ணுகிறார்களே, அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை கூறுபவர்கள் யார்? இயேசுகிறிஸ்துவின் இரத்தமே பாவத்தை கழுவும் பரிகாரம் என்று அவர்களுக்கு அறிவிப்பது யார்? நம்மால் முடியாவிட்டாலும் அவர்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கலாமே? நம் இந்தியர்கள் நம் சகோதரர்கள் அல்லவா? தீர்மானிப்போம், செயல்படுத்துவோம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக! ஆமென் அல்லேலூயா!
கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய சேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்
நம்மில் யார் யார் யாரோ?
திறப்பில் யார் யார் யாரோ?
..
ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் சேமத்திற்காய் ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்
அதிகாலையில் இராச்சாமத்தில்
பகலில், இரவில் இடைவிடாமல் எப்பொழுதுமே

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும் அழிந்து போய் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆத்துமாக்களுக்காகவும் ஜெபிக்கிறோம் தகப்பனே, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், கர்த்தருக்காக எழும்பி நிற்கிற மக்களை எழுப்பும். ஆத்துமாக்களுக்காக கண்ணீரோடு ஜெபிக்கிற, திறப்பின் வாசலில் நிற்கிற மக்களை எழுப்பும். ஏதோ வாழ்ந்தோம், பிழைத்தோம் என்றில்லாதபடி, கர்த்தருக்காக எதையாவது சாதிக்க பெலத்தை தாரும். அலகாபாத்தில் கங்கை நதியில் மூழ்கி பாவ கறை போக வேண்டும் என்று குளிக்கிற ஒவ்வொருவரையும் இரட்சியும். இயேசுவே பாவத்தை நீக்க முடியும் என்கிற உண்மையை அவர்களுக்கு வெளிப்படுத்தும். நீரே உண்மையான தேவன் என்பதை வெளிப்படுத்தும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.