பிறரது பாரத்தை சுமப்போம்
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். – (கலாத்தியர் 6:2).
மிசிசிபி மாகாணத்தில் வேகமாக ஓடும் ஒரு ஆறு உண்டு. அதனருகில் பழங்குடி மக்கள் சிலர் குடியிருந்தார்கள் அந்த ஆற்றில் நீச்சல தெரியாதவர்கள கவனமின்றி குளித்தால் கூட அவர்களை அந்த ஆறு இழுத்து செல்லும் அபாயம் உண்டு. ஒரு முறை வேற்று பழங்குடி இனத்தவர்கள் இவர்களை தாக்கினார்க்ள. இவர்கள் தப்பி ஓடுவதற்கு வழி எதுவும் இல்லை. ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். அடித்து செல்லும் ஆற்றை எவ்வாறு கடப்பது என திகைத்து நின்றனர். கடைசியில் ஒரு காரியத்தை கண்டு பிடித்தனர். பலவீனர்களை பலசாலிகள் தங்கள் தோள்களில் வைத்து கொண்டார்கள். சிறுபிள்ளைகளையும், வியாதியஸ்தர்களையும், வயதானவர்களையும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு இரண்டு மூன்று பேராக கரம் கோர்த்து ஆற்றை கடந்தார்கள்.
ஆற்றின் வழியாக அவர்கள் தட்டு தடுமாறி நடந்த போது ஒரு காரியத்தை கண்டு பிடித்தார்கள். யாருடைய தோளில் பாரம் அதிகமாக இருந்ததோ, அவர்களால் ஆற்றில் கால் ஊன்றி நிற்க முடிந்தது. மற்றவர்கள் ஆற்றை கடப்பது சிரமமாக இருந்தது. எடை அதிகமாக அதிகமாக அவர்களால் எளிதாக நடக்க முடிந்தது. பிறர் பாரத்தை சுமப்பதால் இப்படிப்பட்ட நன்மமைகள் கூட இருக்கிறது.
பிறரது சந்தோஷத்தில் பங்கு பெறுவதென்றால் நம் அனைவருக்கும் மிகவும் விருப்பம். ஒரு திருமண வீட்டிற்கு அழைப்பு வந்ததென்றால் முன் கூட்டியே அதற்கு அணிய வேண்டிய ஆடைகளையும், நகைகளையும் யோசித்து வைத்து விடுகிறோம். நிச்சயதார்த்தம், வளைகாப்பு, பிறந்தநாள் விழா, பாராட்டு விழா என அனைத்து சுப காரியங்களுக்கும் செல்வதென்றால் நமக்கு அலாதி பிரியமே. சந்தோஷமான நிகழ்வுகளில் பங்கு பெறுவதில் தவறொன்றுமில்லை. ஆனால் வேதம் தரும் ஆலோசனை ‘அழுகிறவர்களோடு அழுங்கள்’ என்பதே. விருந்து வீட்டிற்கு போவதிலும் துக்க வீட்டிற்கு போவது நலம். நகைப்பை பார்க்கிலும் துக்கிப்பு நல்லது. முக துக்கத்தினாலே இருதயம் சீர்படும் என்றே கூறுகிறது. அதாவது ஒருவரது துக்கத்தில் அவரை தாங்க வேண்டும். பாரத்தை சுமக்க வேண்டும். இழப்பிலே, நஷ்டத்திலே, அனாதை இல்லத்திலே, சிறையிலே, கண்ணீரோடு; பாரத்தோடு இருப்பவர்களின் பாரத்தில் பங்கெடுங்கள். பதவியிலிருப்போரையும், செல்வந்தரையும் சந்திக்க, விசாரிக்க ஆட்கள் அதிகம். சமீபத்தில் வியாதியாயிருந்த சினிமா நடிகர் ரஜினிகாந்திற்காக மண் சாப்பாடுகளை சாப்பிட்டும், மொட்டை அடித்தும் தங்கள் கடவுள்களிடம் வேண்டி கொண்டவர்கள் எத்தனை பேர்? அதே ஆஸ்பத்திரியில் தங்கள் ஒரே மகனையோ, மகளையோ மரணத்திற்கு ஒப்பு கொடுக்க வேண்டி உயிருக்காக போராடி கொண்டு இருக்கும் நிலையில் தவித்து கொண்டு இருக்கும் யாரையாவது இவர்கள் போய் விசாரித்தார்களா? கடவுளிடம் வேண்டி கொண்டார்களா? அவர்களை குறித்து யாராவது சிந்திக்கவாவது செய்தார்களா? இல்லை! மற்ற வேதங்களில் காணாத அன்பின் பிரமாணங்கள் நம் வேதத்தில் மாத்திரம் உண்டு.
ஏழை எளியோரை சென்று விசாரித்து அவர்களது கண்ணீரை துடைக்க ஆறுதல் கூற, உதவிகள் செய்ய மனமுவந்து முன்வருவோர் மிக சிலரே. அந்த மிக சிலரில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்பதே தேவனுடைய விருப்பமாகும். பிரியமானவர்களே, ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டுமென்பது கிறிஸ்துவின் பிரமாணம் ஆகும். பிறரது பாரத்தை சுமக்கவும், தாங்கவும், தேற்றவும், தூக்கவும் கற்று கொள்வோமானால் நமது பாரம் இலகுவானதாக தோன்றும். நமது பாரங்களை மட்டுமே சிந்தித்து நம்மை நாமே நொந்து கொள்ளும் நிலையை மாற்றி பிறரது பாரத்தை சுமந்து கிறிஸ்துவின் விருப்பத்தை நிறைவேற்றுவோமா? அவர்களது வியாதியில் அவர்களை சந்தித்து ஆறுதலை கூறுவோமா? சிறையில் கண்ணீரோடு இருப்பவர்களை சந்தித்து, ஆறுதலை கூறுவோமா? அவர்களின் பாரங்களை நாம் சுமக்கும்போது, நம் பாரங்கள் தானாக மறைவதை காண்போம். நாம் படும் பாடுகள் ஒன்றுமில்லாததாக தோன்றும். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுவோமாக! ஆமென் அல்லேலூயா!
பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்கு
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே
..
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
இயேசு கனிந்து திரிந்தனரே
..
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனர
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனர
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த வேளையிலும் மற்றவர்களின் பாரத்தை நாங்கள் சுமந்து அப்படியே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்ற கிருபை செய்யும். ஏழைகள் படும் துன்பங்களிலும், வியாதியோடு இருப்பவர்களின் துயரத்திலும் நாங்கள் பங்கு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூற எங்களுக்கு உணர்த்தும். மன பாரத்தோடு இருப்பவர்களை ஆற்றவும், தேற்றவும் கற்று தாரும். கஷ்டத்தில் இருப்பவர்கள், பாடுகளுக்குள் கடந்து செல்பவர்களை ஆறுதல் படுத்த கிருபை தருவீராக. அப்படி செய்து கிறிஸ்துவின் அன்பை பிறருக்கு வெளிப்படுத்த கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.