எங்கள் இயேசுவின் நாமம் இனிதான நாமம்

எங்கள் இயேசுவின் நாமம் இனிதான நாமம் 

‘ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்’. – (பிலிப்பியர் 2:9-11).
நம் அனைவருக்கும் ஒரு பெயர் உண்டு. அந்த பெயருக்கு ஒரு அர்த்தமும் உண்டு. முந்தைய நாட்களில் நம் பெற்றோர் அர்த்தமுள்ள பெயர்களையே வைத்தனர். ஆனால் தற்போதோ மிகவும் நாகரீகமாக இரண்டே எழுத்துகளில் அழைக்கும்படியாக பெயர்களை வைக்கிறார்கள். அநேகரிடம் உன் பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் அவர்களுக்கே அது தெரிவதில்லை. சும்மா அப்பா அம்மா இரண்டு பேரின் பெயர்களையும் சேர்த்து ஒரு புது பெயர் வைத்து விடுகிறார்கள்.
நம் வேதத்தில் ஒரு பெயர் உண்டு. அது மிகவும் விசேஷித்தது. அது அவருடைய உலக பெற்றோர்களால் வைக்கப்படவில்லை. அதை தேவனே வைத்தார். அந்த பெயர் இயேசு என்ற நாமமே! வேதத்தில் இயேசு என்ற பெயருக்கு எத்தனையோ அர்த்தங்களும் எத்தனையோ பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் பிந்திய ஆதாம், அபிஷேகிக்கப்பட்டவர், அல்பாவும் ஒமேகாவும் ஆனவர், ஆமென் என்ற பெயருள்ளவர் அவரே ஆரம்பமானவர், ஒரே பேறான குமாரனானவர், உண்டாக்கப்படாமல் ஜெநிப்பிக்கப்பட்டவர், விடியற்காலத்து வெள்ளி, வானத்தின் அப்பமானவர், கிளையென்னப்பட்டவர் தலைக்கு மூலைக்கல்லானவர், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர், ஆலோசனை கர்த்தர், கிறிஸ்துவானவர் இம்மானுவேல், விசுவாசத்தை துவக்குபவரும், முடிப்பவருமானவர், உண்மையுள்ள சாட்சியானவர், ஜீவனின் ஊற்றானவர் சபையின் தலையானவர், பிரதான ஆசாரியர், மகா பரிசுத்தமுள்ளவர் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா, சாவாமையுள்ளவர் நல்ல மேய்ப்பர், மனுஷ குமாரன், தேவ குமாரன், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், போதகர், வழியானவர், சத்தியமானவர், ஜீவனானவர் ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர், சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி… இந்த பெயர்கள் இதோடு நின்று விடவில்லை. அவர் பெயர்களை சொல்லி கொண்டே போகலாம்.. மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பெயர்களை விட இயேசு என்ற பெயரே மிகவும் இனிமையானது, அந்த பெயரில் உள்ள அதிகாரத்திலே வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும். ஆமென் அல்லேலூயா!
இயேசுகிறிஸ்துவின் பெயரில் எத்தனையோ சிறப்புகள் உண்டு. ‘அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்’ என்று யோசேப்புக்கு உரைக்கப்பட்டது. ஆம், அவரே நம் பாவங்களை நம்மை விட்டு நீக்கி நம்மை சுத்திகரிப்பவர். அவராலேயே நம் பாவங்கள் நீங்கி நமக்கு இரட்சிப்பு கிடைக்கிறது. ‘நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை’ – (அப்போஸ்தலர் 4:12).
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்! ஆமென் அல்லேலூயா! வானத்தில் உள்ளவர்கள், பூமியில் உள்ளவர்கள், பூமியின் கீழாக பாதாளத்தில் உள்ளவர்கள் அனைவரின் கால்களும் இயேசு என்ற நாமத்திற்கு முன்பாக முடங்கும். அவரே கர்த்தரென்று அறிக்கை செய்யும் அல்லேலூயா!
ஒரு நாள் இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். நாம் இரட்சிக்கப்படும்படியாக அவர் சிலுவையை சுமந்தார். தம்முடைய மாசற்ற இரத்தத்தை சிந்தினார். அந்நாட்களில் எத்தனையோ பேர் ரோம அரசினரால் சிலுவையில் அறையப்பட்டார்கள். சிலுவையில் அறைய மரங்களே இல்லை என்று சொல்லப்படும் அளவிற்கு அநேகர் அறையப்பட்டார்கள். ஆனால் அவர்களின் பெயர்கள் மறைந்து போனது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் நாமம் மாத்திரம் அன்றிலிருந்து இன்று வரை மாறாததாக, அவருடைய கல்லறை மாத்திரம் திறக்கப்பட்டதாக, காலியானதாக இருக்கிறது.
நாம் எதிர்காலம் இருண்டவர்களாக இல்லை, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நமக்கு வெற்றி உண்டு, ஆரோக்கியம் உண்டு, ஆசீர்வாதங்கள் உண்டு, பாவ மன்னிப்பு உண்டு, இரட்சிப்பு உண்டு, பரலோகம் உண்டு, நித்திய ஜீவன் உண்டு, நித்திய வாழ்வு உண்டு, அன்பு உண்டு, அரவணைப்பு உண்டு, சந்தோஷம் உண்டு, சமாதானம் உண்டு, கண்ணீர் துடைக்கப்படுவது உண்டு, கவலைகள் மாறுவது உண்டு, கஷ்டங்கள் மறைவது உண்டு, சாபங்கள் மாறுவது உண்டு, சாத்தானின் மேல் அதிகாரம் உண்டு, எல்லாவற்றிற்கும் மேல் நம் நேசர் இயேசுகிறிஸ்து நமக்கு என்றும் உண்டு! ஆமென் அல்லேலூயா!
துரைத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும்
பேய்பிசாசின் தந்திரத்திற்கும்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்
..
இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும்
மேலான நாமம் இயேசுவின் நாமம்
எல்லாவற்றிற்கும் மேலான நாமம்
இயேசுவின் நாமம் இயேசுவின் நாமம்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசிக்கிற நல்ல தகப்பனே, கிறிஸ்துவின் நாமத்தினால் கிருபையாய் நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிற எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும், அதிகாரங்களுக்காகவும் உம்மை துதிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எல்லா முழங்கால்களும் முடங்கவும், நாவுகள் யாவும் அவரே தேவனென்று அறிக்கை செய்யும் காலம் சீக்கிரம் வரப்போகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவரின் நாமத்தினால் நாங்கள் ஜெயம் கொண்ட வாழ்க்கை வாழவும், சத்துருவின் எல்லா தந்திரங்களின் மேலும் வெற்றி எடுக்கவும் நாங்கள் அவருடைய நாமத்திலே வெற்றி எடுக்கிறோம். எல்லாவற்றையும் எல்லா நாமத்துக்கும் மேலான இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.