தாழ்மையில் தேவனின் கிருபை
உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். – (மத்தேயு 20: 26,27).
மிகச்சிறந்த படிப்பாளரான Booker T. Washington என்பவர் Hampton Institute in Virginia என்னும் இன்ஸ்டியூட்டியில் சேருவதற்காக இன்டர்வியூவிற்காக சென்றிருந்தார். அந்த இன்ஸ்டிடியூட் மிகவும் பெயர் பெற்றதாகும். அதில் இடம் கிடைப்பது மிகவும் அரிது, அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை அங்கிருந்த வகுப்பறையை கழுவ சொல்லிவிட்டு, அங்கிருந்த பெஞ்சுகளையும் துடைக்க சொல்லி விட்டு போனார்கள். அவர் பாடம் சம்பந்தமான கேள்வியை கேட்பார்கள் என நினைத்தால் இந்த வேலையை சொல்லுகிறார்களே என்று அவருக்கு கோபமிருந்தாலும் வேறுவழியில்லாமல், அதை துடைக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த தலைமை ஆசிரியை எல்லாவற்றையும் தனது கைக்குட்டையால் துடைத்து பார்த்து, ‘சிறப்பான காரியத்தை செய்தாய்’ என்று அவரை பாராட்டி அவருக்கு அங்கு ஒரு இடத்தை கொடுத்தார்களாம். அது தன் வாழ்க்கையையே மாற்றிற்று என அவர் தனது புத்தகத்தில் எழுதினார்.
அன்று ஒரு நாள் மேல் வீட்டறையில், இயேசுகிறிஸ்து தன் வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினபோது அதை பார்த்து கொண்டிருந்த சீஷர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! அவர்கள் அவரை ராஜாவாக, தங்கள் குருவாக, ஆண்டவராக, போதகராக ஏற்றிருந்தபோது அவரே தங்களது கால்களை கழுவுகிறரரே என்று நெருடல் அடைந்திருந்தாலும் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை. அவர்கள் எதிர்பாராத காரியத்தை கிறிஸ்து செய்து கொண்டிருந்தார். அவர்கள் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார்கள். கடைசியில் பேதுரு மாத்திரம் துணிவுடன், ‘ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா’ என்று கேட்டபோது, இயேசுகிறிஸ்து ‘ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்’. (யோவான் 13:4-15) என விளக்கினார்.
இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிற நமக்குள் தாழ்மை இருக்கிறதா? நாம் தேவனாக வணங்குகிற இயேசுகிறிஸ்துவே கால்களை கழுவினதுண்டானதால், நாம் எவ்வளவு தாழ்மையாய் இருக்க வேண்டும்? அவருடைய மாதிரியை பின்பற்றுகிறோமா? மற்றவர்களுடைய கால்களை கழுவாவிட்டாலும், மற்றவர்களை உதாசீனமாக எண்ணுவதாவது குறைந்திருக்கிறதா? இன்று அந்த தாழ்மைக்கும் நமக்கும் எவ்வளவு தூரமாகி விட்டது! கொஞ்சம் கையில் பணம் கிடைத்து விட்டால், மற்றவர்களை துச்சமாக எண்ணுகிற மனம், (ஏதோ அந்த பணம் என்றென்றும் நிலைத்திருக்கிற மாதிரி) வேலையில் சற்று உயர்த்தப்படடால், மற்றவர்கள் எனக்கு கீழ் என்கிற மாதிரியான நடவடிக்கைகள், அது வேலையிடத்தில் மாத்திரம் அல்ல, சக விசுவாசிகளிடமும் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? கிறிஸ்துவின் போதகத்திற்கு மாறாக நடக்கிறதல்லவா?
ஊழியத்திலும் நான்தான் பெரியவன், உனக்கு அந்த தாலந்து இல்லை, ஆகவே நான் உன்னைவிட பெரியவன் என்று மற்றவர்களை மட்டமாக எண்ணும் நினைவுகள், அவன் என்ன சின்ன ஊழியக்காரன் நான் பெரியவன், எனக்கு இருக்கிற அந்தஸ்து என்ன, புகழ் என்ன என்கிற பெருமையான எண்ணங்கள், மட்டுமல்ல, அதற்கேற்ப நடவடிக்கைகள்! அவை கர்த்தருடைய சீஷன் என்பதை விட பரலோகத்திலிருந்து பெருமையினிமித்தம் கீழே தள்ளப்படட லூசிபரின் எண்ணங்கள் அல்லவா நிறைந்து காணப்படுகிறது!
ஒருமுறை சாது சுந்தர் சிங் இங்கிலாந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சகோதரி, ‘உமக்கென்ன, நீர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின், உமக்கு என்ன வரவேற்பு, என்ன புகழ்!’ என்று அவரிடம் கூறினார்கள். அப்போது அவர் சொன்னார், ‘இயேசுகிறிஸ்து ஏறி சென்ற கழுதையாகவே நான் என்னை நினைக்கிறேன். அன்று கிறிஸ்துவை சுமந்த கழுதை, தனக்குதான் மக்கள் வரவேற்பளிக்கிறார்கள். தனக்குதான் மகிமை செலுத்துகிறார்கள் என்று நினைத்திருந்தால் அது எத்தனை முட்டாள்தனமோ அதுப் போலத்தான், இப்போது கிடைக்கிற புகழ் எல்லாம் எனக்குத்தான் என்று நான் நினைத்தால் நானும் ஒரு முட்டாளாகத்தான் இருப்பேன். கிறிஸ்துவை நான் சுமப்பதால்தான் எனக்கு இந்த புகழ் எல்லாம், கிறிஸ்து எனக்குள் இல்லாவிட்டால், நான் வெறும் கழுதைதான்’ என்று கூறினாராம்! என்ன ஒரு தாழ்மை பாருங்கள்! அப்படிப்பட்ட தாழ்மையுள்ள பாத்திரங்களையே கர்த்தர் இந்நாளில் தேடுகிறார், பணம், பதவி பொருள், வந்தாலும் மாறிப்போகாத, அகந்தை கொள்ளாத இருதயத்தையே தேவன் தேடுகிறார். அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது (யாக்கோபு 4:6). பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிற தேவன், ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கு எத்தனை கிருபைகளை கொடுக்கிறார் பாருங்கள்! அழிவுக்கு முன்னானது அகந்தை என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. நமது குலத்தை பற்றியோ, நமது அந்தஸ்தை பற்றியோ, நமது ஊழியங்களை குறித்தோ நாம் பெருமை கொள்ளக்கூடாது, எல்லாமே கர்த்தர் கொடுத்தது. அவர் நமக்கு கொடுக்க கொடுக்க, நாம் இன்னும் நம்மை தாழ்த்தும்போது, இன்னும் அதிகமாய் அவர் நமக்கு கொடுக்கிறார், உயர்த்துகிறார். ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட கிருபைகளில், நம்மையே உயர்த்தும்போது கர்த்தர் நம்மை விட்டு அகன்று போகிறார். ஆனால் அதை அறியாமல் நாம் இன்னும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.
உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன் என்ற கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!
தாம்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலனுடன்
சேவை செய்ய கிருபை தாருமே
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலனுடன்
சேவை செய்ய கிருபை தாருமே
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்துகிற நல்ல தகப்பனே, தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிப்பவரே, உம்மை துதிக்கிறோம். எங்களை அதிகமாய் தாழ்த்தி, உம்முடைய கிருபைக்கு பாத்திரவான்களாய் எங்கள் ஒவ்வொருவரையும் மாற்றுவீராக. எங்களுக்கு எந்த பெருமையும் எந்த அகந்தையும் வேண்டாம் ஐயா, உம்முடைய கிருபை மாத்திரம் போதும் தகப்பனே. அதை பெற்றுக் கொள்ள எங்களுக்கு கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.