…உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள்… – (ஏசாயா 39:4).
எசேக்கியா ராஜா மரணத்திற்கேதுவான வியாதிப்பட்டு கர்த்தரால் சுகத்தை பெற்றபோது, பாபிலோனிய ராஜா அதை கேள்விப்பட்டு அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானங்களையும் அனுப்பினான். வந்தவர்களிடத்தில் எசேக்கியா ராஜா கர்த்தர் தனக்கு செய்த நன்மைகளை சொல்லியிருக்கலாம். கர்த்தர் எப்படி அவருடைய கண்ணீரை கண்டு விண்ணப்பத்தை கேட்டு 15 ஆண்டுகளை நீட்டித்து கொடுத்தார் என்பதை விளக்கியிருக்கலாம். யெகோவா தேவன் எவ்வளவு வல்லமையுள்ள தேவன், மனதுருக்கமுள்ள தேவன் என்றெல்லாம் அவருடைய கிருபையையும், மகத்துவத்தையும் கூறி தேவனை மகிமைப்படுத்தியிருக்கலாம். காரணம், அவர் ஆரோக்கியமான செய்தியை விசாரிக்கத்தானே வந்திருக்கிறார்கள், ஆனால் எசேக்கியாவோ தனது செல்வ செழிப்பை அந்த தூர தேசத்திலிருந்து வந்தவர்கள் கண்டு தன்னை புகழும்படியாக, பெருமையான இருதயத்தோடு தன் பொக்கிஷ சாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும் நல்ல பரிமள தைலத்தையும், தன் ஆயுத சாலையிலுள்ள போர் ஆயுதங்கள் அனைத்தையும், தன் பொக்கிஷ சாலையிலுள்ள எல்லாவற்றையும் அவர்களுக்கு காண்பித்தார். தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்கு காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.
ஏசாயா தீர்க்கன் ராஜாவிடம் வந்து காரியத்தை விசாரித்து கர்த்தர் சொல்லும் வார்த்தையை கூறினார். ‘உம் பிதாக்கள் சேர்த்து வைத்தவைகளும், உம்மிடம் உள்ளதும், பாபிலோனுக்கு கொண்டு போகப்படும். உம் பிள்ளைகள் பாபிலோனின் அரண்மனையில் வேலைக்காரர்களாக இருப்பார்கள்’ என்றார். நாம் நினைக்கலாம், தன்னிடம் உள்ளதை காட்டியது இவ்வளவு பெரிய தண்டனையை பெறும் அளவிற்கு பெரிய பாவமா என்று! ஆம், பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். அதோடு மகா பெரிய தேவன் தனக்கு வர வேண்டிய மகிமையை வேறொருவருக்கும் கொடார்.
பிரியமானவர்களே, பாபிலோனிய ஸ்தானாதிபதிகளை கண்ட உடன் எசேக்கியாவிற்கு கை, கால் புரியாத சந்தோஷம் வந்து விட்டது. அவருக்கு மன மேட்டிமையும், மறைமுகமான பெருமையும் வந்து விட்டது. ஆகவே எதை காட்ட வேண்டும், எதை காட்ட கூடாது என்ற தெளிவு இல்லாமல் அனைத்தையும் திறந்து காண்பித்து விட்டார்.
இதை வாசிக்கிற நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களை விட அந்தஸ்துள்ளவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால் உங்களை விட நாங்கள் எதிலும் குறைந்தவர்களல்ல என்பதை நிரூபிக்கிறீர்களல்லவா? அவர்கள் உங்களிடம் என்னதை காண்கிறார்கள், உங்கள் படிப்பையா? செல்வத்தையா? பணத்தையா? புகழையா? அல்லது கர்த்தர் செய்த நன்மைகளையா? சாட்சியான வாழ்வையா? தாழ்மையான குணத்தையா? உங்கள் குடும்பத்தினரின் ஜெப ஜீவியத்தையா? குடும்பத்தின் ஐக்கியத்தையா? எதை காண்பிக்கிறீர்கள்? கர்த்தர் நம்மை மேன்மை படுத்தும்போது, நாம் தாழ்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
அதுவே சாட்சி! இவையெல்லாம் என்னுடைய கையின் பிரயாசத்தினால் வந்ததல்ல, தேவன் தந்தவை’ என்று சொல்லாமல் சொல்லும் அளவிற்கு நமது தாழ்மையான குணம் காணப்படும்போது, கர்த்தர் மகிமைப்படுவார். தேவன் நமது கண்ணீரை கண்டு, விண்ணப்பத்தை கேட்டு செய்த இரக்கத்தை மறந்து போகாதபடி எச்சரிக்கையாயிருப்போம். தேவ நாம மகிமைக்கென்று ஜீவிப்போம். ஆமென் அல்லேலூயா!
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
இராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்
ஆராதனை உமக்கே
..
எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்குப் பாத்திரரே
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் செய்த நன்மைகளை நாங்கள் மறந்து போய் விடாதபடி, எங்களிடத்தில் வருகிறவர்களுக்கு உம்முடைய கிருபைகளை எடுத்து கூறுகிறவர்களாக எங்கள் ஒவ்வொருவரையும் மாற்றும். நீர் எங்களுடைய தாழ்மையில் எங்களை நினைத்து எங்களை உயர்த்திய கிருபைகளை மறவாதபடி, உம்முடைய தயவை மற்றவர்களுக்கு சாட்சியாக கூற எங்களுக்கு உதவும். எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதமெல்லாம் எங்கள் தேவனால் வந்தது என்று தாழ்மையுடன் ஜீவிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.