யார் ஆவிக்குரியவர்கள்?
பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். – (கலாத்தியர் 5:16).
யார் ஆவிக்குரிய கிறிஸ்தவன் என்ற கேள்விக்கு ஒவ்வொரு கிறிஸ்தவ வட்டாரத்திலும் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகிறது. சில ஐக்கியங்களில் உற்சாகமாய் பாடல்பாடி அல்லேலூயா என்று முழக்கமிடுகிறவர்கள் ஆவிக்குரியவர்கள் என்று எண்ணப்படுகின்றனர். சில வட்டாரங்களில் பிரசங்கியார் வசனம் வாசிக்க சொல்லியவுடன் முதலாவதாக சத்தமாக வாசிப்பவர்களே ஆவிக்குரியவர்களாக கருதப்படுகின்றனர். சில நேரங்களில் நீண்ட ஜெபம் செய்பவர்களே ஆவிக்குரியவர்களாக எண்ணப்படுகின்றனர்.
மேற்கண்ட காரியங்கள் ஒரு ஆவிக்குரிய மனிதனின் அடையாளங்களாக இருந்தாலும் வெளிப்படையான இக்காரியங்கள் இருப்பதினால் ஒரு மனிதனை ஆவிக்குரியவன் என்றுசொல்லிவிட முடியாது. ஆவிக்குரிய சபைகளில் பங்கு கொள்வதினால் ஒருவரும் ஆவிக்குரியவர்களாகி விட முடியாது. உண்மையான ஆவிக்குரியவனிடம் சில ஆழ்ந்த விருப்பங்கள் தோன்றி இருக்கும். அவை அவனது முழு வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும். அவைகளை கீழே காண்போம்.
1. ஆவிக்குரிய மனிதன் மகிழ்ச்சியாயிருப்பதை விட பரிசுத்தமாய் இருப்பதையே விரும்புவான். ஆனால் இன்றைய கிறிஸ்தவ வட்டாரம் பரிசுத்தத்தை விட பரவசத்தையே நாடுகிறது. பரவசம் நிலையானது அல்ல, தேவன் பரிசுத்தமாயிருப்பதையே விரும்புகிறார்.
2. ஆவிக்குரிய மனிதன் தான் நினைப்பதைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சியை தேவன் தர வல்லவர் என்பதை அறிந்திருக்கிறான். ஆனால் அந்த மகிழ்ச்சியை பெற்றனுபவிக்க தான் பாத்திரமாக இருப்பது அதைவிட அவசியம் என்றும் அறிந்திருப்பான்.
3. ஆவிக்குரிய மனிதன் சிலுவை சுமத்தலை பாரமாக நினைக்க மாட்டான். அநேக கிறிஸ்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் வரும் பாடுகள், வியாதிகளை சிலுவை என்று எண்ணுகின்றனர். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும் இவைகள் வருகின்றனவே. பின் சிலுவை என்றால் என்ன? இயேசுகிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்படிவதால் வரும் கூடுதல் பிரச்சனைகளையே சிலுவை என்று ஆண்டவர் குறிப்பிடுகிறார். இந்த சிலுவையை கர்த்தர் நம்மேல் திணிப்பதில்லை. மாறாக ஒரு ஆவிக்குரியவன் விளைவுகளை அறிந்தும் தானே சுயமாய் எடுத்து செல்வான்.
4. ஆவிக்குரிய மனிதன் பிறரது புகழ்ச்சியை விரும்பி நன்மை செய்யாமல் எதை செய்தாலும் அதை கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் செய்வான். அவன் நேரத்தையோ, காலத்தையோ மனிதர் தன்னை புகழ வேண்டும் என்றோ பாராமல், கர்த்தருக்கென்று உண்மையாய் தன்னால் இயன்றதை செய்வான்.
5. ஆவிக்குரிய கிறிஸ்தவன் மற்றவர் உயர்த்தப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறான். அவனிடத்தில் பொறாமையில்லை. தான் கவனிக்கப்படாமல் வேறாருவர் கனப்படுத்தப்படும்போது விரக்தியடைய மாட்டான்.
6. ஆவிக்குரியவன் மற்றவர்களை தேவன் உபயோகப்படுத்துவதைக் கண்டு முறுமுறுக்காமல் மகிழ்ச்சியடைந்து கர்த்தரை துதிப்பான். தானும் கர்த்தரால் உபயோகப்படுத்தப்பட வேண்டும் என தன்னை அர்ப்பணிப்பான்.
7. ஆவிக்குரியவன் பூமியில் இருக்கும் நாட்களிலேயே பரலோக பிரஜையாகி விடுகிறான். உலகம் போற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே வாழாமல் தேவனுக்கு பிரயோஜனமுள்ள வாழ்வு வாழ பிரயாசப்படுவான்.
மேற்கண்டவற்றை ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவன் ஏதோ முயற்சி செய்து சுய பெலத்தால் செய்பவை அல்ல. பரிசுத்த ஆவியானவர் அவனுள் நடப்பிக்கும் கிரியையே ஆகும். இந்த உலகத்திற்கு உரிய வேஷத்தை தரிக்காமல் உண்மையான ஆவிக்குரியவர்களாக கர்த்தருக்கென்று வாழ்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
உள்ளான மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரம் இது
சோர்ந்து போகாதே நீ
சோர்ந்து போகாதே
புதிதாக்கப்படுகின்ற நேரம் இது
சோர்ந்து போகாதே நீ
சோர்ந்து போகாதே
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் மாம்சத்திற்குரியவர்களாக அல்லாமல், ஆவிக்குரியவர்களாக நடந்து கொள்ள எங்களுக்கு கிருபை செய்யும். ஆவிக்குரியவனின் குணாதிசயங்கள் எங்கள் வாழ்வில் காண்ப்பட ஆவியானவர் எங்களுக்கு உதவி செய்வாராக. நாங்கள் பெலவீனர்கள் தகப்பனே, மாம்சமும் ஆவியும் ஒன்றுக்கொன்று விரோதமாக போராடுகிறபடியால், நாங்கள் மாம்சத்துக்கு விட்டுக்கொடுத்து, உமக்கு விரோதமாக போய் விடாதபடி எங்களை ஆவிக்குரியவர்களாக மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.