பிறருக்கு உதவுவோம்
எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். – (நீதிமொழிகள் 11:25).
சில குழந்தைகள் பிறக்கும்போதே மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் ஊனமுற்றவர்களாய் பிறக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணம் செய்தவர் ஹென்றி நோவன். ஒரு முறை இவரை காணும்படி நண்பரொருவர் அவ்விடத்திற்கு வந்திருந்தார். அன்று ஆடம் (Adam) என்கிற மனவளர்ச்சி குன்றிய வாலிபனின் பிறந்த நாளாயிருந்தது. அதை ஒரு சராசரி வாலிபனுக்கு கொண்டாடுவதை போல கொண்டாடும்படி ஏற்பாடு செய்திருந்தார் ஹென்றி. ஆனால் அந்த கொண்டாட்டததை குறித்து ஆடமுக்கு ஓன்றும் புரிந்ததாக தெரியவில்லை. ஏதோ உறுமுவது போன்ற சத்தமிட்டு கொண்டு அங்கே அவன் அமர்ந்திருந்தான். கொண்டாட்டம் முடிந்த பின் நண்பர், ஹென்றியிடம் ஆடமை குறித்து விசாரித்தார்.
‘இவ்வாலிபனை ஒவ்வொரு நாளும் குளிக்க வைத்து சுத்தம் செய்ய தினமும் 2 மணி நேரம் பிடிக்கும்’ என்றார். நண்பர் ‘ஹென்றி நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளர். திறமையான பேச்சாளர். நீங்கள் இன்னும் மற்ற பணிகளை செய்யலாமே’ என்றார். அதற்கு ஹென்றியிடமிருந்த ஒரு ஆச்சரியமான பதில் வந்தது. ‘நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இங்கு நான் ஆடமுக்கு உதவி செய்யவில்லை. ஆடம் தான் எனக்கு உதவி செய்கிறான்’ என்றார். நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை.
‘ஆடமுக்கு ஒவ்வொரு நாளும் உதவி செய்யும்போது நம்மை படைத்த தேவனின் பொறுமையையும், அன்பையும் எண்ணி வியக்கிறேன். நம்மை தேவன் எவ்வளவு அன்பாய் கவனித்தால் கூட இந்த ஆடமை போல ஒன்றும் புரியாதவர்கள் போல் அவருக்கு பதில் நன்றி சொல்லாதவர்களாக ஏதோ ஒன்றை சொல்லி முணுமுணுத்து உறுமி கொண்டிருக்கிறோம். மேலும் இவனுக்கு ஒவ்வொரு நாளும் உதவும்போது, என் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியமான தாழ்மையை சுலபமாய் கற்று கொள்கிறேன்’ என்றார்.
ஆம் பிரியமானவர்களே, நாம் பிறருக்கு உதவும்போது அவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் நன்மையயை கொண்டு வருகிறோம். உலகத்தார் மற்றவர்களுக்கு உதவி செய்தால் தனக்குரியவை குறைந்து விடும் என்று எண்ணுகின்றனர். ஆனால் வேதம் கூறுவதென்ன? ஏழைக்கு உதவுவது கர்த்தருக்கு கடன் கொடுப்பதற்கு சமானம் என்றும் இவ்வுலகிலே பசியுள்ள ஒருவனுக்கு உணவு கொடுப்பதை, நித்தியத்திலே தேவன் என்னை போஷித்தாய் என்றும் கூறுவார். ஆம் பிறருக்கு எவ்வளவுக்கொவ்வளவு உதவுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
‘மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயமும் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்’ (மீகா 6:8) என்று வேதம் கூறுகிறது. நன்மை எது என்று கேட்டால், வேத வசனத்தின்படி, அநியாயம் எதுவும் செய்யாமல் நியாயமாய் நடந்து, மற்றவர்கள் மேல் இரக்கமாயிருந்து, தேவனுக்கு முன்பாக தாழ்மையாய் நடப்பதையே தேவன் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார். அப்படிப்பட்டவர்களாக, ஏழைகள் மேல் இரக்கமாயிருந்து, நீதி நியாயத்தையே செய்து, என்ன கனம் வந்தாலும், என்ன புகழ்ச்சி வந்தாலும், கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி அவரையே உயர்த்துவோமா? அதையே தேவன் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார். ஆமென் அல்லேலூயா!
நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ அந்த அன்பில் மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்
நம் இயேசு நல்லவர் நம் இயேசு வல்லவர்
நம் இயேசு பரிசுத்தர்
நமக்காக ஜீவன் தந்த தேவன் அவரே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ அந்த அன்பில் மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்
நம் இயேசு நல்லவர் நம் இயேசு வல்லவர்
நம் இயேசு பரிசுத்தர்
நமக்காக ஜீவன் தந்த தேவன் அவரே
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எந்த நன்மையும் எங்களில் இல்லை என்று அறிந்தும் எங்களை நேசிக்கிற நல்லவரே, நாங்களும் மற்றவர்களுக்கு இரங்கவும், நேசிக்கவும், ஏழைகளுக்கு இரங்குகிறவர்களுக்காகவும், நீதி நியாயத்தை செய்யவும், எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை தாழ்த்தவும் எங்களுக்கு கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.