சத்துருவை சிநேகியுங்கள்

சத்துருவை சிநேகியுங்கள் 

உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார். – (நீதிமொழிகள் 25:21,22).

மேற்கு பெர்லினை சுற்றி ஜெர்மனி நாடு ஒரு சுவற்றை எழுப்பி, அதை கிழக்கு ஜெர்மனி மற்றும் கிழக்கு பெர்லினோடு உறவில்லாதபடி தனித்து இருந்த காலம். கிழக்கு பெர்லினிலிருந்து மேற்குக்கு யாரும் போக முடியாது, அப்படி போகிறவர்கள் மரணத்தை சந்தித்த காலம். ஆகவே கிழக்கிலிருந்த பெர்லின் மக்களுக்கு மேற்கு பெர்லினை சேர்ந்தவர்கள் மேல் கடும் கோபம் இருந்து வந்தது. ஆதலால் ஒரு முறை அவர்கள் ஒரு லாரி முழுவதுமாக, குப்பைகளையும், தேவையற்ற பொருட்களையும், கற்களையும் அதில் ஏற்றி, அதை ‘பரிசாக உங்களுக்கு அனுப்புகிறோம்’ என்று மேற்கு பெர்லினுக்கு அனுப்பி வைத்தனர்.

அதை கண்ட மேற்கு பெர்லினருக்கு கோபம் வந்தது. அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தனர். அப்போது ஒரு வயதான ஞானமுள்ள மனிதர், அவர்களிடம், ‘நாம் அவர்கள் எதிர்பாராத காரியத்தை செய்ய வேண்டும்’ என்ற சொல்லி, அவர்களும் ஒரு லாரி நிறைய ஆனால் அவர்கள் அனுப்பியது போலில்லாதபடி, உணவு வகைகள் (அது கிழக்கு பெர்லினியருக்கு தட்டுப்பாடாக இருந்த காலம்), உடைகள், மருந்து வகைகள் எல்லாவற்றையும் ஏற்றி, அதை கிழக்கு பெர்லினுக்குள் அனுப்பி, அதை அவர்களிடம் இறக்கிவிட்டு, அதில் ஒரு குறிப்பை மட்டும் எழுதி வைத்திருந்தனர். அந்த குறிப்பில், ‘ஒவ்வொருவரும் தங்களால் எதை அனுப்ப முடியுமோ அதையே அனுப்பபுவார்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதை கண்ட கிழக்கு பெர்லினை சேர்ந்தவர்களின் முகத்தில் ஈயாடியிருக்காது என்று நினைக்கிறேன்.

உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார் என்று வசனம் கூறுகிறது. ஆனால் அந்த அன்பு உள்ளத்தில் இல்லாததால் இன்று உலகம் இருக்கும் நிலைமை எத்தனை பயங்கரமானது! பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்ததைப் போல கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று இன்னும் நாடுகள் தங்கள் வஞ்சங்களை தீர்த்து கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானில் தினமும் தற்கொலை படையினரால் மடியும் பாவமறியா மக்கள், ஈராக்கில தற்கொலை படையினரால் தினமும் மடியும் மக்கள், இலங்கையில் தமிழர் படும் பாடுகள்! இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

கிறிஸ்துவின் அன்பு இவர்களின் உள்ளத்தில் ஊற்றப்பட்டிருந்தால், இந்த மாதிரி சாவுகள் நடக்காதே! சத்துருவை சத்துருவாகவே பார்க்கும்போது எத்தனை பயங்கரங்கள்! ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்’ (மத்தேயு 38, 44,45). என்று இயேசுகிறிஸ்து கூறினார். 

நாம் இயேசுகிறிஸ்து கூறியபடி சத்துருக்களைச் சிநேகிக்கும்படியாகவே அழைக்கப்பட்டிருக்கிறோம். அவர் சிலுவையில் பாடுபடும்போதும், ‘பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்று தன்னை பகைத்தவர்களையும் மன்னித்து அன்பு கூர்ந்தாரே! நம்மை பகைகிறவர்களுக்கு நன்மை செய்தால், ‘அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்; என்ற சொன்னபடி கர்ததர் நமக்கு ஏற்ற நன்மைகளை தருவார்.

காரணமில்லாமல் உங்களை நிந்திக்கிறார்களா? உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். அவர்கள் உள்ளம் மாறி உங்களிடம் அன்பாக நடந்து கொள்வதை நீஙகள் கண்கூடாக காண்பீர்கள்! நம் தேவனை விசுவாசியாதவர்களும், வெறுக்கிறவர்களும் எத்தனையோ பேர் இருந்தும், அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறாரே! அவர் எத்தனை நல்லவர்! அவருடைய பிள்ளைகளாய் இருக்கிற நாமும் அவர் செய்தபடி செய்யவேண்டும். அப்போதுதான் அவருடைய பிள்ளைகளாய் நாம் இருக்க முடியும். அப்போது கர்த்தருடைய ஆசீர்வாதம் நம் தலையின்மேல் நிச்சயமாக இறங்கும்! ஆமென் அல்லேலூயா!

மனிதர் என்னை இகழ்நதாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
சிலுவையை சுமந்திடுவேன்
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்

ஜெபம்:
இருளின் அதிகாரத்தில் இருந்த எங்களை இயேசுவின் ராஜ்ஜியத்திற்கு தகுதியாக்கின எங்கள் நல்ல கர்த்தரே, உம்மை துதிக்கிறோம். எங்கள் சத்துருக்களை நேசிக்க எங்களுக்கு கிருபை செய்யும். தேவையில்லாமல் எங்களை நிந்திக்கிறவர்களையும், எங்களை சபிக்கிறவர்களையும் நாங்கள் நேசிக்க எங்களுக்கு கிருபை செய்யும். நீர் எங்களுக்கு காட்டிப்போன பாதையில் நாங்களும் நடந்து, சத்துருக்களை சிநேகிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் எங்களை தகுதிபடுத்தும். அதன் மூலம் நாங்கள் உம்முடைய பிள்ளைகள் எனபதை அவர்கள் அறிந்துகொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.