முடிவுபரியந்தம் நிலைத்திரு

முடிவுபரியந்தம் நிலைத்திரு 

முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். – (மத்தேயு 10:22).

இந்த கடும் கோடை காலத்தில் மரங்களிலிருந்து இலைகளெல்லாம் உதிர்ந்து விழுவதை பார்க்கிறோம். வெயிலின் கொடுமை தாங்காமல் இலைகளெல்லாம் காய்ந்து கீழே விழுகின்றன என்றே நாம் நினைப்போம். உண்மை என்னவென்றால் மரங்களில் அவைகள் மூலமாகவே ஆவியாகுதல் நடைபெறுகிறது. அதாவது மரம் தன்னிலுள்ள தண்ணீரை இலையிலுள்ள துளைகள் வழியாகவே ஆவியாக்குகிறது. வெயில் காலத்தில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே இருக்கும். ஆகவே வேருக்கு கிடைக்கும் நீரும் குறைந்து விடுகிறது. இந்த சூழ்நிலையிலும் மரம் தன் உயிரை காத்து கொள்ள வேண்டும். ஆகவே, இலைகள் இருந்தால் தன் வேரிலுள்ள நீர் ஆவியாகி கொண்டே இருக்கும். அதனால் தன் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று தன் இலைகளனைத்தையும் உதிர்த்து விடுகிறது. கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? தேவன் தாம் படைத்த ஒவ்வொன்றின் மூலமாகவும் நம்முடன் இடைபடுகிறார்.

வேதம் நமக்கு சொல்லுவதென்ன? முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். ஆம் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஓட்டத்தை துவக்குவது ஒரு அற்புதமான செயலே! ஆனால் அதில் இறுதிவரை நம்மை காத்து கொள்வது மிக மிக முக்கியமானதாகும். சூழ்நிலை விதவிதமாய் மாறி கொண்டேயிருந்தாலும் இறுதி மூச்சு வரை கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். இறுதிவரை தேவனுக்காய் வாழ துணை நிற்பது அவரோடுள்ள ஐக்கியமே! அதுவே ஆணிவேர்.

ஆனால் இந்த ஐக்கியத்திற்கு ஆபத்து வரும்போது அதற்கு தடையாக இருக்கிற எந்த காரியமானாலும் அதை இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை நம்முடைய நட்பு தேவனிடத்திலிருந்து நம்மை பிரிப்பதாயிருந்தால் அதை கண்டிப்பாக இழக்கவே வேண்டும். தேவனோடுள்ள உறவை டி.வி., இன்டர்நெட் போன்ற எதுவும் தடுக்குமானால் அதை எடுத்து விடத்தான் வேண்டும். எப்படி மரம் தன் உயிரை காப்பாற்ற தனக்கு அழகு கூட்டும் இலைகளை இழக்க தயங்குவதில்லையோ, அதுபோல நம் வாழ்வில் தேவனோடுள்ள நம்முடைய உறவிற்கே ஆபத்து வரும்போது இவற்றை இழப்பது புத்திசாலித்தனம்தானே!

பிரியமானவர்களே, கப்பல் பயணத்திலே, புயலும், அலையும் எழும்போது, தங்கள் உயிரை காப்பதற்காக பயணிகள் தங்களிடமுள்ள மூட்டை முடிச்சியிலிருந்து விலையுயர்ந்த பொருட்கள் வரை அனைத்தையும் கடலில் எறிந்து விடுவார்களாம். இதை யோனா புத்தகத்திலும் வாசித்திருக்கிறோம். அதுப்போல நாம் இவ்வுலக வாழ்வில் நம்மை சற்று பின்மாற்றம் அடைய செய்யும் சூழ்நிலை வரும்போது நம்மை ஆராய்ந்து, விட வேண்டியதை மனமுவந்து விட்டுவிடுவதே ஞானம். மேலும் இலை உதிர்ந்து மொட்டையாக இருக்கும் மரம் வசந்த காலத்தில் எப்படி இருக்கும் என்று தெரியுமல்லவா? புதிய இலைகளுடன் புது பொலிவாக காணப்படும். அதுபோல கிறிஸ்துவுக்காய் இழந்தவரெவரும் தரித்திரராவதில்லை. தேவனுக்கு முதலிடம் கொடுக்க முனையும் உங்கள் இருதயத்தை பார்க்கும் தேவன் எல்லாவற்றையும் கூட கொடுப்பார். ஆமென் அல்லேலூயா!

இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் – நான்
..

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்ல
எல்லாமே இயேசு…..என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து நல்ல தகப்பனே, உம்மை விட்டு பிரிக்கும் எந்த காரியத்தையும் நாங்கள் விட்டுவிட தக்கதாக, உம்மை விட நாங்கள் எதையும் அதிகம் நேசியாதிருக்க எங்களுக்கு உணர்த்தும். மரம் எப்படி இலைகளை உதிர்த்து விடுகிறதோ, அப்படியே உம்மை விட்டு எங்களை பிரிக்கும் காரியங்களை எறிந்து விட கற்று தாரும். முடிவுபரியந்தம் உம்மில் நிலைத்திருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.