காத்து கொள்

காத்து கொள்



எல்லாக் காலலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். – (நீதிமொழிகள் 4:23).

கிராமம் ஒன்றில் பெரிய வேப்ப மரம் ஒன்று பல ஆண்டுகளாக செழித்து நின்றது. பலர் அதன் நிழலில் வந்து இளைப்பாறுவர். சிலர் இந்த மரத்தடியில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருப்பர். கயிற்று கட்டிலில் ஒன்றை போட்டு மரத்தின் நிழலில் தூங்குவோரும் உண்டு. பலத்த காற்று, பெருமழை கொடிய வெயில் இடி மின்னல் எதுவும் அம்மரத்தை அசைக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒரு நாள் பலத்த சத்தத்துடன் அம்மரம் முறிந்து விழுந்தது. நல்ல வேளை யாரும் அதனடியில் இல்லை. பலத்த சத்தம் கேட்டதும் ஊர் ஜனங்கள் ஓடி வந்து பார்த்தனர். பல ஆண்டுகள் நமக்கு நிழல் கொடுத்த அருமையான மரம் விழுந்து விட்டதே என கவலைப்பட்டனர். அருகில் சென்று பார்த்த போது மரத்தின் பட்டையில் வண்டுகள் துளையிட்டு உள்ளே சென்று மரத்தின் திசுக்களையெல்லாம் சாப்பிட்டு தீர்த்தன. நாளுக்கு நாள் உள்ளுக்குள் வலு இழந்த அந்தபெரிய வேப்ப மரம் முறிந்து விழுந்தது. அந்தோ பரிதாபம்!

அந்த வேப்ப மரத்தின் வெளித்தோற்றத்தை பார்த்தால் அது உடைந்து விழுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்தது. ஆனால் அதன் உட்புறத்தில் சிறு வண்டுகளும், பூச்சிகளும் அந்த பெரிய வேலையை செய்து முடித்தன. ஆம் இன்றும் நாம் வெளியரங்கமாக எந்த ஒரு பெரிய பாவமும் செய்யாமல் இருக்கலாம். கொலைக்காரர்களாகவோ, கொள்ளைக்காரர்களாகவோ, விபச்சாரக்காரர்களாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளான இருதயத்தில் தீய சிந்தனைகள், அசுத்த எண்ணங்கள், இரகசிய பாவங்கள், கெட்ட புத்தகங்கள், அசுத்த படங்கள் போன்ற வண்டுகள் நம் இருதயத்தை அரித்து கொண்டு இருந்தால் கடைசியில் பாவத்தில் விழுவது நிச்சயமே!

முதலில் கண்களின் வழியாக நுழையும் பாவம், இருதயத்திற்குள் பிரவேசித்து, நம்மை கறைபடுத்தி விடுகிறது. தேவன் நம்மை பாவம் செய்ய வைத்து சோதிக்கிறவரல்ல, ‘அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்’ என்று வேதம் நமக்கு சொல்கிறது. நாம் நம் இருதயத்தை காத்து கொள்ளாதிருந்தால், கண்களின் வழியாக பாவம் இருதயத்திற்குள் உட்பிரவேசித்து, நம்மை அதற்கேற்ப செயல்பட வைக்கும். ஒருவேளை நாம் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போன்று வெளியே பரிசுத்தவான்களை போல தோற்றமளிக்கலாம், ஆனால் உள்ளேயே புழுக்கள் தின்று அழுகி போன நிலையிலே காணப்படும் செத்த பிரேதத்திற்கு ஒப்பாக இருந்தால் என்ன பயன்?

பிரியமானவர்களே, நம் இருதயம், சிந்தனை, நினைவு, யோசனை, எண்ணம் இவற்றை கறைபடுத்தும் எந்த ஒரு காரியத்தையும் முதலில் உள்ளத்திற்குள் நுழைய முயற்சிக்கும் போதே அதற்கு தடைவிதிக்க வேண்டும். இல்லையேல் இந்த வண்டுகள் நம்முடைய ஆத்தும இரட்சிப்பை அழித்து விடும். ஆகவே ஒவ்வொரு நாளும் வேத வசனத்தின் மூலம் நம்மை காத்து கொள்வோம். ஒரேயடியாக விழுந்து போனபின், பாவம் செய்து செய்து இருதயம் மழுங்கி போக ஆரம்பிக்கும். முதலில் ‘இதை செய்யாதே பாவம்’ என்று உணர்த்தின இருதயம், ‘என்ன பெரிய பாவம், இதை செய்யாதவர்கள் யார்’ என்று காரணம் காட்டி, மழுங்கி போக ஆரம்பிக்கும். பின் யார் என்ன கூறினாலும், அது இருதயத்திற்குள் செல்லாது. இருதயம் கடினப்பட்டு போகும். பரிசுத்த ஆவியானவர் உணர்த்தி கொண்டு இருக்கும் வரை தேவ கிருபை அங்கு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஆவியானவர் யாரையும், வற்புறுத்த மாட்டார், தொடர்ந்து பாவத்தில் ஈடுபடும்போது, ஒரு நாள் அவர் விட்டு விலகி விடுவார். கிருபையும் நம்மை விட்டு எடுபட்டு போகும். அதன்பின் இருதயம் பாவத்திலே மூழ்கி கிடக்க ஆரம்பிக்கும். கர்த்தர் அருமையாக கொடுத்த ஆத்தும இரட்சிப்பை இழந்து, பரிதாபமான நிலையை அடைந்து விடுவோம். ஆகவே பாவத்தின் ஆரம்பத்திலேயே அதற்கு தடைவிதித்து, எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள் என்ற வசனத்தின்படி, நம்முடைய இருதயத்தையும் கண்களையும் காத்து கொண்டு, பரிசுத்தமாக வாழ தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, பாவத்தின் பலன் மரணம் என்பதை அறிந்தவர்களாக, பாவ எண்ணமும், சிந்தனையும் வரும்போதே அவற்றை நாங்கள் எறிந்து, பாவத்தை வெறுக்கத்தக்கதான இருதயத்தை கொடுப்பீராக. பாவம் செய்து, அதிலே ஊறிப்போய் இருதயம் மழுங்கி போகாதபடி, பாவத்தை குறித்த ஒரு எச்சரிப்பை நாங்கள் எங்களுக்குள்ளே எப்பொழுதும் வைத்திருக்க கிருபை செய்யும். வேத வசனத்தை எப்போதும் எங்கள் இருதயத்தில் வைத்து பாவத்தை மேற்கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.