மிஞ்சி எண்ண வேண்டாம்

மிஞ்சி எண்ண வேண்டாம்


‘உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்’. – (ரோமர் 12:3).
குத்து சண்டை போட்டியில் வீரனாக திகழ்ந்த முகமது அலியைக் குறித்து நாம் எல்லாரும் அறிவோம். அவர் 61 உலகளவிலான போட்டிகளில் 57 முறை வென்றும், தனக்கு எதிராக இருந்த 37 எதிர் போட்டியாளர்களை குப்புற வீழ்த்தினவர் என்றும் புகழ் பெற்றவர். அவர் தன்னை குறித்து சொல்லும்போது, “I am the greatest” என்று கூறிக் கொள்வார். தன்னை குறித்து மிகவும் பெருமை படைத்தவர். ஒரு முறை ஒரு விமானத்தில் பயணம் செய்த போது, சீட்பெலட் போடாமல் அமர்ந்திருந்தார். எல்லாரையும் பார்த்து சீட்பெல்ட் போடும்படி விமான பணிப்பெண் கூறிக் கொண்டே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரருகே வந்தவுடன், சீட்பெல்ட் போட சொன்னார். அதை கேட்ட அலி, ‘நான் சூப்பர் மேன், எனக்கு சீட்பெல்ட் தேவையில்லை’ என்று கூறினார். அதற்கு பணிப்பெண், ‘சூப்பர் மேனுக்கு விமானமும் தேவையில்லை’ என்று கூறினார். ஒன்றும் கூறாமல் அலி சீட்பெல்ட் போட்டு கொண்டார்.
தன்னை குறித்து மிதமிஞ்சிய பெருமை அவரது வாழ்வில் காணப்பட்டது. நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் நடக்கும்போது, நமக்கு எதிர் கொண்டு வருகிற பாவங்களில் பெருமையும் ஒன்றாகும். பெருமை என்பது மற்ற எல்லா பாவங்களுக்கும் வேராகும். பெருமை வரும்போது, மற்ற பாவங்களும் கூடவே சேர்ந்து வந்து விடுகிறது. நான் சம்திங் என்கிற சுயம் வரும்போது, அவர்களுக்கு மற்றவர்கள் எல்லாரும் ஒன்றுமில்லாதவர்களை போல ஆகிவிடுகிறார்கள்.
பெருமை என்ற பாவம் நம்மை ஆட்கொள்ளும்போது, இரண்டு அபாயங்கள் நம்மை நெருக்கி விடுகின்றன. முதலாவது நம்மை குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி நாம் நம்மை குறித்து மேலாக எண்ணி விடுகிறோம். மற்றவர்களை காட்டிலும் நான் அதிக பரிசுத்தவான் என்றோ, அல்லது மற்றவர்களுக்கு இருக்கிற தாலந்துகளை காட்டிலும் எனக்கு உள்ள தாலந்து விசேஷித்தது என்றோ எண்ண ஆரம்பித்து விடும்போது, கர்த்தர் ஏதோ அவர்களுக்கு  விசேஷித்த கிருபையை கொடுத்து இருக்கிறார் என்று மற்றவர்களை துச்சமாக எண்ண ஆரம்பித்து, மற்றவர்கள் தங்களுக்கு கீழேதான் என்று எண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். தாங்கள் இல்லாவிட்டால் சபை ஒன்றுமில்லாமற் போய் விடும் என்கிற எண்ணம் வர ஆரம்பிக்கிறது. கர்த்தருக்கு கல்லுகளை கொண்டும் பிள்ளைகளாக்க முடியும் என்ற காரியம் மறந்து போய் விடுகிறது. தாங்கள் தான் சபைக்கு விசேஷித்தவர்கள், தாங்கள் இல்லாவிட்டால் சபையே இல்லை என்று எண்ணத்தோடு செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுக்கு தெரியவில்லை, சபை இவர்கள் வருவதற்கு முன்னும் இருந்தது, பின்னும் இருக்க போகிறது என்று. ஒவ்வொரு விசுவாசியும் முக்கியமானவர்கள், ஆனால் ஒருவரும் விசேஷித்தவர்கள் இல்லை. சபையின் செய்ய வேண்டிய வேலைகள் உண்டு, ஆனால் அது யாருடைய தோளிலும் இல்லை. ஓரு சபை ஒருவர் இரண்டு பேரை மாத்திரம் நம்பி இருந்ததானால் அது பிரச்சனைக்குரிய சபையாக மாறிவிடும். அப்படி யாரையும் நம்பி சபை இல்லாமல், யார் வந்தாலும் யார் போனாலும், சபையின் ஊழியங்கள் குறைவில்லாமல் நடக்க வேண்டும்.
தாங்களில்லாமல் சபை ஒன்றுமே இல்லை என்று நினைக்கிற கூட்டத்தின் மத்தியில் இருக்கும் அடுத்த அபாயம், ‘எனக்கு கர்த்தர் எந்த தாலந்துமே கொடுக்கவில்லை, என்னால் ஒன்றும் செய்ய முடியாது, எனக்கு எந்த ஞானமும் இல்லை’ என்று எண்ணுவதாகும். கர்த்தர் ஒருவரை இரட்சிக்கும்போது ஒரு நோக்கத்தோடு அவரை சபையில் வைக்கிறார். ஆனால் எனக்கு ஒரு தாலந்தும் இல்லை என்று சொல்வது, நம்மை தெரிந்த கொண்ட தேவனை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாகும். கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் கர்த்தருக்கென்று எதையாவது செய்யத்தான் வேண்டும். அப்படி செய்யாவிட்டால், நம்மை தெரிந்த கொண்ட தேவனுக்கு மகிமையை கொண்டு வராத பாத்திரங்களாக மாறி விடுவோம்.
ஆகவே ஒருவரும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும் என்ற வசனத்தின்படி பெருமையை நம் வாழ்வில் வரவிடாதபடி காத்து நம்மை கொண்டு, கர்த்தருக்கென்று மகிமையை கொண்டு வருகிற பாத்திரங்களாக மாற தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
தன்னலம் நோக்காமல்
பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை
என்றுமே இருக்கட்டுமே
..
பெயர் புகழ் எல்லாமே
இயேசுவின் நாமத்திறகே
கிறிஸ்து வளரட்டுமே
நமது மறையட்டுமே
..
உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து நல்ல தகப்பனே, பெருமை எந்த விதத்திலும் எங்களுக்குள் வராதபடி எங்கள் இருதயங்களை எல்லா காவலோடும் காத்து கொள்ள கிருபை தருவீராக. எங்களை குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாதபடி தாழ்மையை நாங்கள் தரித்து கொள்ள கிருபை செய்யும். தேவரீர் கொடுத்த தாலந்துகளை உம்முடைய நாம மகிமைக்கென்று உபயோகப்படுத்த கிருபை செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.