தேவனுடைய வீட்டில் துவங்கும் நியாயத்தீர்ப்பு

தேவனுடைய வீட்டில் துவங்கும் நியாயத்தீர்ப்பு

‘நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?’ – (1 பேதுரு 4:17-18)
நியாயத்தீர்ப்பை குறித்து மிக முக்கியமான ஒரு காரியத்தினை தெளிவாக நமக்காக பேதுருவை கொண்டு தேவன் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார். இன்றைய நாட்களின் செய்தித்தாள்களை நாம் வாசித்துப்பார்த்தால் உலகத்தில் நடைபெற்று வரும் காரியங்கள் இது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வந்திறங்கும் காலம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளமுடியும். இதனை நாம் மறுக்க முடியாது. தேவனுடைய நியாயத்தீர்ப்பு எங்கு தொடங்கும்? நியாயத்தீர்ப்பு எப்படி நடக்கும்? என்று பலவிதமான கேள்விகள் நம் மனதில் எழும்பினாலும் தேவனது நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீடாகிய சபையிலேயே துவங்கும் என்று வேதம் கூறுவதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ‘கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை’ (ரோமர் 8:1) என்று எழுதப்பட்டிருப்பதால் நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் தொடங்குவது எப்படி என்ற கேள்வி நமக்குள் உண்டாகலாம். ஏன் தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பு உண்டாக வேண்டும்? அது எப்படி நடக்கும்? என்று வேதத்தின் அடிப்படையில் நாம் சில காரியங்களை புரிந்து கொள்வது அவசியம்.
அமெரிக்காவிலே கிறிஸ்தவ மனிதன் ஒருவன் பெரிய செல்வந்தனாகி அவனது தொழில் பெருகிய போது, அதே மனிதன் ‘நான் பணக்காரனானதற்கு காரணம் சாத்தானே, எனவே எனது தொழிலில் வரும் இலாபத்தின் பெரும்பகுதியை சாத்தானுக்கும் சாத்தானை வழிபடுகின்ற ஆலயத்திற்கும் கொடுக்கிறேன்’ என்று பகிரங்கமாக தொலைக்காட்சியில் அறிக்கையிட்டான். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சாத்தானை வழிபடுகின்றவர்களின் கூட்டம் பெருகிவருகின்றது. சமீபத்தில் ஒரு வாலிபன் அவனது சரீரத்தில் நெருப்பு பற்றி எரிவதை போன்று உடலெங்கும் பச்சை குத்தி கொண்டும், அவனது கரத்தில் சாத்தானின் கொடூர முகத்தை பச்சை குத்தியும், சிலுவையை தலைகீழாக வரைந்து, அதன் கீழ் நெருப்பு பற்றி எரிவதை போன்றும் உடலெங்கும் பச்சை குத்தி கொண்டு வந்திருந்தான். அதை பார்க்கும்போதே அருவருப்பாய் இருந்தது. அவன் பெயர் பீட்டர்! என்ன ஒரு விசுவாச துரோகம்! தற்போது சாத்தானை வழிபடுகின்றவர்கள் ஒன்றுக்கும் அஞ்சுவதில்லை. தைரியமாக வெளியே சுற்றி உலாவி வருகின்றனர். இது போதாமல், போதகர்களும் சபையின் மூப்பர்களுமே சாத்தானின் போதனைகளால் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ (லூக்கா 18:8) என்றும், எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது – (2 தெசலோனிக்கேயர் 2:3) என்றும் வேதம் கூறுகிறது.
பட்டம் பெற்றவர்களும் வேதத்தை படித்தவர்களும் மேடையில் நின்று கொண்டு விசுவாசத்திற்கு விரோதமான பிரசங்கங்களை செய்வது இக்காலங்களில் அதிகரித்து வருகின்றது. விசுவாசிகள் என்று அழைக்கப்படுகிற விசுவாசத்தை அறிக்கையிடுகிறவர்கள் மத்தியிலேயே விசுவாச துரோகம் நடைபெறுகின்றது. ஒரு ஊழியர் ஒரு சபையில் பேசப்போகும்போது, அதன் போதகர், ‘பாவத்தை குறித்து அதிகமாக கண்டித்து பேசாதீர்கள், அதிகமாக கண்டித்தால், ஜனங்கள் ஆண்டவரை விட்டு ஓடிப்போய் விடுவார்கள்’ என்று கூறினாராம். யோவான் ஸ்நானகன் பாவத்தை குறித்து கண்டித்து உணர்த்தினான். அவன் அற்புதங்க்ள ஏதும் செய்யாதிருந்தும், அவன் பேசியதை கேட்க வனாந்திரத்திற்கு அநேக ஜனங்கள் அவனை தேடி வந்தார்கள். பாவத்தை குறித்து அதிகம் கண்டித்து பேசினால், காணிக்கை கிடைக்காது என்று பயப்படுகின்ற போகர்களும் இந்நாட்களில் உண்டு. பாவத்திற்கு விரோமாய் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தத்தகக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே (எபிரேயர் 12:4) பாவத்திற்கு விரோதமாய் இரத்தம் சிந்தும் அளவிற்கு நாம் எதிர்த்து நிற்க வேண்டும் என்று தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார்.
விசுவாச துரோகம் வெளியில் அல்ல, இக்காலத்தில் சபைக்குள்ளேயே ஏற்படுகின்றது. சத்துரு தன்னுடைய அவலட்சணத்தை ஜனங்களுக்கும் விதைப்பதற்கு அநேக பிரசங்கியார்களையும், போதகர்களையும் உபயோகப்படுத்த தொடங்கி வருகின்றான்.
எனவே தேவன் தமது நியாயத்தீர்ப்பை தம்முடைய வீட்டிலே துவங்குகின்றார். ‘தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது;  அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்’ (மத்தேயு 3: 12) என்று நியாயத்தீர்ப்பின்போது இயேசு செய்யப்போகின்ற காரியத்தை யோவான் தெளிவாக வெளிக்காட்டுகின்றான். தேவன் தமது களத்தை விளக்குவார் என்ற சொல்கின்றான். எது அவருடைய களம்? கர்த்தருடைய ஆலயம், சபை, வீடு, அதுவே தேவனது களம். தேவன் தமது களத்தை நன்றாக விளக்கி சுத்தம் செய்வார். பதர் தோற்றத்தில் கோதுமை மணியைப் போலவே காட்சியளிக்கும்.
வெளியில் பார்க்கும்போது, அதன் உருவத்தில் வித்தியாசம் எதுவும் தெரிவதில்லை. ஆனால் பதரை உடைத்து பார்க்கும்போது, அதிலே தானியம் இருக்காது. தேவனது களத்தில் நாம் கோதுமையாக இருக்கின்றோமா அல்லது பதராக காட்சியளிக்கின்றோமா? நாம் ஒளியில் இருக்கின்றவர்களை போல காட்சியளிக்கலாம், கர்த்தருக்காக பாடல்களை பாடலாம், கிறிஸ்துவின் கரியங்களை பேசலாம். ஆனால் நம்மை சோதிக்கும் காலம் வருகின்றது. நாம் பதராயிருந்தால் ஜீவனை பெற்று கொள்ளும்படியாக அவரிடத்தில் ஓடிவர வேண்டும். ‘குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்’ (1 யோவான் 5:12) தூற்றுக்கூடை ஏந்தியவராக தமது வீட்டிலே தேவன் நியாயத்தீர்ப்பை தொடங்குவார். அவருடைய நியாயத்தீர்ப்பு நம்மேல் வராதபடிக்கு இப்போதே விழித்திருந்து ஜெபித்து, ஆண்டவருக்காக செயல்பட கர்த்தருடைய வீட்டிலே உண்மையாயிருக்க நம்மை அர்ப்பணிப்போம். ஆமென் அல்லேலூயா!
கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே
கறையில்லாமலே குற்றமில்லாமலே
கர்த்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்
..
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்
ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் (2)
இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்வோம்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து நல்ல தகப்பனே, தேவனுடைய நியாயத்தீர்ப்பு கர்த்தருடைய வீட்டில் துவங்கும் என்றால் நாங்கள் எத்தனை ஜாக்கிரதையுள்ளவர்களாக ஜீவிக்க வேண்டும்! நாங்கள் வெளியிலே கோதுமையை போல காணப்பட்டு, உள்ளேயோ பதரை போல வாழ்ந்து கொண்டிருந்தோமானால், நியாயத்தீர்ப்பிலே எரிக்கப்பட்டு போவோமே, கர்த்தாவே நாங்கள் உண்மையிலே கோதுமை மணிப்போல வாழத்தக்கதாக எங்ளை உம்முடைய சமுகத்தில் அர்ப்பணிக்கிறோம். கர்த்தருடைய வருகை வெகு சீக்கிரம் இருக்கப்போகிற படியால் நாங்கள் ஆயத்தமாகி காத்திருக்க எங்களுக்கு உணர்த்தும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.