மனிதனின் – தவறு! தெய்வத்தின் – பரிகாரம்! உலகத்தின் முடிவு?
எல்லாம் உருவாக்கியவர் சிருஷ்டிகர்; எல்லாம் கடந்து இருக்கிறவர் கடவுள்; எங்கும் வியாபித்து இருப்பவர் இறைவன்; எல்லாவற்றையும் ஆளுகை செய்பவர் கர்த்தர். அவர் நீதி செய்பவர்; அன்பே உருவானவர். இவ்வெல்லா பண்புகளும் உடையவார் ஒருவரே. அவரே உண்மைத் தெய்வம்! அவர் தேவ தூதர்களைப் படைத்தார். அவர்கள் சுயமாய் செயல்பட அவர்களுக்கு சுய சித்தம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஒரு கால கட்டத்தில் தேவ தூதர்களில் பிரதானமாகக் கருதப்பட்ட லூசிபர் என்பவன் தன்னை தெய்வத்தின் ஸ்தானத்தில் அமர்த்திக் கொள்ள முயற்சித்தான். ஆகவே அவனும் அவனைப் பின்பற்றியவர்களும் விழுந்துபோன தூதர்களானார்கள். இக்கூட்டத்தில் சேராதவர்கள் தூதர்களாகவே இருந்து தெய்வத்தைச் சேவிக்கிறார்கள். இத்தெய்வம் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இவர்கள் தெய்வத்திடம் தாமாக அன்புகூர்ந்து அவரைச் சேவிக்க சுயசித்தம் பெற்றிருந்தார்கள். அவர்கள் தெய்வத்திற்கு கீழ்படிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களுக்கு தெய்வம் ஒரு கட்டளையும் கொடுத்தார்.
விழுந்து போன தூதர்களை பிசாசுகள் என்றும் லூசிபரை சாத்தான் என்றும் நாம் அழைக்கிறோம். புதிதாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் தெய்வத்தோடு பிரியமாயிருப்பதைக் கெடுக்கும் நோக்கத்தோடு சாத்தான் மனிதர்களை ஏமாற்றி தெய்வத்திற்குக் கீழ்படியாதபடி செய்துவிட்டான். முதல் மனிதரான ஆதாம் ஏவாள் என்ற இருவரும் தெய்வத்திற்கு கீழ்படியாதபடியால் மனுக்குலமும் உலகமும் கடவுளின் சாபத்திற்குள்ளாயிற்று. பாவ மனிதர்கள் மூலம் வந்த மனிதர் யாவரும் இயல்பாகவே பாவிகள்தான். சாபத்திற்குள்ளான உலகத்தில் தீமை நுழைந்து விட்டது. உலகத்தில் இப்பொழுது நாம் பார்க்கிற எல்லா அநியாயம் அக்கிரமத்திற்கும் மூலகாரணம் மனிதனின் கீழ்படியாமையே.
மனிதன் தெய்வத்தோடு ஐக்கியமாக இருப்பதற்காகவே படைக்கப்பட்டான். மனிதன் தெய்வத்திற்கு அடங்கி இருக்காமல் தன் சுய விருப்பத்தையே நிறைவேற்ற முயற்சித்ததால் தனக்குத்தானே கேட்டை வருவித்துக் கொண்டான். அவனது தன்னிச்சைப் போக்கினால் அவன் மேல் விழுந்த சாபத்தைக் குறித்து வேதம் என்ன சொல்கிறது என்றுப் பாருங்கள்.
கர்த்தர் பாவம் செய்த முதல் பெண்ணை நோக்கி சொன்னது:
“நீ கர்ப்பவதியாயிருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய், உன் ஆசை உன் கணவனைப் பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டுக்கோல்வான்” (ஆதி 3:16).
கர்த்தர் பாவம் செய்த முதல் மனிதனைப் பார்த்து சொன்னது:
பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும், நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் சபிக்கப்பட்டிருப்பாய். வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் (ஆதி 3:17-19).
ஆகவே உலகத்திற்குள் தீமை நுழைந்ததின் காரணம் தெய்வம் அல்ல, மனிதனே அதற்குக் காரணம். எந்த ஒரு இயந்திரத்தையும் வாங்கும் பொழுது அதை உபயோகிக்கும் விதத்தை விளக்கும் ஒரு துணை நூல்(Manual) கொடுக்கப்படும். அதில் உள்ள ஆல்லோசனைகளை நாம் முறைப்படி கற்று, அதன் படி அந்த இயந்திரத்தை உபயோகிக்காவிடில் இயந்திரம் பழுதடைந்துவிடும். அப்படி இயந்திரம் பழுதடைந்தால் அதற்கு காரணம் அதை உருவாக்கியவன் அல்ல, அதை தவறாக உபயோகித்தவனேயாவான்.
இதேப்போல் மனிதனை உருவாக்கிய தெய்வம் மனிதனின் சுகவாழ்வுக்கான சிற்ந்த ஆலோசனைகளை வேதப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன் பிரகாரம் செயல்படாத மனிதனே அவனின் எல்லா கேட்டிற்கும் காரண னானவன். இன்று நாம் உலகில் அனுபவிக்கிற துன்பங்கள், பாடுகள், வேதனைகள் எல்லாவற்றிற்கும் மூல காரணம் கர்த்தர் கொடுத்த ஆலோசனைகளை மனிதன் கைக்கோள்ளாததுதான்.
மனிதன் பாவத்தில் விழுவான் என்று அறிந்திருந்த அன்பே உருவான தெய்வம் அதற்குப் பரிகாரத்தையும் முன்னதாகவே தீர்மானித்திருந்தார். மனிதனின் கீழ்படியாமைக்கு தெய்வம் அளித்த தண்டனை.. மரணம்! (ஆதி 2:17) மரணம் என்பது ஆவி சரீரத்தை விட்டு பிரிவது மட்டும் அல்ல, மனிதன் நித்தியமாக தெய்வ பிரசன்னத்தை விட்டு பிரிந்து, நரக ஆக்கினை அடைவதுமாகும்.
தெய்வம் தயை மிகுந்தவராதலால் மனிதனின் கீழ்ப்படியாமைக்கு தான் தீர்ப்பு கூறிய மரண தண்டனையிலிருந்து விடுவித்து மன்னித்து விடலாம். ஆனால் அவர் நீதிபரர். ஆகவே அவர் சொன்ன தீர்ப்பு நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டும். மனிதனுக்கு மன்னிப்பு அருள வேண்டுமென்றால் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்பட வேண்டும் என்பது தெய்வ நீதி! குற்றமில்லாத இரத்தம் சிந்தப்பட்டால் தெய்வத்தின் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டதாகிவிடுகிறது.
இப்பொழுது கடவுள் நீதி தவறாமல் மனிதனுக்கு மன்னிப்பு அருளமுடியும், இதற்காகவே தெய்வக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்தார். இவ்வுலகில் 33 ½ ஆண்டுகள் மாசு அற்றவராக வாழ்ந்தார் முடிவில் சிலுவையில் தனது சொந்த இரத்தத்தைச் சிந்தி செய்வத்தின் நீதியை நிலைநாட்டினார். பாவம் செய்த ஒவ்வொருமனிதனும், தனது பாவத்தை மன்னிக்கவே இயேசு கிறிஸ்து சிலுவையில் தமது இரத்தத்தைச் சிந்தினார் என்றுச் சொல்லி அவரை ஏற்றுக்கொள்ளும் போது அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு தெய்வத்தோடு ஒப்புரவாகிறான். இதை குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.
மனிதர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க இயேசு கிறிஸ்து தம்மையே பலியாகக் கொடுத்தார் (1 தீமோ 2:6).
சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலி இயேசு கிறிஸ்துவே! (1யோவா 2:2).
இயேசு கிறிஸ்துவாலேயன்றி வேறு எவராலும் மீட்பு (மரணத்தண்டனையிலிருந்தும் விடுதலை) இல்லை! நாம் மீட்புப் பெறுமாறு மனிதரிடையே இவரது பெயரேயன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை(அப் 4:12).
தெய்வம் மிகுந்த இரக்கமுடையவர். அவர் நம் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். நாம் இயேசு கிறிஸ்துவே நம் பாவங்களுக்குப் பரிகாரி என்று எற்றுக்கொண்டதின் மூலம் அவரின் அருளால் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறோம். இந்த விடுதலை(மீட்பு) நம் நற்செயல்களால் அல்ல. இது தெய்வத்தின் ஈவு! (எபே 2:4-8).
உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் தெய்வம் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார் (2 கொரி 5:19).
மனிதன் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் தெய்வத்தின் அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்(ரோ 3:24).
உலகில் தீமை வந்ததின் காரணத்தையும் அதற்குத் தெய்வம் எற்படுத்தியிக்கிற பரிகாரத்தையும் பார்த்தோம். ஆனால் உலகில் தீமை இன்றும் தலைவிரித்துத்தாடுகிறதே! இதற்கு முடிவே கிடையாது? இதற்கு காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் பின் வரும் கதை நமக்கு விளக்கம் தரும்.
ஒரு நாட்டின் அதிபதியும் அவனது சவரத் தொழிலாளியும் நகரத்தின் பிரதான வீதிகளில் சென்று பார்வையிட்டனர். எங்குப்பார்த்தாலும் கொள்ளைகளும், கலகங்களும், வன்முறைகளும் நடப்பதைப் பார்த்த சவரத் தொழிலாளி, “கடவுளே இல்லை, அப்படியே இருந்தாலும் அவருக்கு தீமையைக் கட்டுபடுத்த வல்லமை இல்லை என்று நான் சொல்லுவது சரியே” என்று அந்த அதிபதியிடம் வாதாடினான். சற்று தூரம் சென்றதும் தலைமுடியை வெட்டாமல் தாடியை சவரமும் செய்யாமல் அலங்கீலமாக ஒரு மனிதன் காட்சியளித்தான். அப்பொழுது அந்த அதிபதி, “நீ ஒரு சவரத் தொழிலாலியா? இப்படி ஒரு மனிதன் வீதியில் அலைகிறானே, அவனுக்கு சவரம் செய்ய உனக்கு சக்தி இல்லையே” என்று சவரத் தொழிலாளியைப் பார்த்து குறை கூறினார்.
அதற்கு சவரத் தொழிலாளி அதிபதியைப் பார்த்து “ஐயா இவன் இப்படி அலைகிறதற்கு நானா காரணம்? இவன் சவரம் செய்யும்படியாகவும் தலைமுடியைச் சிங்காரம் செய்யும்படியாகவும் என்றைக்கு என்னிடம் வந்தான்? அவன்தானே வரவில்லை” என்று கூறினான்.
இந்தச் சவரத் தொழிலாளிபோல்தான் நாமும் தெய்வத்தைக் குறைகூறிக்கொண்டு இருக்கிறோம், மனிதன் தானாகவே பாவ பழக்கங்களுக்கு அடிமையாகி, உலக சிற்றின்பங்களை நாடி ஓடுகிறான். அதனால் நிம்மதியை இழந்து மேலும் மேலும் பாவச்செயல்களில் சொல்லுகிறது பாருங்கள்..
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் இயேசுவிடம் வாருங்கள் அவர் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார் (மத் 11:28).
…உங்கள் பாவங்கள் கருஞ்சிவப்பாய் இருக்கின்றன, எனினும் உறைந்த பனிபோல் அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன, எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும். மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால் நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள் (ஏசா 1:18,19).
நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பை பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயவால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கல், எனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலைவிலுள்ள யாவருக்கும் அஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது (அப் 2:38,39).
நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம், கடவுளே எங்கல் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார், ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம் (2 கொரி 5:20).
மனிதன் தெய்வத்தின் கட்டளையை மீறியதால் நித்திய மரண தண்டனைக்கு ஆளாயிருக்கிறான். ஆனால் தெய்வம் தனது மிகுந்த கிருபையால் அவன் அந்த மரண தண்டனையிலிருந்து விடுபட ஒரு பரிகாரத்தை ஆயத்தம் பண்ணி, அதை ஏற்றுக்கொள்ளும்படி நமக்க்கு அழைப்பு கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அந்த பரிகாரத்தை எற்றுக் கொள்ளாதது நமது குறையே. மனிதன் தன் சுயவிருப்பத்தின்படியே உலகத்தின் கவர்ச்சிகளில் சிக்குண்டு தெய்வம் ஏற்படுத்திய பரிகாரத்தை அலஸ்தியம் செய்து தனக்கு நித்திய நரக ஆக்கினையை வருவித்துக்கொள்கிறான்.
ஆனால் தெய்வத்தின் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டவர்களும் இல்வுலகில் துன்பத்தை அனுபவித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு கிடையாதா? என்று நாம் எண்ணலாம், இதற்கு முடிவுகட்ட தெய்வம் ஒரு நாளைக் குறித்திருக்கிறார், அந்த நாள் இன்னும் தாமதமாகிக் கொண்டே இருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு, தெய்வம் தாம் ஏறொஅடுத்திய பரிகாரத்தை இன்னும் அநேகர் எற்றுக்கொண்டு நித்திய அழிவினின்று தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு நமக்கு இன்னும் அவகாசம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் (2 பேது 3:9).
யாவரும் எதிர்பாராத ஒருநாள் திடிரென்று இயேசு கிறிஸ்து மத்திய ஆகாயத்தில் வந்து தனது சொந்த பிள்ளைகளை அழைத்துக்கொண்டு விண்ணுலகிற்குச் சென்றுவிடுவார்(1 தெச 4:13-17). இவ்வுலகில் விடுபட்டவர்கள் மேலும் 7 ஆண்டுகள் மிகுந்த துன்பத்தை அனுபவிப்பார்கள். இக்காலத்தில் சாத்தானின் பிரதிநிதியாகிய அந்திகிறிஸ்துவின் ஆட்சியில் அநேகர் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு முடிவில் இயெசு கிறிஸ்து தனது தூதர்களோடும் ஏற்றுக் கொள்ளாதவர்களை அழித்து, சாத்தானை ஆயிரம் ஆண்டுகள் அவன் பாதாளத்தில் இருக்கும்படி அடைத்துப் போடுவார் (வெளி 19:11-20:2).
தெய்வத்தின் பரிகாரத்தை ஏற்று வாழ்ந்தவர்கள் அனைவரும் இந்த ஆயிரம் ஆண்டுகளும் எவ்வித தீமையுமின்றி பூமியில் வாழ்வார்கள். இயேசு கிறிஸ்துவே இராஜவாக இருந்து அவர்களை ஆட்சி செய்வார்(வெளி 20:4-6) ஆயிரம் வருடங்களின் முடிவில் இன்னும் சாத்தானை பின்பற்றும் மனதுடையவர்கள் இருக்கிறார்களா என்று சோதித்து அறிய சாத்தானுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறார். தாத்தானை கட்டவிழ்த்து விட்டதும் அவன் முழுமூச்சாக தனக்கு ஒரு படையைத் திரட்டுவான்.
அப்படி அவனைப் பின்பற்றிய யாவரும் வானத்திலிருந்து வரும் அக்கினியால் அழிக்கப்படுவார்கள். சாத்தான் அக்கினி கடலில் தள்ளப்படுவான். இதுவே நரகம்.
ஆதி முதல் இருவரை மரித்த அனைத்து துன்மார்க்கர்களும் உயிர்தெழுந்து வெள்ளை சிங்காசனத்தின் முன் நிற்பார்கள். இயேசு கிறிஸ்து நியாயாதிபதியாக வெள்ளை சிங்காசனத்தில் வீற்றிருப்பார். மரித்தவர்களின் குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் திறக்கப்படும் அப்பொழுது அந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பதின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்பி அடைவார்கள்.
தெய்வம் ஏற்படுத்திய பரிகாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் சாத்தானை பின்பற்றின அனைவரும் நித்திய நரக ஆக்கினையன இந்த இரண்டாம் மரணத்தை அடைவார்கள் (வெளி 20:7-15).
தீமை முற்றிலுமாக நீக்கபட்டபின் தெய்வம் ஏற்படுத்திய பரிகாரத்தை ஏற்றுக்கொண்ட அனைவரும் பரம் எருசலேமில் தெய்வத்தோடு நித்திய நித்தியமாக வாழ்வார்கள். அவர்களின் மகிஜ்ச்சிக்கு அளவே இருக்காது (வெளி 21:10-22:5).
பிரியமானவர்களே, தெய்வம் நீதியுள்ளவர், அவர் உலகத்தில் வாழ்ந்த ,அமிதர்கலை நீதியின்படியே நியாயம் தீர்த்து துன்மார்க்கருக்கு அவர்கள் கிரியைகளுக்கேற்ற தண்டனையை கொடுக்கிறார். தெய்வம் எதிர்பார்க்கும் பூரண பரிசுத்தம் நம்மில் காணப்படாவிட்டாலும் அதற்காக அவர் ஏற்படுத்திய பரிகாரத்தை நாம் ஏற்று ’இயேசுதான் ஒரே வழி’ என்று அவரையே நாம் சார்ந்து வாழ்ந்தால் அவரின் இரக்கம் பெற்று என்றென்றும் அவரோடு மகிழ்சியாக வாழும் பாக்கியம் பெறுவோம்.
ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்.