பலனளிக்கும் தேவன்

பலனளிக்கும் தேவன்

‘நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம்  உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’. – (மாற்கு 9:41).
ரேபோல்டஸ் (Ray Boltz) என்பவர் எழுதிய Thank You என்கிற பாடலிலிருந்து இந்த நாளின் தியானம் எழுதப்பட்டது.
‘ஒரு நாள் பரலோகத்திற்கு சென்றது போல கனவு ஒன்றை கண்டேன். அந்த கனவில் இதை வாசிக்கிற நீங்களும் என்னோடு பரலோகத்தின் பொன்னான வீதிகளில் உலாவ வந்தீர்கள். அங்கிருந்த பளிங்கு கடலின் ஓரத்தில் கடலின் அழகை ரசித்த வண்ணம் நீங்களும் நானும் பேசி கொண்டிருந்தோம். சூரியனோ, சந்திரனோ இல்லாவிட்டாலும் சொல்லி முடியாத ஒரு மகிமையான ஒளி பரலோகத்தை நிறைத்திருந்தது. தேவனுடைய சொல்லி முடியாத கிருபைகளை எண்ணி நம் இருவருடைய இருதயமும் பூரிப்பினால் நிறைந்திருந்தது.
அப்போது உங்களுடைய பெயரை சொல்லி யாரோ அழைக்க, நீங்கள் திரும்பி பார்த்தபோது, ஒரு மனிதன் உங்களை நோக்கி புன்முறுவலோடு நடந்து வந்தார். இது யார் என்று நீங்கள் திகைத்து ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருக்கும்போது அம்மனிதன் அருகே வந்து, ‘சகோதரனே, என்னை ஒரு வேளை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், நான் சிறுவயதாயிருக்கும்போது நீங்கள் செல்லும் ஆலயத்திற்கு வருவேன்.
அங்கே நீங்கள் சிறுபிள்ளைகளுக்காக சன்டே கிளாஸ் எடுப்பீர்கள். சபையிலுள்ள மற்றவர்கள் இதை பெரிதாக நினைக்காவிட்டாலும், உத்தமமாய் அந்த ஊழியத்தை செய்தீர்கள். ஓவ்வொரு வாரமும் நீங்கள் எனக்கு போதித்த சத்தியங்களும், கற்று கொடுத்த ஜெபங்களும் என் உள்ளத்தில் எழுதப்பட்டு கொண்டே இருந்தது. ஒரு நாள் அப்படிப்பட்ட ஜெபவேளையில் என் இருதயத்தை இயேசுவுக்கு கொடுத்தேன்.
இரட்சிக்கப்பட்டேன். அன்று தொடங்கிய என் கிறிஸ்தவ வாழ்க்கை ஆசீர்வதமாக நிறைவேறி இன்று நான் மகிமையான இந்த பரவோக இன்பத்தில் இருக்கிறேன்.
இரட்சிப்பின் வழியை எனக்கு காண்பித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! நன்றி! அந்த மனிதன் பேசி சென்ற சில நிமிடங்களிலேயே மற்றொரு நபர் அங்கே வந்தார். அவர் நீங்கள் பார்த்திராத வேறொரு நாட்டு நபர் போல் இருந்தார். அவர் வந்து உஙகளிடத்தில் ‘சகோதரனே என்னை உங்களுக்கு நிச்சயமாக தெரியாது. ஆனால நான் இங்கே இருப்பதற்கு நீங்களும் ஒருகாரணம். உங்கள் சபையிலிருந்து மிஷனெரி ஒருவர் எங்கள் மத்தியிலே தனனை அர்ப்பணித்து வந்தார். எங்கள் இன மக்களுக்கு இரடசிப்பு எவ்வளவு அவசியம் என்பதை குறித்து உங்கள் மத்தியில் பாரத்தோடு பகிர்ந்து கொண்டபோது அவரது வார்த்தைக்கு நீங்கள் செவி கொடுத்தீர்கள். உங்களிடத்தில் கொடுப்பதற்கு அதிக பணம் இல்லாவிட்டாலும் உங்கள் கையிலிருந்தததை முழுமனதோடு கொடுத்தீர்கள்.
அதினிமித்தம் அந்த மிஷனெரி எங்கள் மத்தியில் பணியாற்றி எங்கள் இன மக்களையே இரடசிப்பிற்குள் வழி நடத்தினார். நண்பரே நீங்கள் கிறிஸ்துவுக்காக கொடுத்த காணிக்கைக்கு நன்றி! நன்றி!
சற்றுநேரத்தில் இன்னொருவர் வந்தார். உங்களுக்கு அவரை கொஞ்சம் அடையாளம் தெரிந்தது. ஒருமுறை அவருக்கு கைப்பிரதி கொடுத்து சுவிசேஷம் அறிவித்தீர்கள்.
உங்களுக்கு அதிகமான திறமையில்லை என்று சொல்ல, இதுதான் என்னால் முடிந்ததென்று அந்த ஊழியத்தை ஜெபத்தோடு செய்தீர்கள். அதினிமித்தம் நான் இங்கு வந்தேன் என்று கூறி உங்களுக்கு நன்றி கூறினார். பின் ஒருவர் வந்தார், அவர் உங்களிடம் ‘நீங்கள் திறப்பின் வாசலில் எங்கள் தேசத்திற்காக ஜெபித்தீர்கள். எங்கள் தேசம் இரும்பு திரையாக சுவிசேஷத்திற்க்கு எதிர்த்து நின்ற தேசமாகும். நீங்கள் சபையாக ஜெபித்த ஜெபத்தை கேட்டு, சுவிசேஷத்தின் வாசல்களை தேவன் திறந்தார். அதினால் இரட்சிக்கப்பட்டு, இப்போது நான் பரலோகத்தில் இருக்கிறேன். உங்கள் ஜெபத்திற்காக நன்றி’ என்று கூறினார்.  இந்த You Tube லிங் கிளிக் பண்ணி இந்த பாடலை பார்க்கவும்http://www.youtube.com/watch?v=UFrdJ2V3r7Y
இப்படியாக ஒருவர் பின் ஒருவராக உங்கள் நிமித்தம் தொடப்பட்ட மக்கள் வந்து
உங்களுக்கு நன்றி கூறினார்கள். நீங்கள் செய்த சிறிய சிறிய காரியங்களும் சிறிய
தியாகங்களும் பூமியில் கண்டு கொள்ளப்படாமல் இருந்தாலும் பரலோகில் அது
வெளியரங்கமாக விளங்கலாயிற்று. இன்னும் அநேகர் உங்களிடம் நன்றி கூற வந்து
கொண்டேயிருந்தனா.
கடைசியாக இயேசுகிறிஸ்து உங்களருகில் வந்து ‘மகனே, உன்னை சுற்றிப்பார், உன்
பலன் மிகுதி’ என்றார். பரலோகத்தில் கண்ணீருக்கு இடமே இல்லை என்றாலும், உங்கள்
கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிந்து வந்ததை கண்டேன்’.
பிரியமானவர்களே, நாம் கர்த்தருக்காக செய்யும் ஒரு சிறிய காரியமும்
வீணாகப்போகப்போவதில்லை. ‘நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம்  உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று இயேசுகிறிஸ்து கூறினார். அவருடைய நாமத்தினிமித்தம் நாம் கொடுக்கிற ஒரு கலசம் தண்ணீருக்கும் பலன் இருக்கும்போது, நாம் அவருடைய நாமத்தினிமித்தம் படுகிற பாடுகள், தியாகமாய் செய்கிற காரியங்கள் எதுவும் நிச்சயமாக வீணாகப் போகப் போவதேயில்லை. கர்த்தர் நிச்சயமாக ஏற்ற நேரத்தில் அதன் பலனை தருவார். ஒருவேளை உலகத்தினர் அதை கண்டு கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பரலோகத்தில் அதற்குரிய கனம் உண்டு, அதற்குரிய பலன் உண்டு, அதற்குரிய பாராட்டுதல் உண்டு. மனம் தளர்ந்து போகாமல், கர்த்தருக்காக உண்மையாய் உழைப்போம், அறுவடை செய்வோம், பலனை எதிர்பாராமல் உள்ளத்தில் அன்போடு கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்வோம். கர்த்தர் நாமம் மகிமைப்படட்டும்! ஆமென் அல்லேலூயா!
உமக்காகப் பாடுபட்டோன் நஷ்டப்பட மாட்டானே
உமக்கென்று ஜீவன் விட்டோன் சாகா ஜீவன் பெற்றானே
உம்மை வல்ல மீட்பர் என்று சொல்லி, நித்தம் பற்றுவேன்
கஸ்தி பட்டும் சாவை வென்று, வாடா கிரீடம் பெறுவேன்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கர்த்தருக்காக நாங்கள் செய்யும் எந்த காரியமும், எந்த தியாகமும், எந்த ஊழியமும், எந்த பாடுகளும் வீணாய் போகாது என்கிற நம்பிக்கைக்காக உம்மை துதிக்கிறோம். நாங்கள் எந்த பலனையும் எதிர்பாராமல், அப்பா எங்களுக்கு பாராட்டின கிருபைகளை நினைத்து, தம் சொந்த குமாரனையே எங்களுக்காக ஈந்த மட்டற்ற அன்பை நினைத்து, உள்ளத்தின் ஆழத்தில் உம்மை நேசிக்கிற நேசத்தோடு அப்பாவுக்கென்று உழைக்க கிருபை தாரும். பேர் புகழுக்காக நாங்கள் எதையும் செய்யாமல், உம்முடைய நாமம் ஒன்றே உயர்த்தத்தக்கதாக  உண்மையாய் உழைக்க கிருபை தாரும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.