ஊழியர்களை குற்றஞ்சாட்டலாமா?

ஊழியர்களை குற்றஞ்சாட்டலாமா? 

கேள்வி #1
நீங்கள் ஏன் ஊழியக்காரர்களை குற்றப்படுத்துகிறீர்கள்? இது பாவமில்லையா?
பதில்: நாங்கள் ஊழியக்காரர்களை குற்றப்படுத்தவில்லை. தேவனுடைய ஊழியர்களை குற்றப்படுத்துவது பாவம்தான். ஆனால் நாங்கள் ஊழியக்காரர் என்ற போர்வையில் ஜனங்களை வஞ்சிக்கும் அந்திகிறிஸ்துவின் ஏஜண்டுகளையே இனங்காட்டுகிறோம்.
கேள்வி #2
அந்திகிறிஸ்துவின் ஏஜண்டுகளை கண்டிப்பதும், தண்டிப்பதும் செய்வது தேவனுடைய வேலை. உங்களுக்கு அந்த அதிகாரத்தை தந்தது யார்?
பதில்: அவர்களை தண்டிப்பது தேவனுடைய வேலைதான், ஆனால் அவர்களை இனங்கண்டு விசுவாசிகளை அவர்களுக்கு விரோதமாக எச்சரிப்பதற்கு தேவன் தனியாக ஒரு தூதனை பரலோகத்திலிருந்து அனுப்பமாட்டார், அதை சபையில் உள்ளவர்கள்தான் செய்யவேண்டும். தனது சக சகோதரனை தன் ஜீவனைக் கொடுத்தேனும் ஆக்கினையிலிருந்து தப்புவிக்கும் பொறுப்பு ஒவ்வொரு விசுவாசிக்குமுள்ளது.
கேள்வி #3
குற்றங்களை அம்பலப்படுத்தும் ஊழியம் என்று ஒரு ஊழியம் உண்டா?
பதில்:  செய்யும் குற்றத்தையே சிலர் ஊழியம் என்று சொல்லும்போது அதை அம்பலப்படுத்துவது ஏன் ஊழியமாகாது?
கேள்வி #4
குற்றம்சாட்டுவது பிசாசின் வேலை அல்லவா?
பதில்: அவன் குற்றம்சாட்டுவது பிசாசின் வேலையென்றால் அவன் குற்றம்சாட்டும்படிக்கு “குற்றம் செய்வது” மட்டும் யாருடைய வேலையாம்?
கேள்வி #5
ஊழியங்களை குறை சொல்லுகிறவன் பிசாசின் ஆவியுடையவன் இல்லையா?
பதில்: ஊழியம் என்ற போர்வையில் அட்டூழியம் செய்பவன் மட்டும் தேவனுடைய ஆவியுடையவனா?
கேள்வி #6
ஊழியக்காரர்களை குற்றவாளிகள் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? நீதிமானை குற்றவாளியாக்குகிறவன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று நீதிமொழிகள் 17:15 சொல்லுகிறல்லவா?
பதில்: குற்றவாளிகளை ஊழியர்கள் என்று நீங்கள் எப்படி அழைக்கலாம்? துன்மார்க்கனை நீதிமான் என்றழைக்கிறவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று அதே நீதிமொழிகள் 17:15 சொல்லுகிறதே!
கேள்வி #7
நீங்கள் ஊழியக்காரர்களது தவறுகளை பகிரங்கப்படுத்துவதால் புறமதத்தார் மத்தியில் இயேசுவின் நாமம் தூஷிக்கப்படுகிறதே!
பதில்: இயேசுவின் ஊழியக்காரர்கள் என்ற போர்வையில் இருந்துகொண்டு அவர்கள் அட்டூழியம் செய்யும்போது புறமதத்தார் மத்தியில் இயேசுவின் நாமம் மகிமைப்படுகிறதோ? அப்போது மாத்திரம் உங்களுக்கு ஏன் இந்தக் கவலை எழவில்லை??
கேள்வி #8
நீங்கள் குறை சொல்லும் ஊழியர் எத்தனை ஆத்துமாக்களுக்கு சுவிசேஷம் அறிவித்து எத்தனை பேரை கர்த்தருக்காக ஆதாயப்படுத்தியிருக்கிறார் தெரியுமா?
பதில்: மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள் (மத்தேயு 23:15)
பரிசேயர்கள் கூட தங்கள் கூட்டத்துக்கு ஆள்சேர்க்கும்படி பூமியெங்கும் சுற்றித்திரிந்தார்கள் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது. அவர்கள் நிறைவேற்றியது பிரதான கட்டளையை அல்ல. மதத்துக்கு ஆள்சேர்ப்பது வேறு, சீஷர்களை உருவாக்குவது வேறு. சீஷர்களே சீஷர்களை உருவாக்கமுடியும். இயேசுவையும் அவரது சீஷர்களையும் பின்பற்றி வாழாமல் சுயத்தையும் பணத்தையும் மையமாகக் கொண்டு வாழ்பவர்கள் செய்யும் ஆத்தும ஆதாயம்(!) கிறிஸ்துவுக்கு இலாபமல்ல.
கேள்வி #9
மற்றவர்களை குற்றப்படுத்தும் நீங்கள் எத்தனை ஆத்துமாக்களை தேவனுக்காக சம்பாதித்திருக்கிறீர்கள்?
பதில்: முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்று வேதம் சொல்லியிருக்க நான் இத்தனை ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தினேன் என்று காலத்துக்குமுன் யாருமே தலைக்கணக்கு காட்டமுடியாது. காரணம் நடுகிறவன் ஒருவன், நீர்ப்பாய்ச்சுகிறவன் ஒருவன், தேவனே விளையச் செய்கிறவர் என்று வேதம் சொல்லுகிறது. எந்த ஆத்துமாவை யார் கணக்கில் எழுதுவது, யாருக்கு என்ன வெகுமதி கொடுப்பது என்பதை தேவனே முடிவு செய்ய வேண்டும். நடவையும் நீர்ப்பாய்ச்சுவதையும் உத்தமமாய் செய்வது மாத்திரமே நம் கடைமை.
கேள்வி #10
இயேசுவின் மூலம் இரட்சிப்பு என்று போதிக்கும் யாவரும், இயேசுவின் நாமத்தில் வியாதிகளை குணமாக்கும் யாவரும் இயேசுவின் ஊழியர்தானே? இவர்களில் சிலரை அந்திகிறிஸ்துவின் ஏஜண்டுகள் என்று எப்படி முத்திரை குத்துகிறீர்கள்?
பதில்: கடைசி நாட்களில் அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே(இயேசுவே) கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள் (மத்தேயு 24:5) அதாவது கிறிஸ்துவுடையவன் அல்லது கிறிஸ்தவன் என்ற நாமத்தைத் தரித்துக்கொண்டு “இயேசுவே மேசியா(இரட்சகர்)” என்று போதிக்கும் அநேகர் எழும்புவார்கள். போதிப்பது என்னவோ சரியான சத்தியமாக இருந்தாலும் அவர்களில் அநேகர் வஞ்சகர்களாயிருப்பார்கள் என்று கர்த்தர் எச்சரித்திருக்கிறார், எனவேதான் ஆட்டுத்தோலைப்(சரியான சத்தியம்) போர்த்துக்கொண்டு வருவார்கள் அவர்கள் உள்ளத்திலோ பட்சிக்கிற ஓநாய்கள் என்று தெளிவாக முன்னுரைத்திருக்கிறார்.
எனவேதான் நமது பரிசோதனை இரண்டடுக்கு பரிசோதனையாக இருக்கவேண்டும். முதல் அடுக்கு போதிப்பது சரியான சத்தியமா? என்று வேதவசனத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து நிதானிப்பதாகும். இதைத்தான் பெரேயா கிறிஸ்தவர்கள் செய்தார்கள் (அப் 17:11)
முதல் அடுக்கில் தேர்ச்சி பெற்றுவிட்டால் போதிப்பவர் சரியான நபர்தானா? என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். இது இரண்டாம் அடுக்கு சோதனை.
“அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத் 7:16)”, வேதம் சொல்லும் சீஷனுக்குரிய கனிகள் அவரில் காணப்படுகிறதா? அவர் ஊழியம் செய்யும் விதம் எப்படி? பணவிஷயத்தில் அவர் எப்படி? குடும்பத்தை எப்படி நடத்துகிறார்? தனிப்பட்ட சாட்சி எப்படி? எதிர்பாலரிடம் எப்படி நடந்து கொள்கிறார்? கிறிஸ்துவின் நற்கந்தம் அவரிடம் காணப்படுகிறதா? தற்புகழ்ச்சியை நாடுகிறாரா? போன்ற பல விஷயங்களை உற்றுநோக்க வேண்டும். சபையில் ஊழியப்பொறுப்பு வகிப்பவன் எப்படிப்பட்டவனாய் இருக்கவேண்டும் என்ற காரியங்களை பவுல் தீமோத்தேயு, தீத்து நிருபங்களில் தெளிவாக அவற்றை வாசியுங்கள். நீங்களே நிதானித்துப்பாருங்கள். கர்த்தர் உங்களை வழிநடத்தி ஆசீர்வதிப்பாராக!
கிறிஸ்துவுக்குள் அன்புடன்
வாட்ச்மென்