பாதுகாக்கும் தேவன்

பாதுகாக்கும் தேவன்

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். – (சங்கீதம் 91:1).
புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஒருவர் இருந்தார். அவர் கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் கற்று கொடுக்கும் ஆசிரியராகவும் பணி புரிந்தார். தன்னுடைய மீந்த நேரங்களில் நீந்துவது அவரது விருப்பமான பொழுதுபோக்காக இருந்து வந்தது. அவர் வேலை செய்த கல்லூரியில் ஒரு நீச்சல்குளம் ஒன்று இருந்தது. எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் அங்கு சென்று நீந்தி மகிழ்வது அவருடைய வழக்கம்.
அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரும் அவருக்கு நேரம் கிடைக்கும்போது இவரோடு நீந்த செல்வார். இவர் நீந்துவதற்கு முன் செய்த ஒரு காரியம் நண்பருக்கு புரியாத புதிராக இருந்தது. ஒருநாள் தன் நண்பரையே அவர் கேட்டார், ‘ நண்பரே, ஒவ்வொரு நாளும் மேலே ஏறி நீரில் குதிப்பதற்கு முன், நீர் உம்முடைய கால் விரல்களை தண்ணீரில் நனைத்து கொள்வது ஏன்?’ என்று கேட்டார். அப்போது அவர் நடந்த சம்பவத்தை கூற ஆரம்பித்தார்;
‘பல ஆண்டுகளாக நான் இந்த குளத்தில் நீந்த வருகிறேன். ஒருநாள் இரவில் என்னால் தூங்க முடியவில்லை. நன்றாக நீந்தினால் அந்த களைப்பினால் ஒருவேளை தூக்கம் வரும் என்று நினைத்தவனாக இந்த குளத்திற்கு வந்தேன். அன்று நிலா முழுமையாக பிரகாசமாக இருந்தது. நன்கு பிரகாசமாக இருந்ததால் நான் மின்சார விளக்கை ஏற்றாமல், இந்த குதிக்கும் பலகையின் மீது ஏறி குதிக்க தயாரானேன்.
அப்போது சட்டென்று ஒரு நாளும் கவனித்திராத ஒரு நிழலை கண்டேன். நிலாவின் ஒளி பிரகாசத்தில் நான் கைகளை விரித்து தாவும் நிலையில் நின்ற என் சொந்த நிழல் குளத்தின் எதிர் சுவரில் அழகான சிலுவை வடிவமாக காட்சியளித்தது. இதற்கு முன் நான் ஒரு நாளும் அந்த சிலுவை போன்ற நிழலை கவனித்ததேயில்லை. அது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது. நான் குதிக்காமல், அந்த சிலுவையையே பார்த்தவாறு கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன். என்னையுமறியாமல், ‘சிலுவை ஓரு புனித சின்னம்’ என்று பாடலை பாட ஆரம்பித்தேன்.
அதன் பின் என்னையுமறியாமல், நான் அங்கு தண்ணீரில் குதிக்காமல், அந்த பாடலை பாடியவாறே கீழே இறங்கினேன். சில படிகள் இறங்கியும் கால்களில் நீர் படவில்லை.
கடைசி படியையும் விட்டிறங்கி, குளத்தின் அடித்தளத்தில் நின்றேன். குளத்தை சுத்தப்படுத்த குளத்தின் காவலாளி தண்ணீர் முழுவதையும் அகற்றியிருந்ததை அப்போதுதான் நான் உணர்ந்தேன். அந்த சிலுவை நிழலால் நான் கவர்ச்சிக்கப்பட்டு, என் கவனம் திசை மாற்றப்படாதிருந்தால் நான் தண்ணீரில்லாத குளத்தில் குதித்திருந்திருப்பேன், மரணத்தை தழுவியிருப்பேன். தண்ணீர் இல்லாததால் தான் என நிழல் எதிர் சுவரில் தெரிந்தது என்றும், மற்ற நாட்களில் என் நிழல் கீழே நீரில் விழுகிறதால் தெரியவில்லை என்றும் உணர்ந்தேன்.
அந்த அற்புத விடுதலையை உணர்ந்த போது என் உடல் சிலிர்த்தது. அந்த குளத்தின் அடித்தளத்திலேயே முழங்கால் படியிட்டு என்னை பாதுகாத்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நன்றி சொன்னேன். அந்த நாளிலிருந்து இன்று வரை குதிக்குமுன் நான் என் கால் விரல்களை தண்ணீரில் நனைத்து நீர் அகற்றப்படவில்லை என்பதை அறிந்து பின் குதிப்பது எனக்கு வழக்கமாகி விட்டது’ என்று உணர்ச்சி மேலிட கூறினார்.
பிரியமானவர்களே, இந்த சகோதரன் தேவனை நம்பி இருந்தபடியால், அவருடைய ஆபத்து காலத்தில் தேவன் அவரை காப்பாற்றினார். வசனம் சொல்கிறது, ‘எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது’  என்று வாசிக்கிறோம். கிறிஸ்துவின் அடைக்கலத்தில் வந்த ஒவ்வொருவருக்கும் அவரே புகலிடமாக தஞ்சமாக இருக்கிறார். நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிற பாதுகாப்பு அவராலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நாம் அறியாதபடி நம்மை சூழ்ந்து இருக்கிற ஆபத்துகள் அதிகம். நாம் அறியாதபடி நாம் மாட்டி கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனாலும் தேவனை நாம் அறிந்து அவருக்குள் இருக்கும்போது நம்மை அவர் பாதுகாத்து நம்மை சுற்றி வேலியடைத்து காத்து கொள்கிறார்.
யோபு புத்தகத்தில் நாம் வாசிக்கும்போது, சாத்தான் தேவனிடம், கேட்கிறான், ‘நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?’ (யோபு 1:10) என்று. அப்படியென்றால் கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவரையும், அவர்களுடைய வீட்டையும், அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி தேவன் அவர்கள் அறியாமலே சுற்றிலும் வேலி அடைத்து வைத்து காக்கிறார். அல்லேலூயா!
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா – (சங்கீதம் 127:1) என்று வாசிக்கிறோம். தேவன் நம்மை காத்து கொள்ளாவிட்டால் நாம் விழித்திருந்து காத்து கொள்வது எல்லாம் விருதாவாயிருக்கும்! அவரை அண்டிக்கொள்வோம். அவரின் பாதுகாப்பை பெற்று வாழ்வோம். வேறு எந்த பாதுகாப்பும் விருதாவே! ஆமென் அல்லேலூயா!
தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒருபோதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார்
..
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை அல்லேலூயா

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, தேவனே நீரே எங்கள் கோட்டையாக எங்கள் அரணாக, எங்கள் துருகமாக, எங்கள் தஞ்சமாக இருக்கிற தயவிற்காக உமக்கு ஸ்தோத்திரம். நீர் அறியாதபடி எங்களுடைய தலையிலுள்ள ஒரு முடியும் கூட கீழே விழாது என்கிற நம்பிக்கைக்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்களுடைய போக்கையும் வரத்தையும், எங்கள் வேலையிடங்களிலும் உம்முடைய கிருபையினால் இந்த நாள் வரை பாதுகாத்து வருகிற கிருபைக்காக உமக்கு நன்றி. தொடர்ந்து எங்களையும், எங்களுடைய வீட்டையும், எங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி நீர் வேலியடைத்து காத்து கொள்வதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள் தகப்பனே. எங்கள் துதி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் மூலமாக உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.