இரட்சிப்பு கர்த்தருடையது

இரட்சிப்பு கர்த்தருடையது


நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன். – (கலாத்தியர் 2:2).

லண்டன் நகரில் ஒரு நாள் இரவு மோசமான காலநிலை காரணமாக மிஷனெரி சங்கத்தின் ஒரு கூட்டத்தை நடத்துவதா அல்லது விடுவதா என்று இரண்டு பேர் யோசித்து கொண்டிருந்தார்கள். இடி இடித்து, பெருமழை பெய்து கொண்டிருந்தாலும் அங்கு வந்த ஒரே ஒரு நபருக்காக கூட்டத்தை நடத்தினார்க்ள. அங்கு மழைக்கு ஒதுங்கிய இன்னொருவரும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டார். வட அமெரிக்காவிலுள்ள செவ்விந்தியர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆட்கள் தேவை என்பதை பற்றி வல்லமையாக செய்தி கொடுக்கப்பட்டது. முடிந்ததும், ‘இன்றைய நாள் வீணாய் போயிற்று’ என்று தலைவர்களில் ஒருவர் சொல்லி கொணடிருந்தார். ஆனால் அந்த நாள் வீணாய் போகவில்லை. மழைக்க ஒதுங்கியவர் கர்த்தருடைய சத்தத்திற்கு செவி சாய்த்து தன்னை ஒப்பு கொடுத்திருந்தார். ஒரே மாதத்திற்குள் அவர் தனது வியாபாரத்தை விட்டு விட்டு, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள செவ்விந்தியர்களுக்கு ஊழியம் செய்ய ஆயத்தமானார். அங்கே 35 ஆண்டுகள் தங்கி, கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றினார். வெறுமனே ஒரே ஒரு நபருக்காக நடத்தப்பட்ட கூட்டம் முடிவில் ஒரு ஊழியரை உருவாக்கி, அவர் மூலம் அநேக ஆத்துமாக்களுக்கு சுவிசேஷம் சென்றடைந்துள்ளது.

இதை வாசிக்கின்ற நீங்கள் ஒன்றை உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும். திரளான மக்கள் மத்தியில் ஊழியம் செய்தல், பாடுவது, பிரசங்கிப்பது ஆகிய எல்லா விருப்பமும் சரியே. அதே வேளையில் எண்ணிக்கையில் குறைவாய் உள்ள ஒரு சிலரது மத்தியில் தேவன் நம்மை ஊழியம் செய்ய அனுமதிப்பாரென்றால் அதற்கும் நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும். நாம் காண்கிற அல்லது நடத்துகிற கூட்டங்களில் இரட்சிப்பு கர்த்தருடையது என்ற பகுதியை மறந்து போக வேண்டாம். இன்றைய கிறிஸ்தவத்தில் ஒருவருக்கு ஊழியம் செய்யும்படியாக சிறிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றால் அதை ஏற்று கொள்ள முன் வருவதில்லை. சபைகளிலும், ஊழியங்களிலும் பெரிய பொறுப்புகள், பதவிகள், திரளான மக்கள் மத்தியில் பேசுதல் இவைதான் அநேகருடைய வாஞ்சையாக உள்ளது. நமக்கு கொடுத்திருக்கும் கொஞ்சத்தில் உண்மையாயிருக்கவே தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.

‘நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் எண்ணிக்கையில் உள்ள சிலருக்கு மட்டுமே பிரசங்கம் பண்ணியதாக குறிப்பிடுகிறார். நாம் யாரும் பவுலை போன்றதொரு பெரிய பணியை செய்தவர்கள் கிடையாது. மலைபிரசங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் பிரசங்கித்த நம் இரட்சகர் இயேசுகிறிஸ்து, அநேக நாட்களாய் லேகியோன் பிசாசு பிடித்திருந்தவனை விடுவிக்கும் பொருட்டு, அவன் ஒருவனுக்காக கலிலேயாவிலிருந்து கதரேனரின் நாட்டிற்கு சென்று அவனை விடுவித்தாரே! – (லூக்கா 8: 26-37) சிறு எண்ணிக்கையில் உள்ள கூடுகையிலும் பேசுவதற்கு அவர் தயங்கவில்லை. இச்செய்தியின் மூலம் தேவன் கொடுத்துள்ள ஊழியத்தை, அதை வெயிலோ, மழையோ, காற்றோ, பெருந்திரள் கூட்டமோ, சிறு கூட்டமோ உண்மையாய் நிறைவேற்றுவோம். இரட்சிப்பு கர்த்தருடையது என்பதால், அவரே சிறியதாயினும், பெரியதாயினும் அதை பொறுப்பெடுத்து, மக்களை இரட்சிப்பார். ஆமென்