அடைக்கல பட்டணம்

அடைக்கல பட்டணம்

மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். – (எபிரேயர் 7:25).
பழைய ஏற்பாட்டு காலத்தில் ஆறு பட்டணங்கள் அடைக்கல பட்டணங்களாக இருந்தன என்று எண்ணாகமம் 35:6-34 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன. கைப்பிசகாய் ஒருவனை கொன்றவன் அங்கு போய் அடைக்கலம் புகுந்து தன்னை தப்புவித்து கொள்ளலாம். யாராவது அப்படி தப்பி, அந்த அடைக்கல பட்டணத்திற்குள் புகுந்து விட்டால், யாரும் அவனை ஒன்றும் செய்ய முடியாது. இந்த அடைக்கல பட்டணங்கள் மனிதனால் உண்டாக்கப்பட்டவை அல்ல, தேவனால் முன்குறிக்கப்பட்டு, தேவனால் அனுமதிக்கப்பட்டவை. இந்த பட்டணங்கள் குறிப்பிட்ட பெரிய பதவியில் இருப்பவர்களுக்காக மட்டுமல்ல, அனைவருக்காகவும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அடைக்கல பட்டணத்தின் வாசல்கள் என்றும் அடைக்கப்படுவதேயில்லை. இரவோ பகலோ யார் அதற்குள் ஓடிவந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பாய் அந்த பட்டணங்கள் இருந்தன. இந்த பட்டணங்களை தேடி யாரும் அலைய வேண்டியதில்லை, அதற்கான வழிகள் செல்லும் இடங்களில், அடைக்கல பட்டணத்திற்கு போகும் வழி என்று அடையாள பலகைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன் வழி செல்ல முடியாதபடி இருளும், இடிந்ததுமாக இல்லாதபடி, வருடத்திற்கு ஒரு முறை ஆசாரியர்கள் அடைக்கல பட்டணத்திற்கு செல்லும் வழியை செப்பனிட்டு, அதன் வழியாக ஓடி வருபவர்கள் பத்திரமாக போய் சேரும்படியாக போகும் வழியை சீர்ப்படுத்துவார்கள்.
வேதத்தில் ஒரு சம்பவத்தை பார்க்கிறோம். 2 சாமுவேல் இரண்டாம் அதிகாரத்தில் அப்னேர் என்னும் சவுலின் சேனாதிபதியை குறித்து வாசிக்கிறோம். ஆசகேல் என்னும் தாவீதின் சேனாதிபதியாக இருந்த யோவாபின் சகோதரன், அப்னேரை கொல்லும்படி அவன் பின்னாக துரத்தி கொண்டு சென்றான். அப்போது அப்னேர், ‘நான் ஏன் உன்னை கொல்ல வேண்டும்? என் பின்னே துரத்தி கொண்டு வராதே’ என்று கூறின போதும், ஆசகேல் விடமாட்டேன் என்று சொல்லி பின்னும் துரத்தி கொண்டு வந்தபோது, தன்னை காத்து கொள்வதற்காக அப்னேர் தன் ஈட்டியை எடுத்து, அதை பின்னாக திருப்பி, ஆசகேலின் வயிற்றில் குத்த, அது அவனுடைய முதுகின் பின்னாக வெளிவந்து, அவன் அந்த இடத்திலேயே மரித்து போனான்.
பின் ஒரு நாள் அப்னேர் அடைக்கல பட்டணங்களில் ஒன்றாகிய எபிரோனின் வாசல்களண்டையில் வந்து கொண்டிருந்தபோது,  ‘..யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்’ (2 சாமுவேல் 3:27) பாருங்கள்!  அப்னேர் அப்போது அடைக்கல பட்டணத்தின் வாசலண்டை வந்து கொண்டிருந்தான். அவன் உள்ளே சென்றிருந்தால் அவனை யாரும் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் அதை அறிந்த யோவாப், அவனை வெளியே அழைத்து, நல்லவனை போல நடித்து, அவனை கொன்று போட்டான். அதை தாவீது அறிந்த போது, தாவீது ராஜா பாடின புலம்பல் மிகவும் அருமையானது. ‘ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ? உன் கைகள் கட்டப்படவும் இல்லை; உன் கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்’ (2 இராஜாக்கள் 3:33-34). ‘அப்னேரின் கைகள் கட்டப்படவில்லை, கால்களில் விலங்கும் இல்லையே, பின்னை ஏன் நீ தப்பித்து கொள்ளவில்லை, நீ ஓடிபோயிருந்தால் தப்பியிருந்திருப்பாயே, அடைக்கல பட்டணத்தின் வாசலில் தானே நீ இருந்தாய், மதிகெட்டவனை போல நீ மடிந்து போனாயே’ என்று இராஜா புலம்பினான் என்று பார்க்கிறோம்.
பிரியமானவர்களே, இன்றும் நமக்கு அடைக்கலப்பட்டணமாக இயேசுகிறிஸ்து இருக்கிறார். பாவத்தின் சம்பளம் மரணம் என்ற நியதியை யாரும் மாற்ற முடியாது. ஆனால் தேவன் நம்மேல் வைத்த அன்பினால், நாம் செய்த பாவங்களுக்கு தப்பித்து கொள்ளும்படியாக தமது சொந்த குமாரனையே பலியாக்கி, நம்முடைய பாவங்களுக்கு நாம் அடைய வேண்டிய ஆக்கினையை அடையாதபடி காத்து கொண்டார்.
பாவத்தை செய்து, அதன் விளைவால் துன்பமும் துக்கமும் அடைந்து என்னை விடுவிப்பார் யாரும் இல்லை என்று கலங்கி கொண்டிருக்கிறீர்களோ? நீங்கள் சென்றடையும்படி உங்களுக்கென்று ஒரு அடைக்கல பட்டணம் உண்டு. அவர்தான் இயேசுகிறிஸ்து. அவரேயன்றி நரகத்திற்கு தப்பும் வழி வேறு ஒன்றுமே இல்லை. அவருடைய மாசற்ற திரு இரத்தமே உங்களுடைய என்னுடைய பாவத்தை போக்கும் ஒரே வழி. உங்கள் கைகள் கட்டப்பட்டிருக்கவில்லை, உங்கள் கால்கள் கட்டப்பட்டும் இல்லை, ஆனால் நீங்கள் எடுக்கப்போகும் முடிவு உங்களை நித்திய அழிவிற்கோ அல்லது நித்திய ஜீவனுக்கோ உங்களை அழைத்து செல்லும்.  அப்னேரை போல வாசலண்டை நின்று கொண்டு சாத்தானின் சதி திட்டத்தால் அவனுடைய நித்திய நரகத்திற்கு சென்றடைய போகிறீர்களோ? இயேசுகிறிஸ்து வாசலண்டை நின்று அழைக்கும் சத்தம் கேட்டு, உள்ளே வந்து விடுங்கள். கொடிய சாத்தானின் பிடியிலிருந்து ஓடி வந்து விடுங்கள். அவருடைய விரிக்கப்பட்ட கரம் உங்களை ஏற்று கொள்ளும். இரவோ பகலோ எந்த நேரமும் அடைக்கப்படாத, குறுகிப்போகாத அவருடைய கரங்கள் உங்களை அணைத்து கொள்ளும். ஏற்று கொள்ளும். நித்திய ஜீவனுக்கு உங்களை அழைத்து செல்லும். பரலோக இராஜ்ஜியத்திற்கு உங்களை தகுதிப்படுத்தும். ஓடிவந்து விடுவோமா? மீண்டும் ஒரு தருணம் உங்களுக்கு கொடுக்கப்படாமல் இருக்கலாம். ஆகவே இப்போதே அவரிடம் ஓடி வந்து விடுங்கள். கர்த்தர் உங்களை ஏற்று கொள்வார். ஆமென் அல்லேலூயா!
இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை
இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை
கூப்பிடு இயேசு இயேசு என்று
உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, என்னுடைய பாவத்திற்கு சம்பளம் மரணம் என்பதை அறிந்த நான், அதிலிருந்து வெளிவரும்படியாக, நீர் எங்களுக்கென்று கொடுத்திருக்கிற அடைக்கலப்பட்டணமாகிய இயேசுகிறிஸ்துவினண்டை ஓடி வந்து விடுகிறேன்.  என்னுடைய பாவத்தை கழுவி சுத்திகரிக்கும்படியாக என்னை அவரிடம் தருகிறேன். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவத்தையும் நீக்கி என்னை சுத்திகரிக்க வல்லமையுள்ளதாகையால், என்னை கழுவிவிடும்படி அவரிடம் ஒப்படைக்கிறேன். என் பாவங்களை மன்னித்து, என்னை கழுவி சுத்திகரித்ததற்காக உமக்கு கோடி நன்றி. இயேசுகிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்று கொள்கிறேன். எனக்கு நித்திய ஜீவனையும், பரலோக இராஜ்ஜியத்தில் ஒரு இடத்தையும் கொடுத்ததற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள் தகப்பனே. நன்றி நன்றி நன்றி.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.