பில்லி பிரே (Billy Bray)
அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். – (எபிரேயர் 13:15).
தேவன் சில சமயங்களில் பலவீனமான பாண்டங்களை மிகவும் ஆச்சரியமான முறையில் உயயோகிக்கிறார். அப்படி உபயோப்படுத்தப்பட்டவர்களில் கார்னிஷ் பட்டணத்தில் சுரங்க தொழிலாளராக பணிபுரிந்த பில்லி பிரேவும் (Billy Bray) ஒருவர். இரட்சிக்கப்படும் முன் அவர் பயங்கர குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும், இருந்தார். ஒவ்வொரு இரவும், அவரது மனைவி, சாராயக்கடைக்கு சென்று அவரை அழைத்து. வருவார்களாம். ஆனால் இயேசுவின் மெய் சீடனாக மாறிய பின் இங்கிலாந்தில் ஒரு முனை துவங்கி மறுமுனை ம்ட்டும் அவரை அறியாதவர்கள் எவருமிருக்க முடியாது. அவரது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் நம் ஆவிக்குரிய வாழ்வை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.
பில்லி பிரே, ஆண்டவரின் அன்பு தன் இருதயத்தில் நிரம்பி வழிந்தோடுவதை உணர்ந்தார்.
எனவே அடிக்கடி ஆனந்த கண்ணீர் வடித்து சந்தோஷத்துடன் நடனமாடுவார். ‘நான் தெருவில் நடந்து செல்லும்போது, ஒரு காலை தூக்கினவுடன் ஆண்டவருக்கு மகிமை என்றும் அடுத்த காலை தூக்கும்போது ஆமென் என்றும் என்னால் சொல்லாமல் இருக்க முடிவில்லை’ என்பார். ‘ஒரு பீப்பாவில் அடைத்து போட்டாலும் அதின் துவாரத்தின் வழியாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சத்தமிடுவேன்’ என்று கூறுவார். ஒரு சமயம் ஹக்னில் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் ‘ஒரு அம்மையார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என சத்தமிட்டு கொண்டே மரித்தார்கள்’ என சொல்லப்பட்டது. உடனே பில்லி சந்தோஷமடைந்து, மரிக்கும் ஒருவர் அவ்விதம் துதிக்க கூடுமானால் உயிருடன் இருக்கும் நாம் தேவனை துதிக்க எவ்வளவாய் கடமைப்படடிருக்கிறோம்’ என்றார். இவ்வாறு எப்போதும் தேவனை துதித்து கொண்டும் நடனமாடி கொண்டும் இருப்பதை கண்டு பைத்தியம் பிடித்தவன் என்று பலர் பரியாசம் பண்ணினார்கள். நான் பைத்தியம் பிடித்தவனில்லை என்றும் சந்தோஷத்தில் மூழ்கினவனென்றும் கூறுவார்.
ஒருமுறை பிளேசி என்ற இடத்திலுள்ள ஆலயத்திற்கு அவர் சென்ற போது அங்குள்ள சபையார் தங்கள் கஷ்டங்களையும், பாடுகளையும் அவரிடம் கூறினார்கள். அவர் புன்முறுவலோடு எழுந்து கைகளை தட்டிக்கொண்டு, ‘நண்பர்களே நான் காடியை ருசித்திருக்கிறேன். காடியை தேவன் எனககு மிக கொஞ்சமாகவும், தேனை மிக அதிகமாகவும் கொடுத்திருக்கிறார். எப்படியென்றால் நான் துக்கப்பட முடியாத அளவிற்கு தேவன் என்னை சந்தோஷப்படுத்தி விட்டார்’ என்றார். உபத்திரவங்கள் தேவன் காட்டும் தயவின் அடையாளங்கள் என்றும் அவற்றை குறித்து கிறிஸ்தவர்கள் களிகூற வேண்டுமெனறும் கூறுவார்.
பில்லி ஒருவரை சந்தித்த மாத்திரத்தில் அவருடைய ஆத்துமாவை குறித்து விசாரிப்பார். இரட்சிப்படைந்து விட்டதாக கேள்விப்பட்டால், உடனே குதித்தெழும்புவார், அந்நபரை பிடித்து கொண்டு நடனமாடி அப்படியே அவரை தூக்கி சுமந்து செல்வார்.
ஓவ்வொரு நாள் காலையிலும் சுரங்க வேலை ஆரம்பிக்குமுன் அவர் ‘ஆண்டவரே இன்று யாராவது சுரங்கத்தில் மரிப்பது உமது சித்தமாயிருந்தால் அது நானாக இருக்கட்டும், அவர்களில் யாரும் மரிக்க வேண்டாம். அவர்கள் ஆயத்தமாயிருக்கவில்லை, நான் ஆயத்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறேன். நான் மரித்தால் உடனே உம்மிடம் வந்து விடுவேன்’ என்று ஜெபிப்பார்.
பில்லி அநேக முறை பணத்தேவையில் கடந்து வந்தார். இருப்பினும் அவர் சோர்ந்து போனதோ, முறுமுறுத்ததோ கிடையாது. ‘எனக்கு வேலை கிடைத்தால் ஆண்டவரை துதிப்பேன். இல்லாவிட்டாலும் அவரை நோக்கி பாடுவேன். என்னை ஒருபோதும் அவர் பட்டினி போட மாட்டார். பானையின் அடிமட்டத்தில் கொஞசம் மாவை கண்டிப்பாக தேவன் வைத்திருப்பார்’ என்று உறுதியளிப்பார். ஆடம்பரமாக வாழ்க்கையையும், பகட்டான ஆடைகளையும் பில்லி விரும்புவது கிடையாது. ‘நல்லதொரு வண்டியில் ஏறி நரகத்திற்கு போய் சேருவைத விட நடந்து சென்று பரலோகம் அடைவது மிகவும் நல்லது’ என்பார்.
பிரியமானவர்களே, பில்லி பிரேயின் கிறிஸ்தவ வாழ்வும், ஆத்துமாக்கள் மீது அவர் கொண்ட கரிசனையும் எத்தனை அற்புதமானது! தனக்கு கிடைத்து வேத வெளிச்சத்தின்படி துன்பத்திலும், வறுமையிலும் சந்தோஷமாய் ஏற்று கொண்டு அவர் தேவனை துதித்து, அவருக்காக வாழ்ந்தார். மற்றவர்களை கர்த்தரிடம் கொண்டு வந்தார். தேவ கிருபை குடிகாரனையும், விபச்சாரகாரனையும் சந்திக்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றி, இல்லாமையிலும் தேவனை துதிக்க வைக்கிறதல்லவா? தேவன் நல்லவர்களை மாத்திரம் தெரிந்து கொள்வதில்லை. கொலையாளியையும், கொடூரமானவர்களையும், குடிகாரர்களையும், துன்மார்க்கரையும் தமக்காக தெரிந்து கொண்டு, அவர்ளை கொண்டும் பெரிய காரியங்களை செய்ய வல்லவராகிய நம் தேவனை போல யாருண்டு?
அவரை துதிக்கும் துதி எப்போதும் நம் வாயில் காணப்பட வேண்டும். நம் இருதயத்தில் அவரை எப்போதும் அவரை துதிக்கும் பாடல்களை பாடி மகிழ வேண்டும். சினிமா பாடல்களையல்ல, தேவனை துதிக்கும் துதியினால் நிறைந்த பாடல்களை நம் இருதயத்தில் எப்போதும் பாடி அவரை துதித்து கொண்டே இருக்க வேண்டும். தேவனை துதிக்கும் துதி நம் வாயிலுண்டா? அல்லது தேவனிடம் நம் தேவைகளை மட்டும் சொல்லி கொண்டேயிருக்கிறோமா? உபத்திரவத்தில்; சோர்ந்து போய் காணப்படுகிறோமா? அல்லது இரட்சிப்பின் சந்தோஷம் அதையும் மிஞ்சி நிற்கிறதா? பிறர் இரடசிப்படைய வேண்டும் என்று விரும்புகிறோமா? அவர்களது இரட்சிப்பில் மனமகிழ்கிறோமா?
தேவனை துதிக்கும் துதி நம் வாயிலும் நம் இருதயத்திலும் இருக்கும்போது, நிச்சயமாக தேவன் அதில் வாசம் பண்ணுவார். நம்மை கொண்டும் தமக்கென்று பெரிய காரியங்கள் செய்திடுவார். ஆமென் அல்லேலூயா!
நீரன்றி வாழ்வேது இறைவா!
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் உள்ளத்தில் வாழும் ஒரு நாளே போதும்
..
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் உள்ளத்தில் வாழும் ஒரு நாளே போதும்
..
எத்தனை நன்மைகள் செய்தீரய்யா – அதில்
எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா
அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
ஆயிரம் நாவுகள் போதாதய்யா
எதற்கென்று நன்றிசொல்லி துதிப்பேனய்யா
அத்தனையும் சொல்ல வேண்டுமென்றால்
ஆயிரம் நாவுகள் போதாதய்யா
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உலகில் எத்தனையோ பேர் சமாதானமின்றி, உணவின்றி, இருக்க இடமின்றி தவித்து கொண்டிருக்கும்போது, எங்களை இந்த நாள் வரை சுகத்துடன், பெலத்துடன், சமாதானத்துடன் வாழ வைக்கிறீரே, உம்முடைய கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். நீரன்றி இந்த உலகத்தில் சமாதானம் இல்லை தகப்பனே, நீரே எங்கள் சமாதான கர்த்தர், சமாதானபிரபு. உம்மை துதிக்கும் துதி எப்போதும் எங்கள் வாயிலும் எங்கள் இருதயத்திலும் காணப்படட்டும் தகப்பனே. நீர் செய்த நன்மைகளை மறவாத நல்ல இருதயத்தை எங்களுக்கு எப்போதும் கொடுத்து உம்மை துதிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.