அனைத்தும் கிறிஸ்துவுக்கே

அனைத்தும் கிறிஸ்துவுக்கே 

‘…மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்’ – (வெளிப்படுத்தின விசேஷம் 2:10).
பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் (Molokai Island) என்பது சிறு தீவு. தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள். தொழு நோயால் தாக்கப்பட்டோர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்ட கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை இழந்தனர். மக்களால் மட்டுமல்ல, கடவுளாலும் கைவிப்பட்டுவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யவும், நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பற்றவும் யாரும் முன்வரவில்லை. காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு.
1873-ம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடி புறப்பட்டான் ஒரு இளைஞன். அவர்தான் டாமியன் (Damien) ஆவார். பலர் அவரை தடுத்தனர். ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ, கொடுமையாய் இருந்தன. வியாதியின் கொடுமையால் நடை பிணங்களாக, உடலெல்லாம் புண்களாக, சீழ் வடிந்த நிலையில் மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் வாழ்வில் நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தார் டாமியன். அவர் அங்கு வந்த பிறகு அநேக மாற்றங்களை அந்த தீவில் அவர் கொண்டு வந்தார். ஏதோ குடிசையில் வாழ்ந்த மக்கள் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, வீடுகளில் வாழ ஆரம்பித்தனர். பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அநேக நன்மைகளை அந்த தீவு மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அவர்களின் புண்களை காயம் கட்டினார். மருந்துகளை கொடுத்து, ஜனங்களை ஆறுதல் படுத்தினார்.
ஒரு நாள் அவர் குளிக்க செல்லும்போது, தற்செயலாக கொதிக்கும் தண்ணீர் அவருடைய கால்களில் பட்டது. ஆனால் அவர் அதை உணரவில்லை. அதிர்ச்சியடைந்தார். ஓ, அவருக்கும் தொழுநோய் பற்றி கொண்டது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த டாமியன், அத்தீவு மக்களிடம், ‘நான் இப்போது உங்களில் ஒருவனாகி விட்டேன்’ என்று கூறினார். அவ்வார ஞாயிறு ஆராதனையில் ‘தொழுநோயாளிகளாகிய நம்மேல் தேவன் அன்பாயிருக்கிறார்’ என்று ஆண்டவரை புகழ்ந்தார். நோயின் கொடூரம் அவரை முற்றிலும் தாக்கவே தான் அளவு கடந்த அன்பு வைத்த மக்களை விட்டு தனது 49 ஆவது வயதில் மரித்தார். தனது அர்ப்பணிப்பில் இருந்து பின்னிட்டு பாராமல், தன் உடலையும், உயிரையும் தொழு நோயாளிகளுக்காய் கொடுத்த வாலிபன் டாமியனின் அர்ப்பணிப்பும், கர்த்தர் மேல் இருந்த அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, தேவனின் அன்பை வெளிப்படுத்திய விதமும், தங்களை கவனித்து பராமரிக்க யாருமே இல்லை என்று தவித்த மொலாக்காய் தீவின் மக்களுக்கு அவர்களையும் தேவன் நேசிக்கிறார் என்பதை எடுத்து காட்டின அந்த வாலிபனின் அர்ப்பணிப்பும் நிச்சயமாகவே மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டாகும்.
பிரியமானவர்களே, நம்முடைய அர்ப்பணிப்பு எத்தன்மையுடையது? நான் கிறிஸ்துவுக்காக என்னை அர்ப்பணித்தால் அவர் எனக்கு என்ன தருவார் என்றும், தங்கள் பெயர் புகழ் வரவேண்டும் என்றும் ஒவ்வொருவரும் வாழுகின்ற இந்த நாட்களில், என் உயிர், உடல் அனைத்தும் கிறிஸ்துவுக்கே, வாழ்ந்தாலும் கிறிஸ்துவுக்காய் வாழ்வேன், மரித்தாலும் கிறிஸ்துவுக்காய் மரிப்பேன் என்ற முழுமையான அர்ப்பணிப்பு நம் ஒவ்வொருவருக்கும் தேவை.
நம் வாலிபமும், நம் வாழ்வும் கிறிஸ்துவுக்கே என்று மாறட்டும். தங்களை கர்த்தருக்கென்று அர்ப்பணித்து உண்மையாய் வாழ்ந்த எத்தனையோ பரிசுத்தவான்கள் நம் நாட்டிலும் உண்டு. ஜார்கண்டு மாநிலத்தில் உள்ள மால்டோ இன மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய சென்ற, சகோதரர் பாட்ரிக் ஜோசுவாவின் மகன் தனது 27 ஆவது வயதில் மலேரியா காய்ச்சல் மூளையில் பாதித்து அவர் அங்கேயே மரித்தது நாம் அனைவரும் அறிந்ததே. நாம் மரிப்பதற்கு மாத்திரமல்ல, கர்த்தருக்காக வாழவும், அவருக்கு சாட்சியாக ஜீவிக்கவும் நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
ஒரு வாலிபன் எப்போதும் தன் பாஸ்டரிடம், நான் கர்த்தருக்காக மரிக்க வேண்டும் என்று சொல்லுவான். ஒரு நாள் பாஸ்டர் அவனிடம், ‘முதலில் நீ கர்த்தருக்காக வாழ கற்றுக்கொள், பின் மரிப்பதை குறித்து யோசிக்கலாம்’ என்று கூறினார். ஆம், நாம் வாழ்ந்தால் கர்த்தருக்காக, மரித்தாலும் கர்த்தருக்காக என்று ஜீவிக்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்பு நம் ஒவ்வொருவர் வாழ்விலும் காணப்பட கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தமென்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழு தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, உலக மக்கள் யார் யாருக்கோ தங்களை அர்ப்பணித்து, அதற்காக தங்கள் ஜீவனையும் கொடுக்க ஆயத்தமாக இருக்கும்போது, நாங்கள் எங்களுக்காக தம் ஜீவனையே கொடுத்த கிறிஸ்துவுக்காக எங்களையே அர்ப்பணிக்கிறோம். எங்கள் முழு தன்மைகள் ஆவல்கள் யாவும் உமக்கே சொந்தமென்று எங்களை உமக்கென்று அர்ப்பணிக்கிறோம். ஏற்று கொள்ளும். உமக்கு பிரியமான பாத்திரங்களாக வனைந்து, உமக்கென்று பயன்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.